அண்மைய நாட்களாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் கடந்த வாரம் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
ஏனென்றால் கோலியால் இன்னும் நான்கு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்று விட்டதால் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இதன் காரணமாக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் கோலி இல்லாமல் இருப்பது இங்கிலாந்து ரசிகர்களுக்கே உவப்பானதாக அமையவில்லை.
இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “கோலி ஓய்வு பற்றி அறிவித்ததும் நான் அவருக்கு மெஸேஜ் அனுப்பினேன். அதில் “ இந்தமுறை நீங்கள் இல்லாமல், இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது அவமானகரமானதாக இருக்கும்.” என அனுப்பினேன். அவர் இல்லாததால் இந்திய அணி அவரின் பிடிவாதக் குணத்தை இழக்கும்” எனக் கூறியுள்ளார்.