இந்தியாவின் இடைமறிப்பு ஏவுகணைக்கு பாகிஸ்தானிடம் பதில் உள்ளதா? கட்டுரை தகவல்

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (22:47 IST)
AD-1 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 
அணு ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை வானில் அழிக்கும் திறன் கொண்ட இடைமறிப்பு(Interceptor) ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளது. இந்த தற்காப்பு பாலிஸ்டிக் ஏவுகணை டிஆர்டிஓவால் தயாரிக்கப்பட்டது. ஒரிசாவை ஒட்டிய கடலில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ள ஏவுகணை ஆய்வகத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் இதை ஒரு 'வெற்றிகரமான சோதனை' என்று அதிகாரிகள் வர்ணித்துள்ளனர்.

 
இந்த ஏவுகணைக்கு 'AD-1' என்று பெயரிடப்பட்டுள்ளது.

 
இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் டிஆர்டிஓ, AD-1 பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு இடைமறிப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஏவுகணை இரண்டு-கட்ட உறுதியான மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இலக்குகளை துல்லியமாக எட்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு, வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
இந்த இடைமறிப்பு ஏவுகணையில் முற்றிலும் புதிய வகையிலான நவீன தொழில்நுட்பம் உள்ளது. சில நாடுகளிடம் மட்டுமே இந்த திறன் இருக்கிறது. இது நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் திறனை மேலும் மேம்படுத்தும் என்று இந்த சோதனைக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

 
 
புமியின் வளிமண்டலத்திற்கு உள்ளேயும், வெளியேயும்,அணு ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை 15-25 கிமீ உயரத்தில் இருந்து 80-100 கிமீ உயரம் வரையில் தாக்கி அழிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 
பாகிஸ்தான் இப்போது என்ன செய்யப்போகிறது?
தற்போது இந்த ஏவுகணையை எந்த பெரிய தளத்திலும் நிறுவும் திட்டத்தை அரசு தவிர்த்து வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன. இதை உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

 
 பதிலுக்கு பாகிஸ்தான் மேலும் நவீன அணுகுண்டுகளை உருவாக்க முயற்சிக்கும் அல்லது இந்தியாவின் இடைமறிப்பு ஏவுகணைக்கு ஒரு மாற்றை உருவாக்க முயற்சி செய்யக்கூடும் என்பதாலும் இதன் நிறுவல் பற்றிய அறிவிப்பு தவிர்க்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது.

 
இதற்கான ஏற்பாடுகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்தன. ஆனால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பிற செலவுகள் காரணமாக இறுதி வடிவம் கொடுக்கத்தாமதமானது என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி பிபிசியிடம் தெரிவித்தார்.

 
2000 கிமீ தொலைவில் உள்ள எதிரி ஏவுகணைகளை கண்டறிந்து அவற்றை வானில் அழிக்கும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவது டிஆர்டிஓவின் முதல் கட்ட திட்டத்தில் அடங்கும்.

 
ஆனால் தற்போது 2-வது கட்டத்தின் கீழ் சோதனை செய்யப்பட்டுள்ள இந்த ஏவுகணையின் தாக்கும் திறன்  5000 கி.மீட்டர் வரை உள்ளது.
 
 

 
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் கருத்தில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராகுல் பேடி கூறுகிறார். அணு ஆயுத சக்திகளான இரண்டு எதிரி நாடுகளால் சூழப்பட்ட உலகின் ஒரே நாடு இந்தியா.

 
இந்தியாவின் சொந்த தொழில்நுட்பம்
 
“எந்த நாடும் மற்றொரு நாட்டுக்கு கொடுக்காத தொழில்நுட்பம் ஏவுகணை தொழில்நுட்பம். இந்தியா தனது தொழில்நுட்பத்தின் மூலம் பல ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இப்போது இந்த புதிய ஏவுகணையின் சோதனைக்குப் பிறகு இந்தப்பிராந்தியத்தில் ஏவுகணை போட்டி தொடங்கும். பாகிஸ்தானும் சீனாவும் இந்த ஏவுகணையை முறியடிக்க தங்கள் சொந்த வழியில் முயற்சிக்கும்,” என்று ராகுல் பேடி குறிப்பிட்டார்.

 
அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளில் மட்டுமே அணு ஏவுகணைகள் மற்றும் Evacs போன்ற போர் விமானங்களை  வளிமண்டலத்திற்கு வெளியே  அழிக்கும் தொழில்நுட்பம் உள்ளது என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. சமீபத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட , தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கவல்ல எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா தனது ராணுவத்தில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
இந்த அதிநவீன ரஷ்ய பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்கள், உளவு விமானங்கள், தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வானிலேயே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.
 
DRDO இந்தியாவின் மிகப்பெரிய ஏவுகணை மற்றும் தற்காப்பு ஆயுத உற்பத்தியாளர் ஆகும்.
 
ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பிருத்வி, அக்னி, திரிசூல், ஆகாஷ், நாக், நிர்பய் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்த அமைப்பால் தயாரிக்கப்பட்டவை. இந்த ஏவுகணைகள் அனைத்தும் இப்போது இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இவை ராணுவ பலத்தின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. இந்த ஏவுகணைகளில் சிலவற்றை  பிற நாடுகளும் வாங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்