யுக்ரேன் பதற்றம்: ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (12:27 IST)
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பாவிற்கு இந்த வாரம் கூடுதல் படைகளை அனுப்ப உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.


வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக்கிலிருந்து போலந்து நாட்டிற்கும், ஜெர்மனி நாட்டிற்கும் சுமார் 2,000 படைகள் அனுப்பப்படும். மேலும், ஜெர்மனியில் ஏற்கனவே உள்ள 1,000 படைகள் ருமேனியாவுக்குச் செல்வார்கள்.

மாஸ்கோ படையெடுப்பதற்கான திட்டத்தை மறுத்துள்ளது, ஆனால் , யுக்ரேன் எல்லைகளுக்கு அருகில் ஒரு லட்சம் படைகளை நிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்காவின் இந்த படை விரிவாக்கம் 'அழிவை உண்டாக்கக்கூடியது' என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

யுக்ரேனின் தெற்கு க்ரைமியா தீபகற்பத்தை ரஷ்யா இணைத்து, கிழக்கு டான்பாஸ் பகுதியில் பெரும் கிளர்ச்சிக்கு ஆதரவளித்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, இத்தகைய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

'மின்ஸ்க்' ஒப்பந்ததை யுக்ரேன் அரசு செயல்படுத்தத் தவறிவிட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இது கிழக்கில் அமைதியை மீட்டெடுப்பதற்கான சர்வதேச ஒப்பந்தம். அப்பிரதேசத்தின் பல பகுதிகளைக் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர். மேலும், 2014ஆம் ஆண்டு முதல், அங்கு குறைந்தது 14 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

யுக்ரேனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைகள் அங்கு சண்டையிடாது. ஆனால், அமெரிக்க நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

அமெரிக்கா கடந்த மாதம் தயார் நிலையில் வைத்துள்ள 8,500 படைகளுடன் இந்த கூடுதல் படைகள் இணைந்துள்ளன. இது ஏற்கனவே தேவைப்பட்டால் ஐரோப்பாவிற்கு அனுப்ப தயார் நிலையில் இருந்த படைகள் என பென்டகன் கூறியுள்ளது.

"நேட்டோ அமெரிக்காவிற்கும், அதன் நட்பு நாடுகளுக்கும் மிகவும் முக்கியம் என்று புதினுக்கும், உலகிற்கும் வலுவாக உணர்த்துவது அவசியம்", என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதைப் பற்றிய கேள்விக்கு, "புதின் யுக்ரேன் மீது படையெடுப்பதற்கான முடிவை எடுத்ததாக நாங்கள் இன்னும் நம்பவில்லை." என்று பதிலளித்தார்.

'ஐரோப்பிய செய்தி நிறுவனத்திற்கு கசிந்த' அமெரிக்க முன்மொழிவு உண்மையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயினின் எல் பைய்ஸ் நாளிதழில், அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்தும், யுக்ரேன் மீதான பதற்றங்களை குறைத்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்தும் ரஷ்யாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பைப் பற்றி வெளியான ஒரு செய்தியை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க படைகள் நிறுத்திவைப்பு ஓர் 'அழிவு உண்டாக்கும்' நடவடிக்கை என்று ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோ குறிப்பிடுகிறார்.

இது பதற்றத்தை அதிகப்படுத்துவதுடன், அரசியல் தீர்வுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்றார் அவர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் புதன்கிழமை தொலைபேசியில் யுக்ரேன் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

ஜான்சன் புதினிடம், 'அனைத்து ஐரோப்பிய ஜனநாயக நாடுகளுக்கும் நேட்டோ உறுப்பினர் ஆக விருப்பப்பட உரிமை உண்டு' என்று பிரிட்டனின் பிரதமர் அலுவலக அறிக்கை கூறியுள்ளது என்றார்.

ஆனால் இந்த பாதுகாப்புக் கூட்டணியில் யுக்ரேன் இணைவதை ரஷ்யா எதிர்க்கிறது.

மின்ஸ்க் அமைதி ஒப்பந்தங்களை யுக்ரேன் 'தொடர்ந்து அழிப்பது' குறித்தும், ரஷ்யாவின் நியாயமான கவலைகளுக்கு சரியான முறையில் பதிலளிக்க நேட்டோவின் தயக்கம் குறித்தும் புதின் குறிப்பிட்டார் என ரஷ்யா ஓர் அறிக்கையில் (ரஷ்ய மொழியில்) தெரிவித்துள்ளது.

யுக்ரேனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க மறைமுகமாக இந்த விவகாரத்தை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்றும் புதின் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்