இந்தியா- மாலத்தீவு சர்ச்சையில் குதித்த இஸ்ரேல்; தீவிரமாகும் சிக்கல்

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (21:02 IST)
இந்தியா- மாலத்தீவு சர்ச்சையில் திங்களன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எடுத்த நடவடிக்கையும் இஸ்ரேலின் தலையீடும் கவனம் பெற்றுள்ளது.
 
மாலத்தீவின் முகமது முய்ஸு அரசில் அமைச்சராக இருந்த மரியம், பிரதமர் மோதியை இஸ்ரேலின் கைப்பாவை என்றும் கூறியிருந்தார். ஆனால், பின்னர் அந்த ட்வீட்டை அவர் நீக்கினார். இந்த சர்ச்சை பெரிதானதைத் தொடர்ந்து, மாலத்தீவு அரசு மரியம் உட்பட மூன்று அமைச்சர்களை சஸ்பெண்ட் செய்தது.
 
திங்களன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் மாலத்தீவு ஹைகமிஷனருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து மாலத்தீவிற்கான இந்திய ஹைகமிஷனர் முனு மஹாவர், தலைநகர் மாலேயில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தூதர் அலி நசீர் முகமதுவையும் சந்தித்தார்.
 
இஸ்ரேலிய தூதரகமும் திங்களன்று சமூக ஊடகங்களில் லட்சத்தீவுகளின் படங்களைப் பகிர்ந்துள்ளது.
 
டெல்லியில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. சமூக ஊடகங்களில் லட்சத்தீவுகளின் படங்களைப் பகிர்வதன் மூலம் இப்போது இஸ்ரேலும் இந்த விஷயத்தில் குதித்துள்ளது என்று தி இந்துவின் செய்தி கூறுகிறது.
 
இந்தியாவிற்கான மாலத்தீவு ஹைகமிஷனர் இப்ராஹிம் சாஹிப் அழைக்கப்பட்ட போது, ​​அது தொடர்பாக இந்தியா தரப்பில் அதிகாரப்பூர்வ தரப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாலேயில் உள்ள இந்திய ஹைகமிஷனர் முனு மஹவர் மாலத்தீவு அதிகாரிகளைச் சந்தித்தபோது, ​​அது இந்தியாவில் உள்ள மாலத்தீவு ஹைகமிஷனர் வரவழைக்கப்பட்டதற்கு எதிர்வினையாகக் கருதப்பட்டது.
 
ஆனால் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், அலி நசீர் முகமது உடனான இந்திய ஹைகமிஷனர் சந்திப்பு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்றும் இதனால் இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியும் என்றும் கூறியது.
 
ஞாயிற்றுக்கிழமை, மாலேயில் உள்ள இந்திய தூதரகம், பிரதமர் மோதி மற்றும் இந்தியா தொடர்பான கருத்துக்கள் குறித்து முய்ஸு அரசாங்கத்திடம் கடுமையான கேள்விகளை எழுப்பியதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி ஹிந்து எழுதியிருக்கிறது.
 
இந்தியா மற்றும் பிரதமர் மோதி பற்றிய கருத்துகளில், இஸ்ரேலுடனான உறவுகளும் கேலி செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து திங்களன்று, இஸ்ரேலிய தூதரகம் லட்சத்தீவுகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, அதை வெகுவாக பாராட்டியுள்ளது.
 
இந்தியா- மாலத்தீவு சர்ச்சையில் இஸ்ரேல் தலையீடுபட மூலாதாரம்,ISRAELININDIA/X
இதுகுறித்து இஸ்ரேல் தூதரகம், ​​“கடந்த ஆண்டு உப்பு அகற்றல் திட்டம் தொடர்பாக அரசின் கோரிக்கையின் பேரில் லட்சத்தீவுக்கு சென்றோம். இந்த திட்டத்தில் பணியாற்ற இஸ்ரேல் தயாராக உள்ளது. லட்சத்தீவின் அழகை இதுவரை பார்க்காதவர்களுக்காக இந்தப் படங்கள்" என பதிவிட்டுள்ளது. உப்பகற்றல் திட்டம் என்பது கடல்நீர் அல்லது உப்பு நீரில் உள்ள உப்பை நீக்கும் செயல்முறை.
 
மரியம் ஷீனா, மல்ஷா ஷெரீப், மஹ்சூம் மஜீத், இந்த மூன்று அமைச்சர்கள் தான் பிரதமர் மோதி மற்றும் இந்தியா குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டனர். இவர்கள் மூவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரும் சென்றுள்ளார்.
 
மூசா ஜமீர், தனது சமூக ஊடகப் பக்கத்தில், "வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அண்டை நாட்டிற்கு எதிரான சமீபத்திய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவை பிரதிபலிக்கவில்லை."
 
"எங்களது அனைத்து நட்பு நாடுகளுடனும், குறிப்பாக அண்டை நாடுகளுடனும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." என பதிவிட்டுள்ளார்.
 
மாலத்தீவுடன் அதிகரித்து வரும் சர்ச்சை காரணமாக வெளியுறவுக் கொள்கை நிபுணர்களும் கவலையடைந்துள்ளனர்.
 
முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் சமூக ஊடகங்களில், "இந்த சமூக ஊடக யுகத்தில், பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசப்படும் விஷயங்களால் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திர முயற்சிகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன."
 
''மாலத்தீவு விஷயத்திலும் இதே தான் நடந்தது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் சமநிலையை எட்டும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் இந்த உறவுகள் இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானவை."
 
"நாங்கள் சம பங்காளிகள், அது அப்படியே இருக்க வேண்டும். இது வெறும் மண் மற்றும் கடற்கரைகளைப் பற்றி விஷயம் அல்ல." என பதிவிட்டுள்ளார்.
 
மாலத்தீவுக்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள். 2023இல் மாலத்தீவுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் இந்தியர்கள் சென்றுள்ளனர்.
 
மாலத்தீவுக்குச் செல்லும் மக்களில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவும் சீனாவும் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையே சராசரியாக 450 மில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளது. எனினும், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்தியா அவுட் என்ற முழக்கத்துடன் தேர்தலில் போட்டியிட்டது விவாதத்தை கிளப்பியது.
 
ஜனாதிபதியான பிறகு, இந்திய அரசாங்கத்திடம் இராணுவத்தை திரும்பப் பெறுமாறு முறையான வேண்டுகோள் விடுத்தார் முய்ஸு. இந்தியாவா, சீனாவா என்ற கேள்வி கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவுகளில் எழுந்து வருகிறது.
 
இந்தியா அவுட் என்ற முழக்கத்தை முன்னெடுத்த முய்ஸு, சீனாவின் பக்கம் சாய்வாரா? என்ற கேள்விக்கு பதிலாக, மாலத்தீவு நலனுக்கு தான் முன்னுரிமை என முய்ஸு கூறியுள்ளார். சமீப நாட்களில் முய்ஸு சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
 
மாலத்தீவின் நாடாளுமன்ற சிறுபான்மைத் தலைவர் அலி அசிம், அதிபர் முகமது முய்ஸுவை பதவியிலிருந்து நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திங்களன்று அழைப்பு விடுத்துள்ளார்.
 
தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், "ஜனநாயகவாதிகளாகிய நாங்கள், நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும், அண்டை நாடு தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட தயாராக இருக்கிறோம்.
 
அதிபர் முய்ஸுவை ஆட்சியில் இருந்து அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறீர்களா? மாலத்தீவு ஜனநாயகக் கட்சிக்கு இதில் நம்பிக்கை இல்லையா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்