பெண் பைக் ரேசர்: ஆண் ரேசர்களுக்கு நடுவே தடைகளை உடைத்து 'தில்லாக' சாதித்த சௌந்தரி

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (21:04 IST)
‘நீ உயரமாக இல்லை அதனால் பைக் ஓட்ட முடியாது’ என்றார்கள். சொந்தமாக பைக் வாங்கி ஓட்டினேன்.
 
‘நீ ஒரு பெண், உனக்கு எதுக்கு பைக் ஓட்டும் வேலை?’ என்றார்கள். சாம்பியன்ஷிப்பில் முதல் பெண் பைக் ரேசர் பட்டம் பெற்றேன்.
 
எனக்கான உரிமைகளைக் கேட்டு பேசும்போதோ, பெறும்போதோ, ‘நீ என்ன பெரிய லாயரா?’ என்றார்கள். இப்போது சட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறேன்.
 
‘குழந்தை பெற்ற பிறகு பெண்ணால் கடின வேலைகளைச் செய்ய முடியாது,’ என்றார்கள். 118 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள 5,900 கி.மீ. தங்க நாற்கர சாலைகளை கடந்த வேகமான பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறேன்.
 
 
பல தடைகளைக் கடந்து, பைக் ஓட்ட வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் பல சாதனைகளையும் படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்த இளம்பெண்.
 
காபி ஃபில்டரை கண்டுபிடித்த மெலிட்டா பென்ட்ஸ் வெற்றிகரமான பெண் தொழிலதிபர் ஆனது எப்படி?
 
"நான் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் அம்மா ஒரு சிறிய சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார்.
 
எனக்கு ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் அப்போது எங்கள் வீட்டில் யாரிடமும் பைக் கிடையாது. எல்லாரிடமும் சைக்கிள் தான் இருந்தது. அதனால் வீட்டில் யாரும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.
 
ஆனாலும் என் எண்ணம் முழுவதும் நான் பைக் ஓட்டி, அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றே இருந்தது. எப்போதும் அது குறித்த சிந்தனையிலேயே இருப்பேன். என் வீட்டு சூழ்நிலை எனக்குப் புரிந்தது. அதனால் பெரிதாக யாரையும் தொந்தரவு செய்யவில்லை. ஆனால் என் வீட்டில் என்னுடைய ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, நீ 12ஆம் வகுப்பு தேர்வில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் உனக்கு மோட்டார் பைக் வாங்கித் தருவேன் என்று சொன்னார்கள்.
 
அது முதல், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதைவிட, நான் அதிக அளவில் ஆசைப்பட்ட பைக் வாங்கித் தருவார்களே என்று நினைத்து எனது ஒட்டு மொத்த கவனத்தையும் படிப்பில் செலுத்தினேன்," என்று கூறுகிறார் சௌந்தரி.
 
 
பள்ளி படிக்கும்போதே பைக் டிராக்குகள் குறித்தும், அதில் ஓட்டுவது குறித்தும் பல்வேறு நண்பர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தார் சௌந்தரி
 
சௌந்தரியின் மோட்டார் பைக் ஓட்டவேண்டும் என்ற கனவு அவருடைய தெருவில் இருக்கும் நண்பர்களால் அவ்வப்போது சாத்தியமாகி இருக்கிறது.
 
முதலில் அவருடைய அம்மாவின் சாப்பாட்டுக் கடைக்கு வரும் நண்பர்கள், அந்தத் தெருவில் வசிக்கும் மெக்கானிக் நண்பர்கள் பைக் சாகசங்கள், பைக் ஓட்டுவதில் உள்ள நுணுக்கங்களைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். அதன் பிறகு கொஞ்சம் சொஞ்சமாக பைக் ஓட்டுவதில் ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. பள்ளி படிக்கும்போதே பைக் டிராக்குகள் குறித்தும், அதில் ஓட்டுவது குறித்தும் பல்வேறு நண்பர்கள் மூலம் கேட்டுத் தெரிந்து வைத்திருந்தார் சௌந்தரி.
 
“பைக் ரேசிங் மீது எனக்கு ஆர்வம் இருந்ததால் நான் பனிரெண்டாம் வகுப்பில் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தேன். அப்போதுதான் என் வீட்டில் நான் எந்த அளவிற்கு என் கனவை நேசிக்கிறேன் என்று புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். அதன் பிறகு எனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். எனக்கு அப்படியே வானத்தில் பறப்பது போல இருந்தது.
 
“நீண்ட நாட்கள் கழித்து என் கனவு நிறைவேறிய தருணம் அற்புதமாக இருந்தது. பைக் என்னுடைய கைக்கு வந்த பிறகு என் இலக்கில் நான் தெளிவாக இருந்தேன். எப்படியாவது பைக் ரேசிங்க் செய்ய வேண்டும் என்று துடித்தேன்.
 
"நான் பள்ளிப்படிப்பு முடித்ததும் நான் பெற்ற மதிப்பெண்களுக்கு என்னை மருத்தவம் படிக்கச் சொன்னார்கள். ஒருவேளை நான் படித்திருந்தால் மருத்துவர் ஆகியிருப்பேன்.
 
ஆனால் மோட்டார் பந்தய வீராங்கனை ஆவதுதான் என் கனவு என்பதால் அதை விடுத்து பொறியியல் படிப்பு சேர்ந்தேன். கல்லூரி படிக்கும்போது என்னுடைய நண்பர்கள் என் கனவு பற்றி அறிந்திருந்தார்கள்,” என்று தனது கல்லூரி நினைவுகளை அசைபோட்டார் சௌந்தரி.
 
 
வாரத்தில் 6 நாட்கள் கல்லூரி. ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர்களின் பைக் ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்துள்ளார் சௌந்தரி
 
அவரது நண்பர்கள் அவரை மோட்டார் பைக் டிராக் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு தொழில்முறை பைக் ரேஸ் ஓட்டுநர்களை பார்த்தார்.
 
“எனக்கு ஆர்வம் இன்னும் அதிகமானது. ஆனால் டிராக்கில் நான் எங்குமே பெண்களை பார்க்கவில்லை. அதனால் வீட்டில் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
 
"காரணம் நான் தடகளத்தில் சாதிக்க விரும்புகிறேன் என்று சொன்னால் அதற்குப் பெண்களில் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் நான் ரேசிங் போகப் போகிறேன் என்று என்னால் அதில் பெண்களை உதாரணம் சொல்ல முடியவில்லை.
 
"ஆனாலும் கனவை விட்டு விடாமல் வீட்டில் அவ்வப்போது நான் பார்த்த டிராக்குகள் குறித்தும், அங்கு பங்கேற்பவர்கள், அவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் குறித்தும் கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல ஆரம்பித்தேன்,” என்கிறார் சௌந்தரி.
 
கல்லூரி படிக்கும் போதே தன்னுடைய செலவுகளை தானே பார்த்துக் கொள்ளும் வகையிலும், பைக் ஓட்டும்போது தேவைப்படும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையிலும் பகுதி நேரமாக வேலைக்குச் சென்றிருக்கிறார்.
 
சில மாதங்கள் ஒரு நிறுவனத்தில் கணக்காளராகவும், சில மாதங்கள் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகே சூப் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்திருக்கிறார். வாரத்தில் 6 நாட்கள் கல்லூரி. ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பர்களின் பைக் ஓட்டுவதற்காக பயிற்சி எடுத்துள்ளார்.
 
பைக் ரேசிங் கற்றுக்கொள்ளத் துவங்கிய காலத்தில் அவரது நண்பராக இருந்த மற்றொரு பைக் ரேசர் ஆனந்த் சௌந்தரியிடம் காதலை தெரிவித்தார்
 
“என்னுடைய கனவு நனவாகும் நாளும் வந்தது. கல்லூரி படிப்பு முடித்ததும் எனக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அதில் வரும் சம்பளம் மற்றும் கடன் வாங்கி வண்டி ஓட்டுவதற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மோட்டார் வாகன பந்தய போட்டியில் பங்கேற்க ஆண்கள் பிரிவில் என்னுடைய பெயரை பதிவு செய்துவிட்டேன்,” என்கிறார்.
 
“ஆனால் அப்போதே உடன் இருந்த நண்பர்கள் எச்சரித்தார்கள். போதுமான ரேசிங் பயிற்சி எடுக்காமல், போட்டியில் பங்கேற்றால் ஆபத்து என்றும் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் அந்த வயதில் எனக்கு எதையும் காது கொடுத்து கேட்கும் அளவிற்கு பொறுமை இல்லை. சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தலைதூக்கி இருந்தது. அதனால் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்க காத்திருந்தேன்.
 
"அந்த சமயத்தில் என் நண்பராக இருந்த ஆனந்த் என்னிடம் காதலை தெரிவித்தார். அதை நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. வீட்டில் பேசச் சொன்னேன். ஏற்கனவே என்னுடைய வீட்டில் நான் பைக் ரேசிங்கில் ஆர்வமாக இருப்பதை அறிந்து கொண்டு திருமணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்கள். இவரைப் பற்றி சொன்னதும் வீட்டில் என்னை பல கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டார்கள்.” என்றார் சௌந்தரி.
 
ஒரு புறம் திருமணம் குறித்த பேச்சுக்கள் தொடங்க மறுபுறம் முதல் பைக் ரேசிங் போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தார் சௌந்தரி. பல கனவுகளுடன் போட்டியில் கலந்து கொண்டவர், போதுமான பயிற்சி இல்லாததால் முதல் போட்டியிலே டிராக்கில் விபத்துக்குள்ளாகி, அடிபட்டு சுயநினைவில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் சுயநினைவு இல்லாமல் இருக்கும் போதே அவருடைய நண்பர் ஆனந்த் பற்றி முழுமையாக விசாரித்து விட்டு அவருக்கே சௌந்தரியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் போதே திருமணம் முடிவு செய்யப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு 21 வயதில் சௌந்தரிக்கு திருமணமும் நடந்து முடிந்துவிட்டது.
 
 
பல்வேறு பைக் ரேசிங் பந்தயங்களில் வெற்றி பெற்று இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் சௌந்தரி
 
“நாம் நினைத்த பைக் ரேசிங் தான் சரியாக நடக்கவில்லை. ஆனால் ஒரு பைக் பந்தய வீரரை நாம் திருமணம் செய்திருக்கிறோம் என சற்று ஆசுவாசம் அடைந்தேன்.
 
அதன்பிறகு என்னுடைய கணவர் என் கனவுகளுக்கு முழு ஊக்கம் கொடுக்க, மீண்டும் ஒருமுறை என்னுடைய கனவை நேசிக்கத் தொடங்கி அதன் பிறகு மீண்டும் பைக் ரேசிங்கில் என் கவனத்தை செலுத்தத் தொடங்கினேன்," என்கிறார்.
 
அவர்கள் இருவருமே பைக் ஓட்டுவதால், செல்லும் இடமெல்லாம் 'Racing couple' என்று தங்களை உற்சாகப்படுத்திக்கொண்டதாகக் கூறுகிறார்.
 
திருமணமான அதே ஆண்டில் சௌந்தரியின் கணவர் 2 பைக் சாம்பியன்ஷப் போட்டிகளில் ஜெயிக்க, அவர்களுக்குக் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. பிறகு அவரது கணவர் தொழில்முறையாக சௌந்தரிக்கு பயிற்சி அளிக்க அவரும் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டதாக உற்சாகமாகச் சொல்கிறார்.
 
பல்வேறு கட்டப் பயிற்சிகளுக்கு பிறகு பைக் ரேசிங்கில் பல்வேறு சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்று அசத்தி இருக்கிறார் சௌந்தரி. சாம்பியன்ஷிப்பில் முதல் பெண்கள் ரைடர், வ்ரூம் டிராக் சாம்பியன், தேசிய டிராக் ரன்னர் அப் சாம்பியன், அனைத்து மகளிர் ஹோண்டா ஆதரவு  பந்தயத்தில் இரண்டாவது runner up என பல்வேறு வெற்றிகளைப் பெற்று இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
 
பெண்கள், பைக் ரேசிங், சாகசம், பெண் சாதனையாளர், விளையாட்டு
 
118 மணி நேரத்தில் 5,900கி.மீ. தங்க நாற்கரச் சாலைகளைக் கடந்த வேகமான பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார் சௌந்தரி
 
அதேபோல், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களை —16,210 கி.மீ — 42 நாட்களில் கடந்த முதல் பெண் பைக் ரேசர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
 
மேலும் 118 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள 5,900கி.மீ தங்க நாற்கரச் சாலைகளை கடந்த வேகமான பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார் சௌந்தரி.
 
இப்போது பைக் ரேசிங்கில் சாதிக்க நினைக்கும் இளைய தலைமுறைக்கு தொழில்முறை பயிற்சிகளைக் கொடுக்க நினைத்து AS Motor Sports என்ற ரேசிங் பள்ளியையும் கணவரோடு இணைந்து தொடங்கி இருக்கிறார்.
 
“நான் பைக் ரேசிங் போகவேண்டும் என்று நினைத்து சொந்தமாகவே பயிற்சி எடுக்கத் துவங்கி, பின்னர் நண்பர்கள் மூலம் பயிற்சி எடுத்து, அதன் பின்னர் தொழில்முறையாக பயிற்சி எடுத்து சாதிப்பதற்குள் பல வருடங்கள் கடந்துவிட்டது.
 
ஆனால் இப்போது உள்ள தலைமுறை, காலத்தை வீணாக்காமல், ஆரம்பத்திலேயே அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி இத்துறையில் அவர்களை சாதனை படைக்க வைக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்,” என்று சொல்கிறார் சௌந்தரி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்