5,000 ஆண்டுகள் பழமையான மதுபான ஆலை எகிப்தில் கண்டுபிடிப்பு

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:35 IST)
எகிப்தில் உள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையான மதுபான வடிப்பாலையைக் கண்டறிந்துள்ளனர். இது கிட்டத்தட்ட உலகின் பழமையான பீர் ரக மதுபான வடிப்பாலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எகிப்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, எகிப்தின் அபைடாஸில் இருக்கும் இந்த பழமையான மதுபான வடிப்பாலையை கண்டுபிடித்தார்கள். இந்த அபைடாஸ் எனும் இடம், பாலைவனத்தில் இறந்தவர்களை புதைக்கும் இடமாகும்.
 
பீரை தயாரிக்க, தானியங்கள் மற்றும் நீர் கலந்த கலவையைப் பயன்படுத்தினார்கள். அந்த கலவையை சூடுபடுத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும், சுமார் 40 பாத்திர பண்டங்களைக் கொண்ட பல அலகுகளை இந்த கூட்டுக் குழு கண்டுபிடித்துள்ளது.
 
சுப்ரீம் கவுன்சில் ஆஃப் ஆன்டிக்ஸ் என்கிற அமைப்பின் கருத்துப்படி, இந்த பீர் வடிப்பாலை அரசர் நார்மரின் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று  நம்பப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி, உலகிலேயே அதிக அளவில் பீர் ரக மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, மிகப் பழமையான வடிப்பாலையாக இது இருக்கலாம் என  நம்புவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
நார்மர் அரசர் 5,000 ஆண்டுகளுக்கு முன் இப்போதைய எகிப்து நாட்டில் ஆட்சி செய்தார். அவர் தான் எகிப்தை ஒருங்கிணைத்து முதல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் எனக் கருதப்படுகிறது.
 
இந்த பீர் வடிப்பாலையில் 8 பெரிய பகுதிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளம் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் சுமாராக 40 மண் பாத்திர பண்டங்கள் வரிசையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன என எகிப்தின் சுப்ரீம் கவுன்சில் ஆஃப் ஆன்டிக்ஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தஃபா வசிரி  கூறியுள்ளார்.
 
தானியங்கள் மற்றும் தண்ணீர் கலந்த கலவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அந்த கலவை மட்பாண்டங்களில் சூடுபடுத்தப்பட்டது என்கிறார்  அவர்.
 
"எகிப்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த பின் செய்யப்படும் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பீரை விநியோகிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு,  இந்த வடிப்பாலை பாலைவனத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்யும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம்" என இந்த ஆராய்ச்சியின் துணைத் தலைவர் மேத்யூ ஆடாம்ஸை மேற்கோள் காட்டி, எகிப்தின் சுற்றுலா துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
 
பீர் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒரே நேரத்தில் 22,400 லிட்டர் பீர் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
 
"பலிகொடுக்கும் சடங்குகளில் பீர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள், இந்த இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன"  என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எகிப்தின் மிகவும் பழமையான நகரங்களில் அபைடாஸ் நகரமும் ஒன்று. இந்த நகரத்தில் எண்ணிலடங்கா பழங்கால கல்லறைகள் மற்றும் கோயில்கள்  இருக்கின்றன.
 
எகிப்தில் சொஹாக் என்கிற மாகாணத்தின் தெற்குப் பகுதியில் தான் அபைடாஸ் இருக்கிறது.
 
இந்த மாத தொடக்கத்தில், அலெக்சாண்ட்ரியாவுக்கு அருகில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 2,000 ஆண்டு பழமையான தங்க நாக்குகளைக் கொண்ட மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள 'தபோசிரிஸ் மேக்னா' கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் எகிப்திய - டொமினிகன் குழு ஒன்று, கிரேக்க மற்றும் ரோமானிய காலங்களில் பிரபலமாக இருந்த பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்ட 16 மம்மிகளை  கண்டுபிடித்தது.
 
கல்லறைகளுக்குள் மோசமான முறையில் பாதுகாக்கப்பட்ட மம்மிகள் இருந்தன.
 
இறப்புக்கு பிறகான வாழ்க்கையில் ஒசைரிஸ் கடவுளின் நீதிமன்றத்தில் பேசுவதற்காக நாக்குகளின் வடிவிலான தங்கப் படலம் போன்ற தாயத்துக்கள் சடலத்துடன்  புதைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்