'கசடதபற' - சினிமா விமர்சனம்

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:21 IST)
நடிகர்கள்: சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது; இசை: யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்; ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர்; எழுத்து - இயக்கம்: சிம்புதேவன்.
 
சிம்புதேவன் இயக்கியிருக்கும் கசடதபற, அவர் ஏற்கனவே குறப்பிட்டதைப்போல பல தனித்தனி திரைப்படங்களின் தொகுப்பைப்போல காட்சியளித்தாலும், ஒரு முழு நீளத் திரைப்படமாகத்தான் விரிகிறது.
 
மொத்தம் ஆறு கதைகள். ஒரு மருந்துக் கடையில் வேலை பார்க்கும் பாலா (ப்ரேம்ஜி), ஒரு பணக்காரப் பெண்ணைக் (ரெஜினா கஸாண்ட்ரா) காதலித்ததால் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு, ஒரு தாதாவால் (சம்பத்) மிரட்டப்படுகிறான். அந்த தாதாவை அவனது மகனே (சாந்தனு) வெறுக்க, ஒரு கட்டத்தில் காவல்துறை அவனை சுட்டுக் கொல்கிறது.
 
எந்த உயிரையும் கொலைசெய்ய நினைக்காத போலீஸ் அதிகாரியான கந்தாவை (சந்தீப் கிஷன்), தொடர்ந்து என்கவுன்டர் பணியில் ஈடுபடுத்துகிறான் மேலதிகாரி ஒருவன். குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் கிருஷ்ணமூர்த்தி (ஹரீஷ் கல்யாண்), சுற்றியிருப்பவர்களாலேயே கொல்லப்படும் நிலைக்குச் செல்ல, ஒரு ஏழைப் பெண்ணான சுந்தரியால் (விஜயலட்சுமி) காப்பாற்றப்படுகிறான். ஒரு போலி மருந்தை குழந்தைகளுக்குக் கொடுத்த குற்றத்தில் தூக்கு மேடை ஏறுகிறான் சம்யுத்தன் (வெங்கட் பிரபு).
 
இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களும் மற்றொரு பாத்திரத்தின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனித்தனிக் கதைகளாக துவங்கினாலும் அவற்றை ஏதோ ஒரு பாத்திரமோ, சம்பவமோ ஒன்றாக இணைத்துவிடுகிறது. இதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பிரச்சனைகள் எப்படித் தீர்கின்றன என்பதே மீதிக் கதை.
 
இந்த ஆறு கதைகளில் துவக்கத்திலிருந்தே சுவாரஸ்யமாக இருப்பது, முதல் கதையான பாலாவின் கதைதான். அந்தக் கதையில் உள்ள ஒரு எதிர்பாராத பாத்திரம், 'அறை எண் 304ல் கடவுள்' படத்தை நினைவுபடுத்துகிறது. இந்தக் கதையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் படத்தைத் தொடர்ந்து சுவாரஸ்யமாக எடுத்துச் செல்கின்றன.
 
இதில் ரொம்பவும் சுமாரான கதையென்றால், தாதாவின் கதைதான். இலக்கில்லாமல் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது. போலீஸ் அதிகாரியின் கதையிலும் குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் கதையிலும் சின்னச்சின்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. சின்னச்சின்ன பிரச்சனைகளும் இருக்கின்றன.
 
கடைசியாக வரும் சுந்தரி மற்றும் சம்யுத்தனின் கதையில் சில நம்பமுடியாத திருப்பங்களும் திரைக்கதையும் இருக்கின்றன என்பது ஒரு பலவீனம். ஒரு மருந்துக் கம்பனியை மையமாக வைத்தே கதை நகர்கிறது. அதில், இந்த தாதாவின் கதை இல்லாவிட்டாலும் படம் முழுமையாக இருந்திருக்கும் என்பதால், அந்தப் பகுதி பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை.
 
ஒட்டுமொத்த படத்திலும் வெங்கட் பிரபு, சிஜா ரோஸ், விஜயலட்சுமி, சந்தீப் கிஷன் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றை ஒவ்வொரு கதைக்கும் வெவ்வேறு கலைஞர்கள் பொறுப்பேற்று சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்