ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் சில தினங்களுக்கு நடந்து முடிந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஸ்டார்க் 24.5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த ஒரு வீரருக்கும் இவ்வளவு தொகைக் கொடுக்கப்பட்டதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் தோனி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பிய ரசிகர் “நான் ஆர் சி பி அணியின் ரசிகன். 16 ஆண்டுகள் விளையாடியும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நீங்கள் ஐந்து முறை கோப்பையை வென்று விட்டீர்கள். நீங்கள் ஆர் சி பி அணிக்கு வந்து அவர்கள் கோப்பையை வெல்ல உதவி செய்யக் கூடாது” எனக் கேட்க, சுற்றியிருந்தவர்கள் அனைவரும் இதைக் கேட்டு சிரித்தனர்.
அந்த ரசிகருக்கு பதிலளித்த தோனி “ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளுமே மிகச்சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆர் சி பி அணி நல்ல அணிதான். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை போட்டியின் போது நாம் நினைப்பது போல எல்லாமே நடக்காது. நான் இப்போது ஆர் சி பி அணிக்கு வந்துவிட்டால் எங்கள் அணியின் ரசிகர்கள் எப்படி வருத்தப்படுவார்கள். என் அணியை பற்றி நினைக்கவே எனக்கு நேரம் போதவில்லை. இப்போதைக்கு நான் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துகளை மட்டுமே சொல்லிக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.