ஊரடங்கினால் மக்கள் வீடுகளில் உள்ள நிலையில் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அட்டகாசமான ஆஃபரை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.
இந்தியாவில் செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் முன்னனியில் உள்ளன. வாடிக்கையாளர்களை ஈர்க்க ஜியோ நிறுவனம் ஜியோ சினிமா என்ற அப்ளிகேசனை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. சன் நெக்ஸ்ட், எராஸ் சினிமா போன்றவற்றோடு டை-அப் செய்து கொண்டுள்ள ஜியோ சினிமாவில் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் திரைப்படங்களும் பார்க்க கிடைக்கிறது. மேலும் ஜியோ டிவியில் லைவ் சேனல்களையும் பார்க்க முடியும்.
ஏர்டெல் நிறுவனமும் இதுபோன்றே ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மூலமாக இலவச திரைப்படங்கள், லைவ் டிவி வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ஜீ5 உடன் டை-அப் செய்துள்ளது. இதனால் ஏர்டெல் ரீசார்ஜ் செய்பவர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மட்டுமல்லாமல் ஜீ5 ஓடிடி தளத்திலும் ப்ரீமியம் படங்களையும், தொடர்களையும் இலவசமாக பார்க்கமுடியும்.
அதை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தனது அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் டிஸ்னி ப்ளஸுடன் ஹாட்ஸ்டார் இணைக்கப்பட்ட நிலையில் அதில் உள்ள சூப்பர் ஹீரோ படங்கள் உள்ளிட்டவற்றை காண விஐபி சந்தா என்ற ஸ்பெஷல் சந்தாவும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு 399 ரூபாய் செலுத்தினால் விஐபி படங்கள், தொடர்களை அதில் பார்க்கலாம், தற்போது அந்த விஐபி சந்தாவையே தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்க உள்ளது ஜியோ நிறுவனம்.
டிஸ்னி ப்ளஸ் இணைக்கப்பட்ட பிறகு கடந்த சில மாதங்களில் மட்டும் ஹாட்ஸ்டாரை பல லட்சம் பேர் விஐபி சந்தா கட்டியுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மேலும் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.