தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் நாடு தாண்டியும் உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். அதற்குக் காரணம் அவரின் வித்தியாசமான ஷாட்களும் அதிரடியான ஆட்டமும்தான். அவர் தலைமையில் 2015 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
இதற்கிடையில் அவர் தலைமையேற்று வழிநடத்திய தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணி, லெஜண்ட்ஸ் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் டிவில்லியர்ஸ் தான் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்தபோது என்னமாதிரியான அதிரடி ஆட்டத்தை ஆடினாரோ அதையே வெளிப்படுத்தினார். இதனால் அவர் மீண்டும் ஐபிஎல் தொடரிலாவது விளையாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஆர் சி பி அணியில் எதாவது ஒரு பொறுப்பில் இணைவது குறித்துப் பேசியுள்ளார் அவர். அதில் “என் இதயம் எப்போதும் RCB அணியோடு உள்ளது. நான் மீண்டும் அந்த அணியில் ஏதேனும் ஒரு பாத்திரத்தில் இணையலாம். அங்கு எனக்கு எதாவது வேலைகள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் என்னை அழைக்கும் பட்சத்தில், எனக்கு நேரம் சரியாக இருந்தால் நான் கண்டிப்பாக இணைவேன்” எனக் கூறியுள்ளார்.