நினைவுகளை கூடுவிட்டு கூடு பாய வைக்கும் புதிய ஆய்வு

Webdunia
புதன், 16 மே 2018 (15:07 IST)
கூடுவிட்டு கூடுபாய்வது குறித்து பல திரைப்படங்கள் இதுவரை வந்துள்ளன. அதாவது ஒரு மனிதனின் நினைவுகளை சேமித்து இன்னொரு மனிதனின் மூளையில் பதிவேற்றுவது. ஹாலிவுட்டிலும் இப்படியான பல திரைப்படங்கள் வந்துள்ளன; பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளன.

இதுநாள் வரை  வெறும் புனைவாக, சினிமாவாக மட்டும் இருந்த இந்த கருத்தாக்கம் இப்போது நிஜமாகி உள்ளது. ஆம், ஓர் உயிரினத்தின் நினைவுகளை சேமித்து இன்னொருவர்  மீது பதிந்துள்ளது நவீன அறிவியல்.
 
நத்தை நினைவுகள்
 
நத்தையின் நினைவுகளை ஆர்.என்.ஏ என்று அழைக்கப்படும் மரபணு தகவல்களாக மாற்றி ஒரு நத்தையிலிருந்து இன்னொரு நத்தைக்கு மாற்றி உள்ளனர்  அறிவியலாளர்கள். `இநியூரோ` சஞ்சிகையில் பிரசுரமான இந்த ஆய்வானது நினைவுகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய வெளியை திறந்துள்ளது.
 
அப்ளைசியா கலிஃபோர்னிகா என்று அழைக்கப்படும் கடல் நத்தை வகையை சேர்ந்த நத்தையின் வால் பகுதியில் மிதமான மின் அதிர்வினை கொடுத்து இந்த  ஆய்வினை நிகழ்த்தி உள்ளனர் ஆய்வாளர்கள். நத்தைக்கு மின் அதிர்வு செலுத்தப்பட்டதும், தன்னை தற்காத்து கொள்வதற்காக அந்த நத்தை செயலாற்றியது.
 
ஆய்வாளர்கள் மின் அதிர்வு செலுத்தப்பட்ட நத்தையின் நரம்பு மண்டல ஆர்.என்.ஏ-விலிருந்து தகவல்களை எடுத்து, பிற கடல் நத்தைகளுக்கு அதனை  செலுத்தினர். எப்படி மின்சார தாக்குதலுக்கு உள்ளான நத்தை எதிர்வினை ஆற்றியதோ, அவ்வாறே மின்சார தாக்குதலுக்கு உட்படாத ஆனால் ஆர்.என்.ஏ  செலுத்தப்பட்ட அந்த பிற நத்தைகளும் எதிர்வினை ஆற்றின.
நினைவுகளை கடத்தி உள்ளோம்
 
இந்த ஆய்வில் பங்காற்றிய கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டேவிட் கிளான்ஸ்மென், ஏறத்தாழ நாங்கள் நினைவுகளை கடத்தி  உள்ளோம் என்கிறார். மேலும் அவர், இந்த ஆய்வின் போது நத்தைகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை. இந்த கடல் நத்தைகளானது தன்னை தாக்க  வருபவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள நீல நிற திரவத்தை பாய்ச்சி அடிக்கும், நாங்கள் அதன் வால் பகுதியில் மின்சாரம் செலுத்திய போது அது  துன்புறுத்தப்படவில்லை என்கிறார்.
 
கடல் நத்தைகளில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு செயல்முறைகளானது மனிதர்களை போன்றே உள்ளது. இந்த ஆய்வானது அல்சைமர் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளப்பதில் பேருதவி புரியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்