ஜோத்பூர்: காணாமல் போகும் இந்தியாவின் 'நீல' நகரம்

Prasanth Karthick
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (14:10 IST)

ஒரு இந்திய நகரத்தின் மையமாக உள்ள அழகான நீல வீடுகள், பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. ஆனால் அந்தப் புகழ்பெற்ற வீடுகள் மெதுவாகத் தங்கள் வசீகரத்தையும், அழகிய நீல நிறத்தையும் இழந்து வருவதை எழுத்தாளர் அர்ஷியா கண்டறிந்தார்.

 

 

ஜோத்பூரில் உள்ள பிரம்மபுரி எனும் குடியிருப்புப் பகுதி, ஒரு மலையின் மேல் அமைந்துள்ள புகழ்பெற்ற கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

 

ராஜபுத்திர மன்னர் ராவ் ஜோதா என்பவரால், 1459ஆம் ஆண்டில் கட்டப்பட்டது இந்த பிரம்மபுரி. அவரது பெயரில் இருந்துதான் ‘ஜோத்பூர்’ என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது.

 

சுவர்களால் சூழப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த பிரம்மபுரி, மெஹ்ரான்கர் கோட்டையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பின்னர் நீல நிற வீடுகளுடன் கூடிய அந்தப் பகுதி, ஜோத்பூரின் புராதனமான அல்லது அசல் நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.

 

ஜிண்டால் கலை மற்றும் கட்டடக்கலை பள்ளியின் உதவி பேராசிரியர் எஸ்தர் கிறிஸ்டின் ஷ்மிட் கூறுகையில், “இந்தப் புகழ்பெற்ற சின்னமான நீல நிறம், 17ஆம் நூற்றாண்டுக்கு முன் அங்குள்ள வீடுகளுக்குப் பூசப்படவில்லை.”

 

ஆனால் அப்போதிருந்து, இப்பகுதியின் நீல நிற வீடுகள் ஜோத்பூரின் தனித்துவமான அடையாளமாக மாறிவிட்டன.

 

ராஜஸ்தானின் 'நீல நகரம்'
 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் 'நீல நகரம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 70 ஆண்டுகளில் நகரில் பல விரிவாக்கங்கள் செய்யப்பட்ட போதிலும், பிரம்மபுரி அதன் இதயமாக உள்ளதாக மெஹ்ரான்கர் அருங்காட்சியகத்தின் காப்பாளரான சுனயனா ரத்தோர் விளக்குகிறார்.

 

பிரம்மபுரி என்றால் சமஸ்கிருத மொழியில் ‘பிராமணர்களின் நகரம்’ (தோராயமாக) என்று கூறலாம். இந்து மதத்தின் சாதி அமைப்பில், தங்கள் சமூக கலாசாரப் பற்றின் அடையாளமாக நீல நிறத்தை ஏற்றுக்கொண்ட உயர் சாதி குடும்பங்களின் காலனியாக இது கட்டப்பட்டது.

 

இந்த பிரம்மபுரி குடும்பங்கள் ஒதுங்கியிருக்க விரும்பினார்கள். அதாவது 15ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய விசாரணையில் இருந்து தப்பி ஓடி, ​​மதீனா எனப்படும் நகரத்தில் குடியேறிய ‘செஃப்ஷாவன் யூதர்களைப் போல அல்லது அவர்களது மொராக்கோவின் நீல நகரத்தைப் போல’.

 

செஃப்ஷாவன் யூதர்கள் தங்கள் வீடுகள், பிரார்த்தனைக் கூடங்கள் மற்றும் பொது அலுவலகங்களுக்குக்கூட நீல வண்ணம் தீட்டியதாக நம்பப்படுகிறது. இது யூத மதத்தில் தெய்வீகமாகக் கருதப்படுகிறது, நீல நிறம் புனித வானத்தைக் குறிக்கிறது.

 

பிரம்மபுரியின் அந்த நீல வண்ணம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது. பிரம்மபுரியின் வீடுகளில் சுண்ணாம்பு பிளாஸ்டருடன் கலந்த நீல வண்ணப்பூச்சு, பயன்படுத்தப்பட்டது. அது அந்தக் கட்டமைப்புகளின் உட்புறத்தைக் குளிர்வித்தது. அந்த வீடுகளின் கண்கவர் தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்தனர்.

 

ஆனால் செஃப்ஷாவன் போலன்றி, ஜோத்பூரில் அந்த அழகிய நீல நிறம் மங்கத் தொடங்கியுள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 

உயர்ந்து வரும் ஜோத்பூரின் வெப்பநிலை

வரலாற்று ரீதியாக, பிரம்மபுரியில் வசிப்பவர்களுக்கு நீலம் ஒரு விருப்பமான, எளிமையான நிறமாக இருந்தது. ஏனெனில் இப்பகுதியில் இயற்கையான இண்டிகோ சாயம் எளிதாகக் கிடைத்தது.

 

கிழக்கு ராஜஸ்தானில் உள்ள பயானா நகரம் அப்போது நாட்டின் முக்கிய இண்டிகோ உற்பத்தி மையங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அதற்கான பயிரை வளர்ப்பது மண்ணை அதிகமாகச் சேதப்படுத்தியதால், காலப்போக்கில் இண்டிகோ சாயத்திற்கு ஆதரவு இல்லாமல் போனது.

 

அது மட்டுமல்லாது, வெப்பநிலை இப்போது மிகவும் உயர்ந்துள்ளது. எனவே வீடுகளைக் குளிர்ச்சியாக வைத்திருக்க நீல வண்ணப்பூச்சு மட்டும் போதுமானதாக இல்லை. மக்களின் வருமானம் அதிகரித்ததால், வெப்பத்தைச் சமாளிக்க ஏசி போன்ற நவீன வசதிகளை நோக்கி மக்களின் வாழ்க்கை முறை படிப்படியாக மாறியது.

 

காந்திநகர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) கட்டடப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் உதித் பாட்டியா, "வெப்பநிலை, பல ஆண்டுகளாகப் படிப்படியாக உயர்ந்து வருகிறது” என்றார்.

 

அவர் செயற்கை கட்டமைப்புகள் மற்றும் இயற்கை அமைப்புகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்த துறையில் பணியாற்றுகிறார்.

 

ஐஐடி காந்திநகர் மேற்கொண்ட ஒரு பகுப்பாய்வில், ஜோத்பூரின் சராசரி வெப்பநிலை 1950களில் 37.5 செல்ஸியஸ் என்ற நிலையில் இருந்து 2016க்குள் 38.5 செல்ஸியஸ் ஆக உயர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

 

வீடுகளைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமின்றி, நீல நிற காப்பர் சல்பேட்டுடன் இயற்கையான இண்டிகோ கலந்திருப்பதால், இந்த நீல நிற வண்ணப்பூச்சு, பூச்சிகளை விரட்டும் குணங்களையும் கொண்டிருந்ததாக பாட்டியா கூறுகிறார்.

 

நகரமயமாக்கல் நல்லதல்ல என்று பாட்டியா நினைக்கவில்லை, ஆனால் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட மரபுகளை அறிவியல்பூர்வமற்ற வழியில் கைவிடுவதற்கு இது வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

“நேற்று ஜோத்பூரின் நீலநிற வீடுகள் நிறைந்த ஒரு சந்தில் நடந்து சென்ற ஒருவர், இன்று அந்த வீடுகளுக்கு அடர் நிற வர்ணம் பூசப்பட்ட பிறகு அந்த வழியாக நடந்து செல்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது தென்றல் காற்று வீசினால்கூட, அதை நேற்று வீசிய காற்றுடன் ஒப்பிடும்போது, ஏதோ ஒரு வகை கூடுதல் வெப்பம் இருப்பதை உணர்வார்" என்று அவர் கூறுகிறார்.

 

இது வெப்பத் தீவு விளைவு (Heat island effect) என்று அழைக்கப்படுகிறது.

 

அதாவது, ஒரு பகுதியின் வெப்பம் மற்றும் சூரிய ஒளியின் தாக்கம் பெருகி, அங்குள்ள கட்டடங்களின் கான்கிரீட், சிமென்ட், கண்ணாடி மூலம் சுற்றுச்சூழலில் மீண்டும் பிரதிபலிக்கும். அப்போது உயரும் வெப்பநிலையின் விளைவு மோசமாக இருக்கும். அடர் வண்ணப்பூச்சுகளால், அந்தத் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.

 

இண்டிகோ சாயத்திற்கான பற்றாக்குறை

 

நகரங்களில் புதிய கலாசாரங்களின் பரவல், மக்கள்தொகை அதிகரிப்பு போன்றவற்றால், வெப்பமான காலநிலைகளில் சுண்ணாம்பு பிளாஸ்டரை பயன்படுத்துவது போன்ற உள்நாட்டு கட்டட நுட்பங்கள் சிமென்ட் அல்லது கான்கிரீட் பயன்பாடு போன்ற நவீன முறைகளால் மாற்றீடு செய்யப்படுகின்றன. ஆனால் அவை நீல நிறமியை நன்கு உறிஞ்சுவதில்லை.

 

பிரம்மபுரியை சேர்ந்த 29 வயதான சிவில் இன்ஜினியர் ஆதித்யா டேவின் கூற்றுப்படி, அவரது 300 ஆண்டுகள் பழமையான குடும்ப வீட்டிற்குப் பெரும்பாலும் நீல வண்ணம்தான் பூசப்படுகிறது. இருப்பினும், எப்போதாவது, வெளிப்புறச் சுவர்களுக்கு வேறு வண்ணங்களையும் பூசுகிறார்கள்.

 

முக்கியமாக இண்டிகோவின் பற்றாக்குறை சமீபத்திய ஆண்டுகளில் செலவுகளை உயர்த்தியுள்ளது. வீடுகளுக்கு நீல வண்ணம் பூசுவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 5,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால் இன்று அதற்கு 30,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவாகிறது.

 

"இன்று, திறந்த வடிகால் அமைப்புகளைக் கொண்ட வீடுகள் உள்ளன. இது நீல வண்ணப்பூச்சுகளை அழுக்காக்குகிறது, சுவர்களைச் சேதப்படுத்துகிறது" என்கிறார் டேவ்.

 

அதனால்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மபுரியில் அவர் சொந்தமாக வீடு கட்டியபோது, ​​அடிக்கடி சீரமைக்கத் தேவையில்லாத டைல்ஸ் கொண்ட முகப்பைத் தேர்ந்தெடுத்தார்.

 

"பொருளாதார ரீதியாக அது மிகவும் பயனுள்ளதாக உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

 

ஜோத்பூரின் பாரம்பரியம்

 

ஆனால் இந்த மாற்றம் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு ஏமாற்ற உணர்வை அளிப்பதாக தீபக் சோனி கூறுகிறார். ஆடை விற்பனையாளரான தீபக் சோனி பிரம்மபுரியில் இருக்கும் நீல நிற வீடுகளைப் பாதுகாக்கவும், நீல நிறத்தைக் கைவிட்ட வீடுகளை மீட்டெடுக்கவும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

 

“நம் நகரத்தின் அடையாளமாக இருக்கும் வீடுகளைத் தேடி யாராவது வரும்போது, ​​அவர்களால் அதைப் பார்க்க முடியவில்லையே என்று நாம் வெட்கப்பட வேண்டும். பல வெளிநாட்டவர்கள் ஜோத்பூரை செஃப்ஷாவனுடன் ஒப்பிடுகிறார்கள். செஃப்ஷாவன் மக்களால் பல நூற்றாண்டுகளாகத் தங்கள் வீடுகளை நீல நிறத்திலேயே வைத்திருக்க முடியுமானால், ஏன் நம்மால் முடியாது?" என்று தீபக் சோனி கேட்கிறார்.

 

முதலில் பிரம்மபுரியில் வசித்து வந்த சோனி, இப்போது ஜோத்பூரின் சுவர் பகுதிக்கு அப்பால் வசிக்கிறார். 2018ஆம் ஆண்டில், தனது சொந்த ஊரின் தனித்துவமான பாரம்பரியத்தைக் காப்பாற்ற உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூகங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டிற்கும் 500 வீடுகளின் வெளிப்புறச் சுவர்களுக்கு நீல வண்ணம் பூசுவதற்கு பிரம்மபுரி மக்களிடம் இருந்து நிதி திரட்டி வருகிறார்.

 

சோனி, தொடர்ந்து பல ஆண்டுகளாக, பிரம்மபுரியில் உள்ள சுமார் 3,000 வீடுகளின் உரிமையாளர்களைச் சமாதானப்படுத்தி, அவர்களது வீட்டின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் கூரைகளுக்கு மீண்டும் நீல நிறத்தை பூசச் செய்துள்ளார்.

 

"இதனால் குறைந்தபட்சம் பிரம்மபுரியில் யாராவது ஒருவர் புகைப்படம் எடுக்கும்போது, ​​பின்னணியில் நீல நிறம் தெரியும் அல்லவா" என்று அவர் கூறுகிறார்.

 

பிரம்மபுரியில் உள்ள சுமார் 33,000 வீடுகளில், தற்போது பாதி வீடுகள் மட்டுமே நீல நிறத்தில் இருப்பதாக சோனி கூறுகிறார்

 

அவர் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இணைந்து சுண்ணாம்புப் பூச்சு பூசுவதற்கான திட்டத்தில் பணிபுரிகிறார். இதனால் அதிக வீடுகளுக்கு நீல வண்ணம் பூசலாம்.

 

தீபக் சோனி, தனது நகரத்திற்குச் செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியாக இதைக் கருதுகிறார்.

 

"ஜோத்பூரின் பாரம்பரியத்தைப் பற்றி நாங்களே கவலைப்படாவிட்டால், அதைக் காப்பாற்ற ஏதும் செய்யவிட்டால், ஜோத்பூருக்கு வெளியே உள்ளவர்கள் ஏன் எங்கள் நகரத்தைப் பற்றி கவலைப்படப் போகிறார்கள்?" என்கிறார் சோனி.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்