பாஜக, திமுக, திரிணமூல் காங்கிரஸ் என பல்வேறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு பல தேர்தல்களில் வெற்றிகரமான வியூகங்களை வகுத்துக்கொடுத்த பிரஷாந்த் கிஷோர், தற்போது பிகாரில் 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றார். அன்று முதல், தவெகவின் சிறப்பு ஆலோசகராக அவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், பிகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அத்தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பிலிருந்து சில காலம் விலகுவதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டமன்ற தேர்தல் பணிகள் முடிந்த பின்னரே, அதாவது நவம்பர் மாதத்திற்கு பிறகே, தவெகவின் ஆலோசகராக மீண்டும் செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். பிரஷாந்த் கிஷோரின் இந்த தற்காலிக விலகல், தவெகவின் எதிர்கால செயல்பாடுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.