தமிழிசை வீட்டிற்கு திடீரென சென்ற அமித்ஷா.. பாஜக தலைவர் பொறுப்பு அளிக்கப்படுமா?

Mahendran

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (11:24 IST)
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, தமிழிசை பாஜக தலைவராக நியமனம் செய்யப்படுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டங்களில் எழுந்துள்ளது.
 
நேற்று இரவு அமித்ஷா சென்னை வந்ததையடுத்து, கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் பாஜக நிர்வாகிகளுடன் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
 
இந்த சூழலில், அமித்ஷா நேரில் தமிழிசை இல்லத்திற்கு சென்று, அவரது தந்தை குமரி ஆனந்தம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், தமிழிசை குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
அதன்பின்னர், மீண்டும் ஹோட்டலுக்குத் திரும்பிய அமித்ஷா, அடுத்த கட்டமாக சில கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜிகே வாசன் உள்ளிட்ட சில தலைவர்களுக்கு ஏற்கனவே நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர்களை சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் பாஜக வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்