முன்னிலையில் இந்திய அணி: 2 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2017 (17:04 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் நான்காம் நாள் முடிவில் இந்திய அணி 129 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது.


 
 
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து பழிதீர்த்துக்கொண்டது. இதனையடுத்து தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் வரிந்துகட்டிக்கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ராஞ்சியில் களமிறங்கியது.
 
முதல்லில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 451 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நான்காவது நாளான இன்று புஜாரா மற்றும் சஹாவின் பொறுப்பான ஆட்டத்தால் 603 ரன்கள் குவித்தது. புஜாரா 202 ரன்களும், சஹா 117 ரன்களும் குவித்து ஆஸ்திரேலிய அணியை திணறடித்தனர்.
 
பின்னர் களமிறங்கிய ரவீந்த்ர ஜடேஜாவும் அதிரடியாக அரை சதம் அடிக்க இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 152 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. ஜடேஜாவின் பந்தில் வார்னர் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற இறுதி நேர ஆட்டக்காரராக நாதன் லயன் களமிறங்கினார், அவரையும் ஜடேஜா அவுட் ஆக்க நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஆஸ்திரேலிய அணி 23 ரன்களுக்கு 2 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. இந்திய அணி 129 ரன்கள் தற்போது ஆஸ்திரேலியாவை விட முன்னிலையில் உள்ளது.
 
ஐந்தாம் நாளான நாளைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அடுத்த கட்டுரையில்