உக்ரைன் போர் முதல் ராணி எலிசபெத் மறைவு வரை! – 2022ன் திரும்பி பார்க்க வைத்த உலக நிகழ்வுகள்!
திங்கள், 26 டிசம்பர் 2022 (14:30 IST)
2022ம் ஆண்டில் உலகம் முழுவதும் பேசப்பட்ட, உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த டாப் நிகழ்வுகள் சில..
கொரோனாவால் கடந்த ஆண்டுகளில் முடங்கி கிடந்த உலகம் இந்த 2022ம் ஆண்டில் சிறப்பாகவே இயங்கியுள்ளது. உலகம் முழுவதும் நடந்த பல்வேறு சம்பவங்கள் பலரையும் திரும்பி பார்க்க வைத்தன. அப்படியான சம்பவங்கள் குறித்து சுருக்கமாக..
ரஷ்யா – உக்ரைன் போர்
உக்ரைன் நாடு நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது போரை தொடங்கியது. இதனால் ஏராளமான மக்களும், இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். உலக பொருளாதாரத்திலும் உக்ரைன் மீதான போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வடகொரியா ஏவுகணை சோதனை
வழக்கம்போல இந்த ஆண்டும் வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. அபாயகரமான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா சில ஏவுகணைகளை தென்கொரிய எல்லை கடல்பகுதியில் வீசியதால் பரபரப்பு எழுந்தது. ஜப்பானின் தீவுகள் பக்கமும் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளுக்கு ஜப்பான் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
அமெரிக்க சபாநாயகர் தைவான் பயணம்
தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறிவரும் நிலையில், தாங்கள் தனிநாடு என தைவான் கூறிவருகிறது. தைவானை தனிநாடாக அமெரிக்காவும் ஆதரிப்பதால், சீனாவுடன் மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில் இந்த பதட்டமான சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் செய்தார்.
இந்த ஆண்டின் மிகவும் பரபரப்பான பயணமாக அமைந்த இந்த விமான பயணத்தை உலகம் முழுவதும் பலர் உற்று நோக்கினர். எந்த அசம்பாவிதமும் இன்றி நான்சி பெலோசி தைவான், அமெரிக்க ராணுவ விமானங்களின் உதவியுடன் தைவானுக்கு சென்று திரும்பினார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி
கடந்த சில ஆண்டுகளில் கொரோனாவால் இலங்கையின் சுற்றுலா பாதித்ததாலும், சீன உர கொள்முதலாலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததுடன், அரசியல்வாதிகள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதிபர் இல்லத்தில் மக்கள் பொருட்களை எடுத்து சென்றனர். அதிபரும், பிரதமரும் பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார்கள்.
ஐரோப்பாவின் வெப்ப அலை
பருவநிலை மாற்றத்தின் கோர விளைவாக ஐரோப்பிய நாடுகள் இந்த ஆண்டு கடும் வெப்ப அலையை எதிர்கொண்டன. இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கடும் வெப்ப அலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழ்ந்தனர். மக்கள் பலர் நீர்நிலைகளை தேடி ஓடினர். வரலாற்றில் இல்லாத அளவு பல நீர்நிலைகள், ஏரிகள் வற்றி போயின.
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி
2021 இறுதியில் விண்வெளியில் ஏவப்பட்ட நாசாவின் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. வானியல் ஆய்வில் பெரும் திருப்பத்தை இந்த வெற்றி ஏற்படுத்தியது. விண்வெளியின் பல அரிய ரகசியங்களை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி வெளிப்படுத்தியது. உலகம் முழுவதும் மக்கள் அதன் புகைப்படங்களை கண்டு வியந்தனர்.
ராணி எலிசபெத் மறைவு
இங்கிலாந்தின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 92வது வயதில் செப்டம்பர் 8ம் தேதி உயிரிழந்தார். ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது. 10 நாட்கள் கழித்து அவரது உடல் ராஜ மரியாதையுடன் புதைக்கப்பட்டது.
ஈரான் ஹிஜாப் போராட்டம்
ஈரானின் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பேசிய மாஷா அமினி என்ற பெண் கொல்லப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வெடித்தது. ஹிஜாபிற்கு எதிரான இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பலர் மோதலில் உயிரிழந்தனர். சமீபத்தில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டனர்.