ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியாவின் 47 ஆண்டுக்கால ஏக்கம் முடிவுக்கு வருமா?

Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (11:25 IST)
ஹாக்கி உலகக் கோப்பை: இந்தியாவின் 47 ஆண்டுக்கால ஏக்கம் முடிவுக்கு வருமா?
 
 
முக்கிய சாராம்சம்
2018க்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நாட்டின் ஒரே நகரம் புவனேஷ்வர்.
இந்தியா கடைசியாக 1975இல் அஜீத்பால் சிங் தலைமையில் தங்கப் பதக்கம் வென்றது.
இந்தியா இடம்பெற்றுள்ள குழுவில் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற வலுவான அணிகள் உள்ளன.
ஹர்மன் ப்ரீத்தின் வடிவத்தில் இந்தியாவிடம் ஒரு நல்ல ட்ராக் ஃப்ளிக்கர் உள்ளார். அவர் மீது அணி அதிக நம்பிக்கை வைத்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட அணிகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெல்ஜியத்தை தவிர வேறு எந்த அணியும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை.
 
15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிஷாவின் ரூர்கேலா மற்றும் புவனேஷ்வரில் ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 
இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்காக, பழங்குடியின புரட்சியாளர் பிர்ஸா முண்டாவின் பெயரில் ரூர்கேலாவில் ஒரு மைதானம் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ளது.
 
உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி கட்டாக்கில் உள்ள பாராபதி ஸ்டேடியத்தில் தொடக்க விழா நடைபெறும்.
இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்பீர் சிங், திஷா படானி, இசையமைப்பாளர் ப்ரீதம், பாடகர் நீதி மோகன், பாடகர் பென்னி தயாள் ஆகியோருடன் பிளாக்சன் நடனக் குழுவும் பங்கேற்கிறது.
 
இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் நாட்டின் ஒரே நகரம் புவனேஷ்வர். 2018 உலகக் கோப்பையும் இங்குதான் நடந்தது.
 
முன்னதாக இந்தியா மும்பை, புதுடெல்லி மற்றும் புவனேஷ்வரில் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் இந்தியாவால் வெற்றி மேடையில் ஏறமுடியவில்லை.
 
ஆனால் 47 ஆண்டுகளாக நிலவி வரும் பதக்க வறட்சிக்கு இம்முறை முடிவு கட்டப்படும் என்ற முழு நம்பிக்கையுடன் இந்தியா உள்ளது.
 
1975இல் இந்தியாவின் கடைசி வெற்றி
இந்தியா கடைசியாக 1975இல் அஜீத்பால் சிங் தலைமையில் தங்கப் பதக்கம் வென்றது. அதன் பிறகு இந்திய அணியால் வெற்றிமேடை ஏற முடியவில்லை.
 
இதற்கு முன்பு 1971ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியபோது இந்தியா வெண்கல பதக்கத்தையும், 1973இல் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் இதுவரை 3 பதக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால் இம்முறை மேலும் ஒரு பதக்கம் இதில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பங்கேற்கும் அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டி பிரிவில் ஸ்பெயின், வேல்ஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா இடம் பிடித்துள்ளது. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டீனா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. முந்தைய சாம்பியனான பெல்ஜியம், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேஷியா மற்றும் சிலியும் சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
 
 
இந்தியாவின் பாதை கடினமானது
இந்தியாவின் அனைத்து குரூப் போட்டிகளும் ரூர்கேலாவில் நடைபெற உள்ளது. ஜனவரி 13ஆம் தேதி ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா தனது முதல் பந்தயத்தை விளையாடும். அதன்பிறகு ஜனவரி 15ஆம் தேதி இங்கிலாந்துடனும், ஜனவரி 19ஆம் தேதி வேல்ஸுடனும் இந்திய அணி விளையாட வேண்டும்.
 
இந்த உலகக் கோப்பை போட்டியின் விதிகளின்படி, குழுவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். குழுவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் கிராஸ் ஓவர் போட்டிகளில் விளையாடி காலிறுதிக்குச் செல்லும்.
 
இந்தியாவின் குரூப்பில் இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற பலம் வாய்ந்த அணிகள் இருப்பதால் குழுவில் முதலிடம் பெறுவது எளிதல்ல. முதலிடம் பிடிக்க அனைத்து குரூப் போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றாக வேண்டும்.
குரூப்பில் இடம்பெற்றுள்ள முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளின் தரவரிசையில் அவ்வளவாக வித்தியாசம் இல்லை. சில காலம் முன்பு வரை இந்தியா தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.
 
ஆனால் தற்போது இங்கிலாந்து அணி அந்த இடத்திற்கு வந்துவிட்டது. இந்தியா ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயின் எட்டாவது இடத்திலும், வேல்ஸ் 15வது இடத்திலும் உள்ளன.
 
சொந்த மண்ணில் விளையாடும் போது பார்வையாளர்களின் ஆதரவின் பலன் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்பது உறுதி. நீண்ட காலத்திற்குப் பிறகு பார்வையாளர்கள் முன்னிலையில் ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
 
ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியின் எல்லா டிக்கெட்டுகளும் விற்பனையாகிவிட்டன. இந்திய அணிக்கு பார்வையாளர்கள் எப்படி ஆதரவளிக்கப் போகிறார்கள் என்பது இதிலிருந்து புரியும்.
 
ஸ்பெயின் அணியின் கேப்டன் அல்வாரோ இக்லேசியஸ் போட்டியின் போது ஏற்படும் சூழ்நிலையை நன்கு அறிவார்.
 
ரூர்கேலாவை அடைந்த அவர், "ரூர்கேலா மைதானம் பெரியது என்பது எங்களுக்குத் தெரியும், இங்கு ஏராளமான பார்வையாளர்கள் இருப்பார்கள். போட்டியின்போது அதிக சத்தம் இருக்கும், போட்டியின் போது எங்கள் வீரர்கள் பேசுவதற்குச் சிரமப்படுவார்கள். அது மட்டுமல்ல, நடுவரின் வழிகாட்டுதல்களைக் கேட்பதுகூடக் கடினமாக இருக்கும்,” என்று குறிப்பிட்டார்.
 
"உண்மையில் பிரச்னை என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளாக அணிகள், பார்வையாளர்களுக்கு முன்னால் விளையாடும் பழக்கத்தை இழந்துவிட்டன. இந்தச் சூழலுக்கு விரைவில் பழகிக் கொள்ளும் அணிக்குப் பலன் கிடைக்கும்.”
ஸ்பெயின் தவிர இங்கிலாந்து அணியைச் சமாளிப்பதும் எளிதானது அல்ல. 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டில், இவ்விரு அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியின் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
 
இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போட்டியில் ஒரு நேரத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இந்தியா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்றே தோன்றியது. ஆனால் இங்கிலாந்து அணி 4-4 என்ற கோல் கணக்கில் ஆட்த்தை ட்ரா செய்தது.
 
ஸ்பெயினுக்கு எதிரான இந்தியாவின் செயல்திறன் பற்றிப் பேசினால், இந்த ஆண்டு எஃப்ஐஎச் ப்ரோ லீக்கில் இந்தியா ஸ்பெயினுக்கு எதிராக ஒரு போட்டியில் தோல்வியடைந்து மற்றொன்றை பெனால்டி ஷூட்-அவுட்டில் வென்றது.
 
உண்மையில் இரு அணிகளுமே வலுவில் சமமாக உள்ளன. ஆனால் குறிப்பிட்ட நாளில் சிறப்பாக விளையாடும் அணி போட்டியை தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளும். இந்தியாவின் குழுவில் உள்ள நான்காவது அணியான வேல்ஸ் அணியும், எதிர்பாராத முடிவுகளைத் தரும் வல்லமை கொண்டவை.
 
இந்தியாவின் சிறப்பான பயிற்சி
பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, கடந்த ஆண்டு இறுதியில் உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது.
 
இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றியை பெற்றது. இது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி . இது முக்கியத்துவம் வாய்ந்தது.
 
காமன்வெல்த் கேம்ஸ் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 7-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தால் இழந்த தன்னம்பிக்கையை இந்திய அணி மீண்டும் பெற இந்தச் சுற்றுப்பயணம் உதவியது.
 
இதுமட்டுமின்றி ஐந்து போட்டிகளில் 17 கோல்கள் அடித்து, தங்களுக்கும் கோல் அடிக்கும் திறமை இருப்பதை இந்திய வீரர்கள் நிரூபித்தனர்.
 
ஹர்மன் ப்ரீத்தின் வடிவத்தில் இந்தியாவிடம் ஒரு நல்ல டிராக்-ஃப்ளிக்கர் உள்ளார். ஆனால் அவருக்கு ஆதரவளிக்கும் இன்னொரு வீரர் அணியில் இல்லை.
 
அணியில் அமித் ரோஹிதாஸ், வருண் குமார் உள்ளனர். ஆனால் பெனால்டி கார்னர்களை கோல்களாக மாற்றுவதில் இருவருக்கும் அவ்வளவாக நிபுணத்துவம் இல்லை.
 
தற்போதைய காலகட்டத்தில் வீரர்களின் உடற்தகுதியைப் பராமரிக்க, வீரர்கள் அடிக்கடி உள்ளேயும் வெளியேயும் அனுப்பப்படுகின்றனர். இதன் காரணமாக எல்லா நேரங்களிலும் மைதானத்தில் ஒரு ட்ராக் ஃப்ளிக்கர் இருக்க வேண்டியது அவசியம்.
 
இந்தக் குறையைப் போக்க பயிற்சியாளர் கிராம் ரீட், 1990களின் நெதர்லாந்தின் பெனால்டி கார்னர் ஸ்பெஷலிஸ்ட் பிராம் லோமன்ஸை டிசம்பரில் பெங்களூருவில் உள்ள சாய் மையத்தில் நடந்த பயிற்சி முகாமுக்கு அழைத்து, நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்க வைத்தார். அதன் பலன்கள் நிச்சயமாகக் காணக் கிடைக்கும்.
 
அதேபோல இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு மாற்று யாரும் இதுவரை கிடைக்கவில்லை. கிருஷ்ணா பகதூர் பாடக்கிற்கு நீண்ட அனுபவம் இருந்தாலும்கூட, தற்காப்பில் அவர் பல முறை தவறுகள் செய்வது போல் தெரிகிறது. எனவே டென்னிஸ் வான் டி பால், இதற்கான நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார்.
 
பெல்ஜியத்தின் வலுவான சவால்
கடந்த ஐந்தாண்டுகளைப் பற்றி பேசினால், பெல்ஜியத்தை காட்டிலும் வேறு எந்த அணியும் சிறப்பாகச் செயல்படவில்லை. இதன் போது, ​​டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் 2018 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றது மட்டுமல்லாமல், 2019 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் அந்த அணி வென்றது.
 
அதனால் மீண்டும் ஒருமுறை பட்டம் வெல்லும் வலுவான போட்டியாளராக அந்த அணி கருதப்படுகிறது. உண்மையில் பெல்ஜியம் அணி மிகவும் சமநிலையான அணி. தனது தாக்குதல் ஆட்டத்தால் எந்த அணியையும் சிதறடிக்கும் திறன் கொண்டது அது.
 
இந்தக் குழுவில் உள்ள மற்ற அணிகள் ஜெர்மனி, தென் கொரியா மற்றும் ஜப்பான். குழுவில் முதல் இடத்தைப் பிடிக்க பெல்ஜியம், ஜெர்மனியிடமிருந்து மட்டுமே ஓரளவு வலுவான சவாலை எதிர்கொள்ளும்.
 
2016 ரியோ ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டீனாவிடம் தோற்றதைத் தவிர, சமீப காலங்களில் அந்த அணியால் எந்த வலுவான ஆட்டத்தையும் வெளிப்படுத்த முடியவில்லை. கொரியா மற்றும் ஜப்பான் அணிகளும்கூட திடீர் ஆச்சரியங்களைக் கொடுக்கும் திறன் உள்ளவை.
 
ஆஸ்திரேலியாவும் யாருக்கும் குறைந்ததல்ல
கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் சிறப்பாக விளையாடிய அணியைப் பற்றி நாம் பேச வேண்டுமென்றால், அது ஆஸ்திரேலியாதான். கடந்த இருபது ஆண்டுகளாக உலகக் கோப்பையில் முதல் நான்கு அணிகளில் எப்போதும் அது இருந்து வருகிறது. இதன் போது ​​ஒலிம்பிக், உலகக் கோப்பை, எஃப்ஐஎச் புரோ லீக், காமன்வெல்த் கேம்ஸ் என எல்லா முக்கிய பட்டங்களையும் அது கைப்பற்றியுள்ளது.
 
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் அது திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
 
ஆஸ்திரேலியாவின் குரூப் ஏ பிரிவில் 2016 ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டீனா, பிரான்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளன.
 
ஆஸ்திரேலியா தற்போது விளையாடி வரும் விதத்தைப் பார்க்கும்போது இந்த அணிகள் எதற்கும் அவர்களைத் தடுக்கும் திறன் இருப்பதாகத் தெரியவில்லை.
 
ஆனாலும் இந்த மூன்று அணிகளும் வேகமான ஹாக்கி விளையாடுவதை நம்புகின்றன. எனவே எதிர்பாராத ஒன்றை நிகழ்த்திக் காட்டவும் அந்த அணிகளால் முடியும். ஆனால், இம்முறை பட்டம் வெல்வோம் என ஆஸ்திரேலிய கேப்டன் ஒகெண்டேய்ன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
நெதர்லாந்து அணி கடந்த இரண்டு உலகக்கோப்பை போட்டிகளின்  இறுதிப் போட்டியில் விளையாடிய போதிலும் கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை.
 
கடந்த முறை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்திடம் அது தோற்றது. ஆனால் இம்முறை நான்காவது பட்டத்தை வெல்லும் நம்பிக்கையுடன் அது உள்ளது.
 
கடந்த சில ஆண்டுகளில் நெதர்லாந்து, இளைஞர் படையுடன் ஒரு அணியைத் தயார் செய்துள்ளது. ஆனால் அந்த அணி கடைசியாக உலகக் கோப்பையை வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.
 
இது ஒரு திறமையான அணிதான். ஆனால் தங்கத்தைக் கைப்பற்ற முடியுமா எனச் சொல்வது சற்று கடினம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்