எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் இருந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதற்கு அந்த அணி எப்போதுமே பேட்டிங், பவுலிங் என இரண்டு துறைகளிலும் ஒரு சமநிலையைப் பேணாததேக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் இந்த முறை ஐபிஎல் தொடரை மிகச்சிறப்பாக தொடங்கியுள்ளது பெங்களூரு. முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் ஆர் சி பி அணியின் ஐகான்களில் ஒருவரான, 18 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடி வரும் கோலி அந்த அணியுடனான உறவு குறித்து பேசியுள்ளார். அதில் “முதல் மூன்று வருடங்களில் ஆர் சி பி அணியில் எனக்கு முன்வரிசையில் விளையாட சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. என்னைப் பின் வரிசையில்தான் இறக்கினார்கள். அதனால் என்னால் அந்த வருடங்களில் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் 2011 ஆம் ஆண்டுதான் என்னை நிரந்தரமாக மூன்றாவது இடத்தில் இறக்கினார்கள். அதில் இருந்துதான் என்னுடைய ஐபிஎல் பயணம் தொடங்கியது எனலாம்” எனக் கூறியுள்ளார்.