தமிழ்நாட்டிலும் பாஜக அலை வீசும்: எல்.முருகன்

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (15:09 IST)
புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக அலை வீசும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
புதுச்சேரி சபாநாயகராக மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரது பதவியேற்பு விழா புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்.முருகன், சபாநாயகராக பதவியேற்ற செல்வத்தை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்திகளை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எ‌ல்.முருகன், புதுச்சேரியை போன்று தமிழகத்திலும் பாஜக அலை வரும் என்று தெரிவித்தார். "தமிழ் மண்ணான புதுச்சேரியில் சபாநாயகராக செல்வத்திற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மண்ணில், தமிழ்நாட்டில் பாஜக வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னவர்களுக்கு மத்தியில் இன்று புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளது.

பாஜகவை சேர்ந்தவர் புதுச்சேரி சபாநாயகராக வந்துள்ளார். மேலும் தமிழகத்திலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துள்ளனர். ஆகவே தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாஜக மிக பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. பாஜகவும் ‍ தாமரையும் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு, பாஜக இங்கே இருக்கிறது என்பது தான் எனது பதில்," என்றார். தமிழ் மண்ணான புதுச்சேரியில் உள்ள பாஜக அலை வந்தது போல, தமிழகத்திலும் வரும் என்று கூறினார் எல்.முருகன்.
 
"தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துள்ள சூழலில், மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது பாஜகவின் நிலைபாடாக உள்ளது. குறிப்பாக இன்றைய முதல்வர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது அவரே மதுக்கடைகளை மூடவேண்டும், மதுபான தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று மக்களிடம் சொல்லியே திமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது. ஆகையால் அவர்களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்," என்று வலியுறுத்தினார் முருகன்.
 
தமிழகத்தில் கருத்துக்கள் சொல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதெல்லாம் முழுமையாக கண்டிக்கத்தக்கது, தமிழகத்தில் அனைத்து சாதியினரும் ஏற்கனவே பல கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். அதேபோன்று தமிழகத்தில் தமிழ் மொழியில் பல கோயில்களில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அதேபோல பெண்களும் பல கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர். ஆனால் தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் புதியதாக புரட்சி செய்வது போல சொல்வது தவறானது," என்று கூறினார் முருகன்.
 
தமிழகத்தில் தற்போது சிறுமிகள் பாலியல் தொடர்பான பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அண்மையில் இந்த சர்ச்சை தொடர்பாக சிவசங்கர் பாபா என்பவர் தலைமறைவாக இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எல்.முருகன், "குற்றவாளிகள், தனிநபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த குற்றம் நடைபெற்றதற்காக நிர்வாகத்தை குறை சொல்வது ஏற்புடையதாக இல்லை," என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்