கொழும்பு அருகே கப்பலில் பரவிய தீ: சாம்பல் மேடாய் காட்சியளிக்கும் கடற்கரை

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (13:07 IST)
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், கப்பலில் இருந்து தொடர்ந்தும் புகை வெளியேறி வருகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து, கடந்த 20ம் தேதி இந்த கப்பலில் தீ பற்றியது.

இந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவை பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தன.

எனினும், கடந்த 25ம் திகதி இந்த கப்பலில் பாரிய வெடிப்பு சம்பவமொன்று ஏற்பட்டது.

இதனால் கப்பலில் பணியாற்றிய 2 இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, கப்பலில் இருந்த 25 பணியாளர்களை இலங்கை கடற்படை மீட்டிருந்தது.

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து, கப்பலில் இருந்த கொள்கலன்கள் கடலில் வீழ்ந்தன.

குறித்த கொள்கலன்களில் இருந்த வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் கலந்ததாக தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகமையின் (நாரா) பிரதான விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவிக்கின்றார்.

கப்பலிலிருந்து கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள்கள் நீர்கொழும்பு முதல் பாணந்துரை வரையான கடல் பிராந்தியத்தில் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த நிலையில், கடலில் கலந்த பிளாஸ்டிக் மற்றும் வேதிப் பொருள்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடற்படை, சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட தரப்பினரினால் கடற்கரை பகுதிகள் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.

பெருமளவிலான பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் கரையொதுங்கி வருவதை காண முடிகிறது.

அதேபோன்று, கறுப்பு நிறத்திலான வேதிப் பொருள்களும் கடலில் மிதப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த கப்பலிலிருந்து கடலில் கலந்த வேதிப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருட்களினால் எதிர்காலத்தில் பாதிப்புக்கள் ஏற்படும் என விஞ்ஞானி கணபதிபிள்ளை அருளானந்தன் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்