ஆப்கன் தாக்குதல்: இதுவரை நமக்கு என்ன தெரியும்?

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (01:04 IST)
அருகே தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருக்கும் தாலிபன் போராளிகள்Image caption: காபூல் விமான நிலையம் அருகே தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருக்கும் தாலிபன் போராளிகள்
 
இந்த நேரலை பக்கத்தில் சற்று முன்பு நீங்கள் இணைந்திருந்தால், ஆப்கன் தாக்குதல் தொடர்பான சமீபத்திய தகவல்களின் சுருக்கத்தை இங்கே பார்க்கவும்.
 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஆகஸ்ட் 26 மாலையில் நடத்தப்பட்ட இரட்டை தாக்குதல்களால் அந்த நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இரட்டை தாக்குதல்களில் குறைந்தபட்சம் 13 பேர் பலியானதாக தாலிபன் தரப்பு கூறுகிறது. தாக்குதல் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் குவியல்கள் இடம்பெற்ற காணொளிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி அருகே முதலாவது தாக்குதலும் அதன் அருகே உள்ள பரோன் விடுதி அருகே இரண்டாவது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில்தான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தகுதிபெற்றவர்களை விமான நிலையத்துக்குள் ஒழுங்குபடுத்தி அனுப்பும் பணியை அமெரிக்க படையினர் மேற்கொண்டுள்ளனர்.
 
காபூல் தாக்குதலில் நான்கு அமெரிக்க மெரைன் கமாண்டோக்கள் பலியானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
காபூல் தாக்குதல்கள் தொடர்பாகவும் ஆப்கானிஸ்தானில் மீட்பு நடவடிக்கைகளை தொடருவது குறித்தும் அமெரிக்க அரசின் உயரதிகாரிகளுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை அவசரகால நடவடிக்கை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது வெளிப்படுத்தப்படவில்லை.
உள்ளூர் மருத்துவமனையில் குறைந்தபட்சம் 60 பேர் படுகாயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் குறைந்தபட்சம் ஆறு பேர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
காபூல் நகர விமான நிலைய பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகள் எச்சரித்த 24 மணி நேரத்துக்குள்ளாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 
காபூல் விமான நிலையத்தில் பல நாடுகளும் தங்களின் வெளியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்த நாளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
 
இரட்டை தாக்குதல்கள் நடந்தபோதும், ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் மக்களையும் அந்த நாட்டை விட்டு வெளியேற தகுதி பெற்றுள்ள ஆப்கானியர்களையும் வெளியேற்றும் நடவடிக்கை தொடரும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
 
காபூலில் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அதிக மக்களை வெளியேற்றுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் தமது நாடு ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்களால் மக்கள் மீட்பு நடவடிக்கையைத் தொடர முடியாது என்று நார்வே அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவி2 என்ற தொலைக்காட்சியிடம் பேசிய நார்வே வெளியுறவு அமைச்சர் எரிக் சொரைட், காபூல் விமான நிலைய வாயில்கள் தற்போது மூடப்பட்டு விட்டதால் அதனுள் மக்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே அங்கு எஞ்சிய தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் பணி தொடராது என்று அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்