விமானியாவது எப்படி? லட்சங்களில் சம்பளம் பெறும் வேலையில் எப்படி சேருவது?

வியாழன், 6 ஜூலை 2023 (10:44 IST)
விமானம் என்றாலே நம்மில் பலருக்கும் பிரமிப்புதான். விமானியானால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் என கேள்விப்பட்டிருப்போம். குழந்தை பருவத்தில் விமானியாக வேண்டும் என கனவு கண்டிருப்போம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் வாழ்க்கையின் வேறு திசைகளில் ஓடிக்கொண்டிக்கலாம். தொழில்முறை விமானியாவது என்ன அவ்வளவு கடினமா? எவ்வளவு செலவாகும்? என்ன படிக்க வேண்டும்? உங்களுக்கு விமானியாக வேண்டும் என்கிற கனவு இருந்தால் அதை நனவாக்க உதவுகிறது இந்தக் கட்டுரை.
 
தனியார் ஏர்லைன்ஸ் விமானத்தில் துணை விமானியாக பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ப்ரிய விக்னேஷ் பிபிசி நியூஸ் தமிழுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. சரி, பறக்கலாமா...
 
விமானியாக நீங்கள் கடக்க வேண்டிய 5 படிநிலைகள்
அடிப்படை பாடப்பிரிவுகளில் தேர்ச்சி
உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி
200 மணி நேரம் விமான பயிற்சி
குறிப்பிட்ட ரக விமானத்தில் பயிற்சி பெற்ற அனுபவம் (Type Rating)
 
விமானியாவதற்கு அடிப்படை கல்வித்தகுதி என்ன?
விமானத்தை எந்த ஒரு தனிநபராலும் அவ்வளவு எளிதாக இயக்கிவிட முடியாது. விமானியாக வேண்டும் எனில் அதற்கு பல்வேறு திறன்களும் தகுதிகளும் தேவை. பல படிநிலைகளும் உள்ளன. இதில் முதலாவது அடிப்படையான கல்வி.
 
+2 தேர்வில் கணிதம், இயற்பியல், பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வேளை டிப்ளமோ அல்லது இதர பாடப்பிரிவுகள் எடுத்து படித்திருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. திறந்த நிலை பள்ளிகள் மூலம் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
 
ஏரோனாடிக்கல் எஞ்சினியரிங் படித்தால்தான் விமானியாக முடியும் என்பது அல்ல. பொறியியல் பயிலாமல் நேரடியாகவே விமானப் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து உங்கள் கனவை நனவாக்கலாம் என்கிறார் துணை விமானி ப்ரிய விக்னேஷ்
 
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆவதற்கு UPSC தேர்வுக்கு தயாராவது போன்றே விமானியாவதற்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) விண்ணப்பித்தல்
விமானியாக நினைக்கும் மாணவர்கள் முதலில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் நமது ஆவணங்கள், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பதிவேற்ற வேண்டும். இதனை வெற்றிகரமாக முடித்த பின், தனிப்பட்ட டிஜிட்டல் எண் வழங்கப்படும். (Unique Number/ID)
 
விமானத்துறையில் தொடர்ந்து பயணிப்பவர்களுக்கு இந்த எண் மிகவும் அவசியமானது. இது இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிப்பது, உரிமை பெறுவதும் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும்.
 
விமானியாக உடல்தகுதி எப்படி இருக்க வேண்டும்?
முதல் வகுப்பு, 2ம் வகுப்பு (Class 1, Class 2) என இரண்டு கட்ட உடற்தகுதித் தேர்வுகள் உள்ளன. விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அங்கீகாரம் பெற்ற மருத்துவ பரிசோதனைக் கூடங்களில் அதற்குரிய சான்று பெற்ற மருத்துவர்கள் இந்த பரிசோதனையை நடத்துவர். அவர்களின் விபரங்கள் டிஜிசிஏ இணையதளத்தில் உள்ளன.
 
கண் பார்வை, சக்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனையை முடித்து, முழு உடற்தகுதி இருப்பதாக டிஜிசிஏ சான்றிதழ் அளித்தால் மட்டுமே அடுத்தக்கட்ட பயிற்சி மேற்கொள்வதில் பயன் இருக்கும்.
உடற்தகுதியில் ஏதேனும் சவால்கள் இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனையுடன் முழு உடற்தகுதிக்கான சிகிச்சைகளை பெற்ற பிறகு, மீண்டும் பரிசோதனைக்கு விண்ணப்பிக்கலாம். முழுமையான உடற்தகுதி இல்லாமல், விமானியாக முடியாது. உடற்தகுதி சான்று கிடைத்ததும் அதனை கொண்டு விமான பயிற்சியில் ஈடுபட, மாணவ விமானி உரிமத்திற்கு (Student Pilot License) விண்ணப்பிக்கலாம். இது கிடைத்தால் மட்டுமே பயிற்சி விமானங்களை இயக்க முடியும்.
 
தேர்வு முறை எப்படி இருக்கும்?
விமானியாவதற்கு தியரி, செயல் முறை என இரு கட்ட தேர்வுகள் உள்ளன. இரண்டிலும் தேர்ச்சி பெறுவது அவசியம். தியரி பாடங்களை பொருத்தவரை, 5 பாடப்பிரிவுகள் உள்ளன. வானிலையியல் (Meteorology), காற்று ஒழுங்கு முறை (Air regulation) விமான வழிப்பாதை (Air navigation) பொது தொழில்நுட்பம் (Technical general) வானிலை தொலைபேசி (Radio telephoney) ஆகியவை ஆகும். முதல் 4 தேர்வுகளை டிஜிசிஏ நடத்துகிறது. வானிலை தொலைபேசி தேர்வை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சகம் நடத்துகிறது.
 
மேற்கண்ட பாடங்களில் தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகளுக்குள் விமானப் பயிற்சியிலும் தேர்ச்சியாக வேண்டும். தியரி பாடங்களில் தேர்ச்சி பெற்ற பிறகே செயல்முறைத் தேர்வில் பங்கேற்பது நல்லது. தியரி பாடங்களில் முழுமையான தேர்ச்சியின்றி செயல்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்பதாலும் பலன் கிடையாது.
 
செயல்முறைத் தேர்வை பொருத்தவரை, விமானப் பயிற்சி பள்ளியில் சேர்ந்து 200 மணி நேரம் விமானத்தை ஓட்டியிருக்க வேண்டும். விமானத்தை ஓடு பாதையில் செலுத்துவது, டேக் ஆஃப் செய்வது, தரையிறக்குவது, இரவு நேரத்தில் விமானத்தை இயக்குவது உள்ளிட்டவை இதில் அடங்கும். இதை முடித்த பிறகு நாம் கமெர்சியல் ஓடுநர் உரிமத்திற்கு (Commercial Pilot License) விண்ணப்பிக்கலாம்.
விமானப் பயிற்சி பள்ளியில் இணைதல்
விமானப் பயிற்சி பெற விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பயிற்சி பள்ளிகள் இந்தியா முழுவதும் உள்ளன. அரசு, தனியார் என இரண்டுமே பயிற்சிகளை வழங்குகின்றன. விமானப் பயிற்சி பள்ளிகளின் முகவரி, என்னென்ன விமானங்களை கொண்டு பயிற்சி வழங்குகிறார்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை டிஜிசிஏ இணையதளம் மூலமாக பெறலாம்.
 
விமானப் பயிற்சி அளிப்பதில் பல மோசடிகளும் அரங்கேறுகின்றன. முறையான பயிற்சி வசதிகள் இல்லாமல், லட்சங்களில் பணம் பெற்று ஏமாற்றும் கும்பலும் உண்டு. பயிற்சி பள்ளிகள் குறித்து தீர விசாரித்துவிட்டு, முன்னாள் மாணவர்களிடம் கலந்தாலோசித்த பின், விமான பயிற்சி பள்ளிகளில் இணைவது நல்லது.
 
விமானப் பயிற்சி பள்ளியில் மொத்த தொகையையும் ஒரே தவணையில் கட்டுவது சரியான நடைமுறை அல்ல. முடிந்தளவு விமானப் பயிற்சி பள்ளியின் செயல்பாடுகளை அறிந்து 4 அல்லது 5 தவணையில் கட்டணங்களை செலுத்தலாம். ஏஜேண்ட் மூலம் அல்லாமல் டிஜிசிஏ தரவுகளின் படி நேரடியாக பயிற்சிப் பள்ளியில் சேர்வதே உகந்தது என அறிவுறுத்துகிறது.
 
விமானியாக மொத்த செலவு எவ்வளவு?
இந்தியாவைப் பொருத்தவரை, விமானப் பயிற்சிப் பள்ளியின் விமானத்தில் பறக்க ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 15,000 ரூபாய் முதல் செலவாகும். ஒவ்வொரு பள்ளிக்கும் இடையே மாறுபடும். பயிற்சி பள்ளிக்கு மட்டும் சராசரியாக 40 முதல் 80 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
 
எழுத்து, செயல்முறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, விமான நிறுவனங்களை அணுகலாம். விமான நிறுவனங்களின் தேவைக்கேற்ப, குறிப்பிட்ட ரக விமானங்களின் பயிற்சியை பெற அறிவுறுத்தப்படுவோம். இது டைப் ரேட்டிங் (Type Rating) என அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஏர் பஸ் ரக விமானத்தில் துணை விமானி வேலை தரும் ஏர்லைன் நிறுவனம், சமந்தப்பட்ட ரக விமானத்தில் பயிற்சி பெற அறிவுறுத்தும்.
 
விமான நிறுவனத்தை அணுகாமல், நாம் நேரடியாகவே சந்தை நிலவரத்தை அறிந்து குறிப்பிட்ட விமானத்தை ஓட்டி, டைப் ரேட்டிங் பயிற்சி பெறலாம். இந்த பயிற்சிக்கு இந்தியாவில் 11 - 21 லட்ச ரூபாய் வரை செலவாகும்.
 
விமானியாக வங்கிகளில் கடனுதவியும் பெறலாம். இதுதவிர, மத்திய சமூக நீதி மற்றும் முன்னேற்றத்துறை அமைச்சகம் உதவித்தொகையும் வழங்குகிறது. பயிற்சி விமானங்களை ஓட்ட ஒரு மணி நேரத்திற்கு ரூ.5000 உதவித் தொகை வழங்கப்படுவதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.
 
விமானியாக எளிய வழி
ரூ. 1 கோடி முதல் ரூ. 2 கோடி வரை பணம் வைத்திருந்தால் நேரடியாக கேடட் பைலட் திட்டம் (Cadet Pilot Program) மூலம் விமானியாகலாம்.
 
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் பல புதிய விமானிகளை உருவாக்கும் முயற்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
 
அதன் அடிப்படையில் விமானியாகும் ஆசை உள்ளவர்கள், குறிப்பிட்ட ஏர்லைன் நிறுவனத்தில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணலில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அனைத்து பயிற்சிகளையும் வழங்கி வேலையையும் தருகிறது ஏர்லைன் நிறுவனங்கள்.
 
விமானத்துறையில் வேலைவாய்ப்பு
கமெர்சியல் விமானி உரிமம் (CPL) பெற்றதும் விமான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். 5 கட்ட தேர்வுகள் நடைபெறும். எழுத்துத் தேர்வு, பைலட் ஆப்டிடியூட் தேர்வு, மன அளவை பரிசோதிக்கும் தேர்வு, குழு நேர்காணல், தனிநபர் நேர்காணல் என அடுத்தடுத்த படிநிலைகளில் நேர்காணல் நடைபெறும்.
 
இதில் தேர்ச்சி பெற்றதும் ஜூனியர் துணை விமானியாகலாம், ஜூனியர் துணை விமானி, துணை விமானி, சீனியர் துணை விமானி, பயிற்சி தலைமை விமானி, ஜூனியர் தலைமை விமானி, சீனியர் தலைமை விமானி என விமான நிறுவனங்களில் அனுபவத்திற்கேற்ப பல படிநிலைகள் உள்ளன. இதற்கு மேல், பயிற்சியாளராகவும் ஆகலாம்.
 
இந்தியாவில் ஜூனியர் துணை விமானிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 1 முதல் 2 லட்ச ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். தலைமை விமானியாகும்போது குறைந்தது 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். விமான நிறுவனங்களுக்கு ஏற்ப இது மாறுபடும்.
 
இதுதவிர, விமானியை உருவாக்கும் பயிற்றுநர்கள் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
 
வெளிநாடுகளில் வேலை செய்யும் பட்சத்தில் துணை விமானிக்கே, இந்திய மதிப்புக்கு குறைந்தது 8 - 10 லட்சம் ரூபாய் வரை துவக்கத்திலேயே சம்பாதிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்