தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (17:02 IST)
தமிழ்நாட்டில் 13ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க அம்மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில் (கிபி 1118 - 1136) கட்டப்பட்ட கோயிலொன்று உள்ளது. பாழடைந்த அந்த சிவன் கோயில் ஒன்றை புனரமைக்கும்போது கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது.

அந்த கல்வெட்டினை, முன்னாள் வங்கி அதிகாரியான வேலூரைச் சார்ந்த கல்யாணராமன் என்பவரும், ஊர்மக்களும் எடுத்து திருப்பணி செய்யப்பெற்ற அக்கோயிலின் மகாமண்டபத்தின் வடபுறம் தரையில் நட்டு காப்பாற்றி வந்துள்ளனர்.

​அக்கல்வெட்டை அண்மையில் கல்வெட்டு ஆய்வாளரான முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் படியெடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

என்ன இருக்கிறது அந்தக் கல்வெட்டில்?

அந்தக் காலக்கட்டத்தில் நிலவிய சாதிய பிரிவுகள் குறித்து அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விவரிக்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

இதனை விளக்கி அவர் அனுப்பி உள்ள மின்னஞ்சலில், "பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தமிழ்நாட்டில் இருந்த சாதியினர் எல்லாம் தங்களை இடங்கை, வலங்கை எனப் பிரித்துக்கொண்டனர். இம்முறை சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், நாயக்கர் போன்ற அரசர்கள் காலத்தில் தொடர்ந்து கி.பி. 1900 வரை இருந்துள்ளது. இதனால் இரு பிரிவினரிடையே உரிமைகள் பற்றியும், உயர்வு தாழ்வு பற்றியும் அடிக்கடி பூசல்களும் மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இவற்றை பிற்கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும் எடுத்துக்கூறுகின்றன. ஒரு காலகட்டத்தில் இடங்கை பிரிவில் 98 ஜாதிகளும் வலங்கை பிரிவில் 98 ஜாதிகளும் இருந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் இடங்கை ஜாதிகள் 6 ஆகவும் வலங்கைப் பிரிவில் 30 ஜாதிகளும் இருந்துள்ளன.

​ஆனால், திருமங்கலத்தில் உள்ள கல்வெட்டோ கோச்சடையவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவரின் பதினான்காம் ஆட்சியாண்டில் (13ஆம் நூற்றாண்டில்) சித்திரை மாதத்தில் ஒருநாள் விருதராஜ பயங்கர வளநாட்டைச் சார்ந்த குறுக்கை நாடு, காளி நாடு, விளத்தூர் நாடு, மாந்துறை நாடு, திருமங்கலநாடு எனப்பெறும் இந்த ஐந்து நாட்டு இடங்கை வலங்கைப் பிரிவினராகிய சாதியினர் எல்லாம் திருமங்கலம் கோயிலில் கூடி இனி சந்திரன் சூரியன் உள்ள அளவும் தங்களுக்குள் இடங்கை வலங்கைப் பிரிவுகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும், யாரேனும் கொண்டாடுவார்களாயின் அவர்கள் ஐந்து நாட்டிற்கும் அநியாயம் செய்தவர்களாகக் கருதப்படுவர் என்றும் முடிவு எடுத்து அம்முடிவினை அரசனின் ஆணைபெற்று இங்கு கல்வெட்டாகப் பொறித்துள்ளனர். சோழர்களின் ஆட்சி முடிவு பெற்ற பின்பு சோழநாடு பாண்டியர் வசம் இருந்தது. அப்போது இக்கல்வெட்டு பொறிக்கப்பெற்றதாகும். சாதி மோதல்களைத் தவிர்க்க கோயிலில் வைக்கப்பெற்ற இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்புடைய ஒன்றாகும்," என்று விவரிக்கிறார்.

இடங்கை- வலங்கை விளக்கம்

இடங்கை வலங்கை பிரிவு என்பது அப்போது உறுதியாக வழங்கப்பட்ட பிரிவுகள் இல்லை. இந்தப் பிரிவினை எப்போது ஏற்பட்டது? எவ்வாறு தோன்றின? என்பவை பற்றி திட்ட வட்டமாகக் கூறுவதற்கும் இல்லை. ஆனால், இவ்வாறான பிரிவினை இருந்திருக்கிறது என்பதை கல்வெட்டுகளாலும், செப்பேடுகளாலும் அறிகிறோம் என்கிறார் வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார்.

நிலவுடைமை வகுப்பினரும் அவர்கள் தங்களோடு இணைத்துக்கொண்ட சாதியினரும் வலங்கைப் பிரிவினர் என்றும், வணிகக் குழுவினரும் அவர்கள் தங்களோடு சேர்த்துக்கொண்ட சாதியினரும் இடங்கைப் பிரிவினர் என்றும் தமது கட்டுரை ஒன்றில் விவரிக்கிறார் வரலாற்று ஆய்வாளர் நா.வானமாமலை.

மேலும் அவர், "வலங்கைப் பிரிவினர் கை வலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களோடு சேர்ந்துகொண்டு இடங்கைப் பிரிவினரை அடக்குவான். இடங்கைப் பிரிவினர் கைவலுத்திருக்கும்போது, மன்னன் அவர்களுக்குச் சில சலுகைகளை அளிப்பான்," என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்