வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் பெயரை நீதிமன்றம் வெளியிடக்கூடாது என ஊடக நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்த உத்தரவு பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு தகராறில் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் "போஸ்கோ" சட்டத்தின் கீழ் 5 சிறுவர்கள் மீது மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரர் இந்த நீதிமன்றத்தை மேடையாகப் பயன்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள முயல்வதாகக் குறிப்பிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தது.
மேலும், பல நேரங்களில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள், வழக்கறிஞர்களின் பெயர்கள் ஊடகங்களில் வெளியாவதாகவும் அது வழக்கறிஞர்களுக்கு விளம்பரம் அளிப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றம், வழக்கறிஞர்களின் பெயரை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என எல்லா ஊடகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென பதிவாளருக்கு உத்தரவிட்டது.
மேலும், நீதிபதிகள் தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கீடு செய்வதன் அடிப்படையிலேயே பணிபுரிவதால், அவர்களது பெயரை வெளியிடாமல் நீதிமன்றத்தின் பெயரை மட்டுமே குறிப்பிட உத்தரவிடுவது குறித்து தலைமை நீதிபதியின் கவனத்திற்கு இந்த விஷயத்தை பதிவாளர் எடுத்துச் செல்ல வேண்டுமென நீதிமன்றம் குறிப்பிட்டது.
நீதிமன்றத்தின் இந்த முடிவு குறித்து ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதிகள், இது சரியான உத்தரவு அல்ல என்று கூறியுள்ளனர்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜயஷங்கர், "வழக்கறிஞர்களின் பெயரை குறிப்பிடக்கூடாது என பல ஊடக நிறுவனங்களில் விதிகள் உள்ளன. ஆனால், நீதிபதிகளின் பெயரை குறிப்பிடக்கூடாது என்ற விஷயத்தில் ஒப்புதல் இல்லை. வி.ஆர். கிருஷ்ணய்யரின் பெயரில்லாமல் அவர் அளித்த தீர்ப்புகளைப் பார்க்க முடியுமா?" என்று கேள்வியெழுப்பினார்.