இலங்கையில் பரவும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் அறிகுறிகள் என்ன? – இதுவரை 14 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (14:29 IST)
இலங்கையில் பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சபரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவரான கபில கன்னங்கர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவானை பகுதியில் அண்மை காலமாக இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்றானது கடந்த ஏப்ரல் மாதம் முதல் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஜுன் மாதத்தின் இதுவரையான காலம் வரை அந்த தொகையானது 103ஆக அதிகரித்துள்ளது என கபில கன்னங்கர தெரிவிக்கின்றார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவிலானோர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

75 பெண்களும், 33 ஆண்களும், 12 சிறார்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 11 பெண்களும், 3 ஆண்களும் அடங்குவர்.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையிலான அனைத்து வகை மருந்துகள் தங்களிடம் இருப்பதாக சபரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவர் கபில கன்னங்கர தெரிவிக்கின்றார்.
'இன்ஃப்ளூயன்சா ஏ' என உறுதி - அறிகுறிகள் என்ன?

வைரஸ் தொற்று பரவும் பகுதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், இது 'இன்ஃப்ளூயன்சா ஏ' என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.

''இந்த வைரஸ் தொற்று சாதாரண ஒருவருக்கு ஏற்படும் பட்சத்தில், அது சாதாரணமாக காய்ச்சல், தடிமல், இருமல், உடல்வலி, தொண்டை வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். உடல் ஆரோக்கியமான ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில், அது 3 அல்லது 4 நாட்களில் குணமடைந்து விடும். எனினும், கர்ப்பிணித்தாய்மார்கள், வயோதிபர்கள், 2 வயதுக்கு குறைவான குழந்தைகள், தொற்றா நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்றும் பட்சத்தில், அது நியூமோனியா நிலைமைக்கு கொண்டு செல்லும் சாத்தியம் காணப்படுகின்றது" என விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ குறிப்பிடுகின்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்