இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் 10,000 ரன்களை குவித்து சாதனை படைப்பாரா? என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்திய அணி, தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை இந்தியா இழந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்றைய போட்டியில் தோனி, 46 ரன்கள் எடுத்தால் 10,000 ரன்கள் குவித்த 4 வது வீரர் என்ற பெருமையை பெருவார். 36 வயதான தோனி, 316 ஒருநாள் போட்டியில் 271 இன்னிங்சில் விளையாடி 9,954 ரன் எடுத்துள்ளார். இவரது சராசரி 51.57 ஆகும்.
அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார். 10 சதமும், 67 அரை சதமும் அடித்துள்ளார். அதோடு சர்வதேச அளவில் 10,000 ரன்கள் கடந்த 12வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
அதேபோல், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 6 ரன் எடுத்தால் அசாருதீனை முந்துவார். அசாருதீன் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 1109 ரன் எடுத்து உள்ளார். கோலி 24 ஆட்டத்தில் 1104 ரன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.