அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

vinoth
செவ்வாய், 11 மார்ச் 2025 (16:37 IST)
சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. ஆனால் சமீபத்தில் நடந்த மெஹா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை.

அதே போல சமீபகாலமாக போட்டிகளிலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் அரிதாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு அவருக்கு போதுமான வாய்ப்புகள் அணியில் கிடைக்கவில்லை. டி 20 உலகக் கோப்பை தொடரில் கூட அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பெற்ற அவர் மிகச்சிறப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு மிக முக்கியமானக் காரணிகளில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவர். இதையடுத்து அவர் தற்போது மீண்டும் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இணையவுள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பல நிராகரிப்புகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து பேசியுள்ள ஸ்ரேயாஸ் “சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் போது எனக்கு மிகவும் தன்னம்பிக்கை இருந்தது. அவமானங்கள் மற்றும் தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் நம்பிக்கைதான் பல நேரங்களில் உதவும்.  அதுதான் நமக்கு சிறந்த ஆசிரியர்.  கடினமான காலங்களில் இருந்து நாம்தான் நம்மை மீட்க முடியும். வேறு யாரும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்