வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப். இதன் காரணமாக தொழில்நுட்ப பணியாளர்கள், விவசாயம் சாராத பணியாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள்.
இக்கட்டான உலகத் தொற்று சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவும் என வெள்ளை மாளிகை கூறி உள்ளது.
கொரோனா வைரஸ் உலகத் தொற்றை காரணமாக வைத்து குடிவரவு சட்டங்களை அமெரிக்கா கடுமையாக்குவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
யாரெல்லாம் பாதிக்கப்படுவர்?
அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது 5,25,000 மக்கள் மீது தாக்கம் செலுத்தும். ஏப்ரல் மாதமே இந்த தடையை அறிவித்தது வெள்ளை மாளிகை. திங்கட்கிழமையுடன் தடை முடியும் சூழலில், இப்போது இந்த தடையை நீட்டித்துள்ளது அமெரிக்கா. ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்கள் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகமாட்டார்கள்.
H-1B விசாவால் அதிகம் பயனடைந்தது இந்திய தொழில்நுட்ப ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும்தான்.
சிலிகான் பள்ளதாக்கில் உள்ள நிறுவனங்கள் தங்கள் பணிகளை வெளியாட்களுக்கு வழங்க இந்த H-1B விசா வழிவகை செய்தது. இப்போது H-1B விசா குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு 85,00 H-1B விசாகளுக்கு 2,25,000 பேர் போட்டி இட்டனர்.
அவ்வப்போது தேவைக்கு மட்டும் அழைத்துக் கொள்ளப்படும் பணியாளர்கள் அதாவது உணவு பதப்படுத்துதல், சுகாதாரத் துறையை சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கப்படும் H2B விசாவும் ரத்து செய்யப்படுகிறது.
அது போல பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் J1 விசா ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் சில விதிவிலக்குகளும் இதில் உண்டு.
பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் முக்கிய ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுக்கு வழங்கப்படும் L விசாவும் ரத்து செய்யப்படுகிறது.
வரவேற்பும், எதிர்ப்பும்
இது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்குப் பலனளிக்கும் என்கிறார் ஒரு மூத்த அதிகாரி. குடிவரவு கல்வி மையத்தின் இயக்குநர் மார்க் க்ரிகோரியன், “அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பினை காக்க டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள துணிச்சலான முடிவு இது,” என்கிறார்.
அமெரிக்க சிவில் உரிமைகள் கழகம், “இந்த தொற்றை காரணமாக வைத்து குடிவரவு நடைமுறைகளை மாற்ற பார்க்கிறது அரசு,” என குற்றம்சாட்டுகிறது.
H1B விசா என்றால் என்ன?
ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கிறது H1B விசா. இந்த வகை விசாக்கள் குறிப்பிட்டத் துறையில் திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.