'பாலியல் ஆபாசப்பட வலைத்தளங்களுக்கு பணம் செலுத்தும் கிரெடிட் கார்டுகளை முடக்க வேண்டும்'

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (08:34 IST)
தங்கள் வாடிக்கையாளர்கள் ஆபாசப்பட வலைத்தளங்களுக்கு பணம் செலுத்தும் வசதிக்கு கிரெடிட் கார்ட் நிறுவனங்கள் தடை விதிக்க வேண்டும் என சர்வதேச பிரசாரக்குழு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

பாலியல் சுரண்டல்களை தடுக்கும் பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாக அந்தப் பிரசாரக்குழு கூறிக்கொள்கிறது. இதுதொடர்பான கடிதத்தில் இதே போன்ற 10 பிரசார குழுக்கள் கையெழுத்திட்டுள்ளன.

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுவது உள்ளிட்ட பாலியல் வன்முறை மற்றும் இனவாத காட்சிகளை ஆபாச வலைத்தளங்கள் காட்சிப்படுத்துவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிரபல ஆபாசப்பட வலைதளமான பார்ன் ஹப், இந்தக்கடிதம் தவறாக இருப்பது மட்டுமல்லாமல், இதில் தவறாக வழிநடத்தும்படியான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிபிசியிடம் கருத்து தெரிவித்த மாஸ்டர்கார்டு நிறுவனம், அந்தக்கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தங்கள் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் யாரேனும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்தால், அவருக்கான கிரெடிட் கார்டு சேவை நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

விஸா, மாஸ்டர் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 10 கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு இந்தக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த பிரசாரக்குழுக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளன. ஆபாச வலைத்தளங்களுக்கு பணம் செலுத்தும் வசதிகளை கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்