கொரோனா வைரஸால் மருத்துவர் மரணம்: "உங்க கையால் குழி தோண்டி, யார் உடலையாவது புதைத்திருக்கிறீர்களா?"

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (10:34 IST)
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

"உங்க கையால யார் உடலையாவது புதைத்திருக்கிறீர்களா? நான் செய்தேன். என் இரு கைகளால் மண்ணை அள்ளிப்போட்டேன்," என உடைந்துபோன குரலில் பேசுகிறார் மருத்துவர் பிரதீப் குமார்.

சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஏப்ரல் மாதத் துவக்கத்தில் கொரோனா அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அந்தத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெளிவில்லை. அவர் நரம்பியல் நிபுணர் என்பதால் வழக்கமான காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு அவர் சிகிச்சை அளிப்பதில்லை.

சமீப காலத்தில் அவர் வெளிநாடு ஏதும் செல்லாத நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் அவர் கொல்கத்தாவுக்குச் சென்றுவந்தார். அது மட்டுமே சமீபத்தில் சைமன் மேற்கொண்ட பயணம். சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது உடல் அன்று இரவு 9 மணிக்கு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

'எப்படி அச்சம் கொள்ளாமல் இருக்க முடியும்' - மருத்துவர்களின் துயர்மிகு அனுபவம்

முறைப்படி அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள டிபி சத்திரம் கல்லறைத் தோட்டத்தில்தான் அடக்கம்செய்யப்பட வேண்டும். "இது தொடர்பாக நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே, டிபி சந்திரம் கல்லறைத் தோட்டத்திற்கு முன்பாக ஆட்கள் குவிந்துவிட்டார்கள். யார் அவர்களுக்குச் சொன்னது, என்ன சொன்னார்கள், எப்படி அந்த நேரத்தில் அவ்வளவு பேர் திரண்டார்கள் என்றே தெரியவில்லை" என்கிறார் பிரதீப். அந்த நேரத்திலேயே 100க்கும் மேற்பட்டவர்கள் கல்லறை அருகில் காத்திருந்தார்கள்.

இதற்குப் பிறகு, அண்ணாநகர் பகுதியில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் சைமனின் உடலைப் புதைக்க முடிவுசெய்யப்பட்டது. சைமனின் உடலுடன் அவரது மனைவி, மகன், பிரதீப் உள்ளிட்ட சில மருத்துவர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் இருந்தனர்.

"12 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் என்பதால் ஜேசிபியை வைத்து அப்போதுதான் தோண்ட ஆரம்பித்திருந்தோம். 15 நிமிடம்கூட ஆகியிருக்காது. சுமார் 50 -60 பேர் கையில் கற்களையும் கட்டைகளையும் வைத்துக்கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள். எங்களுடன் இருந்த சுகாதார ஆய்வாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் என எல்லோருமே தாக்கப்பட்டோம்" என கண்ணீருடன் நினைவுகூர்கிறார் பிரதீப்.

இந்தத் தாக்குதலில் அவரது உடலை ஏற்றிவந்த ஆம்புலன்சின் நொறுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. சைமனின் குடும்பத்தினரும் தாக்கப்பட்டார்கள். தாக்குதலைத் தாங்காமல் அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்கள் வேறு வழியில்லாமல் அந்த இடத்தைவிட்டு ஓடினார்கள்.
மருத்துவர் சைமனின் உடலைவிட்டுவிட்டு, எல்லோருமே ஓடிவிட்ட நிலையில் டாக்டர் பிரதீப் ஆம்புலன்ஸ் டிரைவர்களின் உதவியுடன் மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ஆனால், ஓட்டுநர்களுக்கு ரத்தகாயம் ஏற்பட்டிருந்ததால் அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். பிறகு சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகளைத் தொடர்புகொண்ட பிறகு, காவல்துறையினரும் உதவிக்கு வந்தனர்.

"என் கையாலேயே குழியைத் தோண்டி சைமனின் உடலைப் புதைத்தேன். உலகில் யாருக்குமே இந்த நிலை வரக்கூடாது" என்கிறார் பிரதீப்

இந்த சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, நுண்ணுயிரியலாளரான மருத்துவர் பாக்யராஜ் வெளியிட்டிருக்கும் வீடியோ பலரையும் உலுக்கியிருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களின் இறுதிச் சடங்கின்போது பிரச்சனை நடப்பது சென்னையில் இது முதல் தடவையல்ல. ஏற்கனவே நெல்லூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் இதேபோல வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மட்டுமே உடலை அடக்கம் செய்யச் சென்றனர். அவரது உடலை அம்பத்தூர் மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் கூடி சடலத்தை எடுத்துவந்தவர்களை சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். இதனால், அவர்கள் அந்த சடலத்தை அங்கேயே போட்டுவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்