இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டெஸ்ட் போட்டிக்கே உரிய அம்சத்தோடு நடந்து சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 358 ரன்கள் சேர்க்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் சேர்த்தது.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் இரண்டு விக்கெட்களையும் அடுத்தடுத்து இழந்து அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் அதன் பின்னர் கே எல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை மீட்டெடுத்தனர். இருவரும் முறையே 90 மற்றும் 103 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து வந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் மிகச்சிறப்பாக ஆட்டத்தை எடுத்து சென்றனர். அவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் முறையே 107 மற்றும் 101 ரன்கள் சேர்க்க இந்திய அணி 425 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த போது ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என இரு அணிகளும் அறிவித்ததால் போட்டி டிராவில் முடிந்தது.
இதற்கிடையில் போட்டியின் கடைசி மணிநேரத்தில் இன்னும் 15 ஓவர்கள் வீசப்பட இருந்த நிலையில் ஜடேஜாவிடம் வந்து பென் ஸ்டோக்ஸ் போட்டியை இதோடு முடித்துக்கொள்ளலாம் எனக் கேட்டார். ஆனால் அப்போது ஜடேஜா மற்றும் வாஷிங்டன் ஆகிய இருவரும் முறையே 89 மற்றும் 80 ரன்களில் இருந்ததால் சதமடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அதனால் போட்டியை முடித்துக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். இது சம்மந்தமாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருக்கும் இடையே நடந்த ஸ்டம்ப் மைக் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.