2024 ஆம் ஆண்டு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலிக்கு ஒரு சோகமான ஆண்டாக உள்ளது. இந்த ஆண்டில் அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 25 ரன்கள்தான் சேர்த்து வருகிறார். விரைவில் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையளிக்கிறது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் எப்போதுமே கோலி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து வந்துள்ளார். அதனால் அவர் தன்னுடைய ஃபார்மை மீட்டுக்கொள்ள இந்த தொடர் உதவும் எனத்தெரிகிறது. தற்போது கோலி உள்ளிட்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபகாலமாக தடுமாறி வரும் கோலியின் தவறுகள் குறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளர். அதில் “பந்தின் நீளத்தைக் கணிப்பதில் கோலி நிறைய தவறுகளை செய்கிறார். வேகப்பந்தோ அல்லது சுழல்பந்தோ அவரின் கணிக்கும் திறன் முன்பு போல சரியாக இல்லை. இந்தியாவிலேயே சுழல்பந்தை சிறப்பாக எதிர்கொள்ளும் வீரர்களில் அவரும் ஒருவர். நிறைய பின்கால் ஷாட்களை அவர் ஆடுவார். ஆனால் இப்போது அவரிடம் முன்கால் ஆட்டம்தான் வருகிறது. அதனால்தான் அவரால் முன்புபோல ரன்களை சேர்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.