இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

vinoth
புதன், 22 மே 2024 (07:20 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

உலகக் கோப்பை தொடரோடு டிராவிட்டின் பதவி காலம் முடிந்தாலும் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. ஜூன் மாதத்தோடு அவர் பணிக்காலம் முடிய இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங், கவுதம் கம்பீர் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். இதுபற்றி பேசியுள்ள அவர் “பயிற்சியாளர் பதவி என்பது வீரர்களுக்கு எப்படி ஷாட் ஆடவேண்டும் என சொல்லித் தருவதில்லை. அதெல்லாம் அவர்களுக்கு நன்றாக தெரியும். பயிற்சியாளர் பதவி என்பது மேலாண்மை சம்மந்தப்பட்டது. கிரிக்கெட் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதற்கு திருப்பிக் கொடுக்க வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்