மனைவிக்குப் பதிலாக அந்தப்புரப் பெண்களிடம் குழந்தை பெற்றுக் கொண்ட மன்னர்கள் - உண்மை வரலாறு

புதன், 5 ஜூலை 2023 (21:47 IST)
"600 ஆண்டுகளுக்கும் மேலான ஒட்டோமான் வரலாற்றில், சுல்தான்களின் தாய்மார்கள் அனைவரும் அடிப்படையில் அடிமைகளாகத்தான் இருந்தனர்," என்கிறார் யேல் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஆலன் மிகைல்.
 
மனித வரலாற்றின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றான ஓட்டோமான் பேரரசின் அரசியல் அதிகார விளையாட்டில் பெண்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது.
 
அவர்களில் பலர், சுல்தான்களின் ‘அந்தப்புரங்களில் மறைந்து’ வாழ்ந்தனர், அல்லது சுல்தான்களின் ‘இச்சைக்கு இணங்குபவர்களாக மட்டும் இருந்தனர்’ அல்லது ‘குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரங்களாக’ என்கிறார் வரலாற்றாசிரியர் எப்ரு போயார்.
 
 
கருந்துளை என்றால் என்ன? விண்வெளியின் பெரும் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
 
சுல்தான்கள், தங்கள் வாரிசுகளின் தாயாக இருக்க பெரும் அரசியல் தொடர்புகள் இல்லாத பெண்களையே விரும்பினர்
 
ஓட்டோமான் பேரரசின் சில இளவரசர்களும் சுல்தான்களும் காதலித்து திருமணம் செய்துகொண்ட போதும், பெரும்பாலான அரச திருமணங்கள் அரசியல் மற்றும் மூலோபாய ராஜதந்திரக் காரணங்களாலேயே நிகழ்ந்தன.
 
உதாரணமாக, ராஜாங்கக் கூட்டணிகளை நிறுவ, பிராந்தியத்தில் உள்ள மற்ற தலைவர்களின் மகள்கள் மனைவிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
துருக்கியில் உள்ள மத்திய கிழக்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறையில் பேராசிரியராக இருக்கும் போயர் இதை சுட்டிக்காட்டுகிறார்.
 
ஆனால், இவர்களிடையே ஒரு குறிப்பிட்ட பழக்கம் இருந்தது.
 
"சுல்தான்கள் இளவரசர்களை, வருங்கால சுல்தான்களை, தங்கள் மனைவிகள் மூலமாக அல்ல, தங்கள் அந்தப்புரப் பெண்கள் மூலம் பெற்றுக்கொண்டனர்," என்கிறார் மிகைல்.
 
அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், அடிமைகள் வசித்துவந்த அந்தப்புரத்திலிருந்து ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தார்கள்.
 
இதனால், சுல்தான்களின் மனைவிகளாக இருந்த, அரசியல் செல்வாக்கு மிக்கக் குடும்பத்தின் பெண்கள், ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்று போயர் கூறுகிறார்.
 
சுல்தான்கள், தங்கள் வாரிசுகளின் தாயாக இருக்க பெரும் அரசியல் தொடர்புகள் இல்லாத பெண்களையே விரும்பினர்.
 
இஸ்லாமிய சட்டத்தின் படி, ஒரு குழந்தை திருமண உறவின்மூலம் பிறந்ததாலும், திருமணத்திற்கு வெளியே பிறந்ததாலும், சட்டப்பூர்வமானது தான்.
 
இது, முக்கியமான தாக்கங்களைக் கொண்டிருந்தது.
 
"சுல்தானுக்கு மனைவி மூலமாக ஒரு மகனும், அந்தப்புரப் பெண்ணின் மூலமாக மற்றொரு மகனும் இருந்தால், இருவரும் அரியணை ஏறும் உரிமை பெற்றவர்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் இன்றி, அந்தப்புரப் பெண்களோடு சுல்தான்கள் குழந்தை பெறுக்கொண்டனர்," என்கிறார் போயார்.
 
சுல்தான்கள் நான்கு மனைவிகளையும் பல அந்தப்புரப் பெண்களையும் கொண்டிருக்கலாம் என்று சட்டம் அனுமதித்தது.
 
ஒரு அந்தப்புரப் பெண் ஒரு மகனைப் பெறெடுத்தால் அவள் மிகவும் சக்தி வாய்ந்தவளாக மாறினாள்
 
ராஜ்ஜியத்தைக் காப்பாற்றப் பல மகன்கள் அவசியம்
போர் வெற்றிகள் மூலமும், பிற ஆக்கிரமிப்பு முறைகள் மூலமும் பல பெண்கள் ஓட்டோமான் தலைநகருக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர் .
 
இந்தப் பெண்களில் பலர் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்று மைக்கேல் கூறுகிறார். அதாவது இப்போதிருக்கும் ருமேனியா, உக்ரைன், தெற்கு ரஷ்யா, கருங்கடல் ஆகிய பகுதிகளிலிருந்து.
 
"அந்தப்புரத்திற்குச் சென்றபின், அவர்கள் சுல்தானின் உடைமைகளாக மாறினர், சுல்தான்களுக்கு அவர்களுடன் உடலுறவு கொள்ள உரிமை இருந்தது," என்கிறார் அவர்.
 
ஆனால் ஒரு அந்தப்புரப் பெண் ஒரு மகனைப் பெறெடுத்தால் அவள் மிகவும் சக்தி வாய்ந்தவளாக மாறினாள், என்கிறார் போயார்.
 
பல குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததல், பல ஆண் வாரிசுகளை உருவாக்குவது, மிகவும் அவசியமாக இருந்தது.
 
ஒரு குறிப்பிட்ட வயதை எட்டினால், இளவரசர்கள் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் கொல்லப்படக்கூடும் என்கிறார் மிகைல்.
 
"ஓட்டோமான் சாம்ராஜ்ஜியம் வம்சாவழி சாம்ராஜ்ஜியம். ஆண் குழந்தைகள் இல்லை என்றால் எல்லாமே முடிந்துவிடும்," என்கிறார் அவர்.
 
"பல குழந்தைகள் பெற்றுக்கொள்வது சுல்தான்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. ஒரு குழந்தைக்கு ஏதாவது நடந்தால், மற்றொரு குழந்தை இருக்கும்."
 
 
அதிகாரப்பூர்வமாக, இளவரசர் நகரத்தின் ஆளுநராக இருந்தபோதிலும், யதார்த்தத்தில் அதை நிர்வகிப்பதில் பெரும் பங்கை வகித்தவர் அவரது தாய்
 
அந்தப்புரத்தில் இருந்து அதிகாரத்திற்கு நகர்ந்த பெண்கள்
 
அந்தப்புரத்தில் வசித்த ஒரு தாயும் மகனும் ‘ஒரு அணியாக’ செயல்பட்டனர் என்கிறார் பேராசிரியர் போயார்.
 
சுல்தானின் வாரிசாக வருவதற்கான போட்டியில், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வெற்றிகரமாக நிலைநிறுத்த முயன்றார்கள்.
 
“எந்த மகன் தன் தந்தையால் மிகவும் விரும்பப்படுவான்? யார் சிறந்த கல்வியைப் பெறுவது? எந்த மகன் வளர்ந்து பெரியவனாகி பேரரசில் முக்கிய பதவி பெறுவான்?" என்பதில் வாரிசுகளுக்கிடையே மட்டுமின்றி, தாய்மார்களுக்கு இடையேவும் போட்டி நிலவியது.
 
மகன்கள் 10 முதல் 15 வயதை எட்டியபோது தங்கள் அரசராவதற்குத் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக, தலைமைப் பதவிகள் வகிக்க அனுப்பப்பட்டனர். உதாரணமாக, ஒரு சிறிய நகரத்தை நிர்வகிப்பது. இதற்கு தங்கள் தாயுடனும், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களுடனும் சென்றனர், என்கிறார் மைகேல்.
 
"ஒரு நகரத்தின் ஆளுநராக நியமிக்கப்படும் 13 வயதான் சிறுவன், அத்தகைய பொறுப்பை ஏற்கத் தயாரானவன் இல்லை என்பதை நாம் அறிவோம். எனவே அச்சிறிய நகரத்தை நிர்வகிப்பதில் தாய்மார்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது," என்கிறார் அவர்.
 
அதிகாரப்பூர்வமாக, இளவரசர் நகரத்தின் ஆளுநராக இருந்தபோதிலும், யதார்த்தத்தில் அதை நிர்வகிப்பதில் பெரும் பங்கை வகித்தவர் அவரது தாய். வரலாற்றாசிரியர்கள் அதை ஆவணங்கள், நீதித்துறை பதிவுகள், கடிதங்கள் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.
 
ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு, பேரரசின் தலைநகரம்.
 
"உங்கள் மகன் சுல்தான் ஆனால், நீங்கள் ராஜமாதா ஆகிறீர்கள். நீங்கள் வம்சத்திற்குள் ஒரு உயர்ந்த நபராகிவிடுவீர்கள். இது மிகவும் சக்திவாய்ந்த நிலை. ஒட்டோமான் வரலாற்றின் வெவ்வேறு புள்ளிகளில் தாய்மார்கள் அரண்மனையில் பெரும் அதிகாரத்தைப் பெற்றிருந்தனர்," என்கிறார் மைக்கேல்.
 
"600 ஆண்டுகளுக்கும் மேலான ஒட்டோமான் வரலாற்றில், பெரும்பாலும் அனைத்து சுல்தான்களின் தாய்மார்களும் அடிமைகளாகத்தான் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் ஒட்டோமான் பேரரசில் பிறந்தவர்கள் அல்ல. அநேகமாக கிறிஸ்தவராகப் பிறந்து, அந்தப்புரத்தில் நுழைந்தவுடன், இஸ்லாத்திற்கு மாறியவர்கள்."
 
 
டோப்காபி அரண்மனை இஸ்தான்புல்லில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்
 
1478 முதல் 1856 வரை ஓட்டோமான் ஏகாதிபத்திய நீதிமன்றத்தின் நிர்வாக மையமாகவும் வசிப்பிடமாகவும் இருந்த டோப்காபி அரண்மனை இஸ்தான்புல்லில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
 
"நீங்கள் அரண்மனைக்குள் நுழையும்போது, ஒட்டோமான் பேரரசின் அரசாங்க அலுவலகங்களுக்குப் பக்கத்தில் அந்தப்புரம் இருப்பதைக் காணலாம்," என்கிறார் மைக்கேல்.
 
எனவே, பெண்கள் ‘அதிகார மையத்தில்’ இருந்தனர், சுல்தானுக்கும், பெரும் அமைச்சர்களுக்கும் மிக நெருக்கமாக இருந்தனர்.
 
"வேகமாக கற்றுக் கொள்ளவும், தான் கற்றுக்கொண்டதை தன் மகனுக்கு கடத்தவும் முடிந்த தாய், அந்த உலகில் ஒரு சாதகமான பிணைப்பாக மாறினாள்," என்கிறார்.
 
வழக்கமான கட்டுக்கதைகள் மற்றும் கற்பனைகள் போலால்லாமல், ஓட்டோமான் அந்தப்புரம் கேளிக்கைக்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு பள்ளிக்கூடம் போல செயல்பட்டது, என்கின்றனர் ஆய்வாளர்கள்.
 
கருவுற்றிருக்கும் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா? - நிபுணர்கள் அறிவுரை என்ன?
 
அந்தப்புரத்தில் சிறு குழந்தைகளாக இருக்கும் போதிருந்தே அவர்கள் தங்களை சிம்மாசனத்திற்கான போட்டியாளர்களாகக் காண பயிற்சி பெற்றனர்
 
 
வாரிசுப் போட்டியில், ஒன்றுவிட்ட சகோதரர்கள் எதிரிகளாக மாறினர்.
 
"அவர்கள் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஏனென்றால் அவர்கள் ஒரே தந்தையைப் பகிர்ந்து கொண்டாலும், எப்போதும் போட்டியாளர்களாகவே இருந்தார்கள்," என்கிறார் மைக்கேல்.
 
"அந்தப்புரத்தில் சிறு குழந்தைகளாக இருக்கும் போதிருந்தே அவர்கள் தங்களை சிம்மாசனத்திற்கான போட்டியாளர்களாகக் காண பயிற்சி பெற்றனர்," என்கிறார்.
 
பல ஆண்டுகளுக்குப் பிறகு, பதின்ம வயதினராக, அவர்கள் வெவ்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டதன்மூலம், அவர்களுக்குள் நெருங்கிய உறவு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு குறைந்தது.
 
"ஒரு மகன் அரியணை ஏறும் வாய்ப்பைப் பெற்றவுடன், அவனது போட்டியாளர்களை அகற்றவேண்டியது அவசியமாகிறது, அதாவது அவனது ஒன்றுவிட்ட சகோதரர்களை," என்கிறார்.
 
உதாரணமாக, முதலாம் சலீம் எனும் சுல்தான், அரியணை ஏறிய உடனே அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவரைக் கொன்றார்.
 
 
உண்மையில் ‘சுல்தானின் விருப்பமானவர்களாக’ ஓட்டோமான் அந்தப்புரப் பெண்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த தங்கள் முன்னோடிகளை விட அதிக அரசியல் சக்தியைக் கொண்டிருந்தனர், என்று பேராசிரியர் போயர் கூறுகிறார்.
 
"சுல்தானின் இதயத்தில் நுழைந்ததன் மூலம், அவர்கள் அரசியல் அதிகாரத்திற்குள் நுழைந்தனர்."
 
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: யுக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்த ரோக்ஸெலானா எனும் பெண். சுல்தான் சுலைமானின் அன்பைப் பெற்ற ஒரு அடிமைப்பெண்.
 
இஸ்தான்புல்லில் கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்ட பிறகு, அவள் ஒரு இளம்பெண்ணாக சுலைமானின் அரண்மனைக்கு வந்தாள்.
 
அவள் அவனுக்கு மிகவும் பிடித்தமானவளானாள், பிறகு அவனுடைய மனைவியாகி, அவனுடைய பல குழந்தைகளின் தாயானாள்.
 
 
ஆனால் முக்கியமான ஒரு விவரம்: 1520 மற்றும் 1566 ஆண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்த சுலைமானுக்கு, ஏற்கனவே மற்றொரு பெண்ணுடன் ஒரு மகன் இருந்தான். முஸ்தபா தனது வாரிசாக வருவதற்கு உறுதியான வேட்பாளராக இருந்தார்.
 
"ஒரு தாயாக, ரோக்ஸெலானா ஒரு வலிமையான மற்றும் மிகவும் போட்டி மனப்பான்மையுள்ள பெண்ணாக மாறுகிறார்," என்கிறார்ப் போயார்.
 
"அவரது கையில் உள்ள மிகப்பெரிய சொத்து, சுலைமானின் அன்பு, அவர் தனது மகன்களில் ஒருவர் அடுத்த சுல்தானாவதை உறுதிப்படுத்துகிறார்."
 
முஸ்தபா ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார் என்று சுலைமானை நம்பவைத்தார் ரோக்ஸெலானா. சுல்தான் சுலைமான் முஸ்தபாவை தேசத்துரோகத்திற்காக கொன்றார்.
 
அதன்பிறகு, ரோக்செலானாவுகுப் பிறந்த இரண்டாம் செலிம் அரியணையை ஏற்றார்.
 
 
அதாவது, அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் சுதந்திரமாக இல்லாவிட்டாலும், அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைய முடிந்தது
 
"16 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிர்ந்து கிட்டத்தட்ட 17ஆம் நூற்றாண்டின் மத்திவரை, அடிமைகளாக இருந்து அரசியல் பிரமுகர்களான பெண்கள் அதிகம் இருந்திருக்கின்றனர்," என்று போயர் கூறுகிறார்.
 
"ஆனால் இந்த வகையான அடிமைத்தனம், நாம் இன்று புரிந்துகொள்ளும் அடிமைத்தனத்திலிருந்து வேறானது," என்கிறார் அவர். "அதாவது, அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் சுதந்திரமாக இல்லாவிட்டாலும், அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைய முடியும்."
 
"அடிமை என்ற வார்த்தையை நாம் கேட்கும்போது, அட்லாண்டிக் கடல் கடந்து ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்ற அடிமை வர்த்தகம் தான் நமது மனதுக்கு வருகிறது," என்கிறார் மைக்கேல்.
 
"ஓட்டோமான் பேரரசில் அடிமைத்தனம் இருந்தது, ஆனால் வேறுபட்டது,” என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்