மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி துப்பல வெங்கட ரமணா நேற்று அதிகாரப் பூர்வமாக ஓய்வுபெற்றார். தனது கடைசி பணிநாளில், உச்சநீதிமன்றம் மீதான ஆழ்ந்த மன வருத்தத்தை வெளிப்படுத்தி, தனக்கான வேலை இட மாற்றம் குறித்த துயரத்தை பகிர்ந்தார்.
இந்தூர் நகரில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய திரு வெங்கட ரமணா கூறியதாவது: “நான் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் இருந்து மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டேன். இதற்கான காரணம் என்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அப்போது கொரோனா பரவல் காரணமாக என் மனைவி மூளை உள்ளிட்ட உடல் பிரச்சனைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதால், நான் இரண்டு முறை உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பணியிட மாற்றம் கோரியிருந்தேன். ஆனால் என் வேண்டுகோளுக்கு எந்த பதிலும் வரவில்லை; அது மறுக்கப்பட்டதா எனவும் தெரியவில்லை.”
“என்னை துன்புறுத்தும் நோக்கத்துடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது. அது என்னை ஆழமான மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியது. கடவுள் இதை மறக்கமாட்டார், மன்னிக்கமாட்டார். அவர்களும் அதே வேதனையை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்,” எனும் அவர், தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.