தோனி செய்த இமாலய தவறு: நிசப்தமான சேப்பாக்கம் மைதானம் - இடியாப்பச் சிக்கலில் சி.எஸ்.கே.

Webdunia
திங்கள், 15 மே 2023 (11:14 IST)
ரிங்கு சிங், நிதிஷ் ராணா இருவரின் நங்கூரம் பாய்ச்சிய ஆட்டம், சிஎஸ்கே அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதில் மிகப்பெரிய பிரேக் போட்டுள்ளது, அதேநேரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆப் வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளது.
 
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 61-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 144 ரன்களை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
 
சிஎஸ்கே பேட்டிங் சறுக்கல்
சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை சொந்த மண்ணில் பேட்டிங்கில் நேற்று கோட்டைவிட்டது. இதுபோன்ற ஆடுகளத்தில் வெற்றியை டிபெண்ட் செய்வதற்கு குறைந்தபட்சம் 180 ரன்களாவது தேவை, ஆனால், 144 ரன்கள் சிஎஸ்கேவுக்கு எந்தவிதத்திலும் போதாது.
 
அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியில் நேற்று எந்த வீரர்களும் குறிப்பிடத்தகுந்த பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. கடைசி நேரத்தில் ஷிவம் துபே-ஜடேஜா ஜோடி 68 ரன்கள் சேர்த்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.
 
நல்ல தொடக்கம் அளித்தபோதிலும் நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. 7வது ஓவர்கள் முதல் 14 ஓவர்கள் வரை சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் மட்டும்தான் சேர்த்தது.
 
இதுபோன்ற ஆடுகளங்களில் சிஎஸ்கே நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைப்படுத்தியபின் ஷாட்களை ஆட வேண்டும். ஆனால், களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்களை ஆட முயன்று ராயுடு, கெய்க்வாட், மொயின் அலி போன்றோர் விக்கெட்டுகளை இழந்தனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் பலமுறை கொல்கத்தாவின் வருண் சக்கரவர்த்தி விளையாடி இருப்பதால் சிஎஸ்கே வீரர்களுக்கு எவ்வாறு பந்துவீசுவது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தார். இதனால் சிஎஸ்கே அணியின் முதல் இரு விக்கெட்டுகளான கெய்க்வாட்(17ரன்கள்) ரஹானே(16) ஆகியோரை தனது கேரம் பால் மூலம் சாய்த்தார்.
 
சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஷர்துல் தாக்கூர், தன்னால் முடிந்த சேதாரத்தை சிஎஸ்கேவுக்கு அளித்து, கான்வே(30) விக்கெட்டை காலி செய்தார்.
 
கடந்த 8 போட்டிகளில் பந்துவீசி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்த சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன், நேற்று ஃபார்முக்கு வந்து சிஎஸ்கேவுக்கு தலைவலியாக மாறிவிட்டார். நரேன் பந்துவீச்சில், அம்பதி ராயுடு(4), மொயின் அலி(1) ஆகியோர் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தனர்.
 
தேவையில்லாத ஷாட்கள்
ராயுடு, மொயின் அலி இருவரும் நரேன் பந்துவீச்சை கணித்து ஆடவில்லை. இருவருக்கும் வீசப்பட்ட பந்துகள் ஒரே மாதிரித்தான் என்றாலும் வேகத்தில் வேறுபாடு இருந்தன. ராயுடு செட்டில் ஆகாத நிலையில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றிருக்க கூடாது, சிஎஸ்கே அணி தடுமாறிவரும்போது விக்கெட்டை நிலைக்க வைக்கவே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து ஸ்வீப் ஷாட்டை ஆடியதால், பந்து மெதுவாக வந்து க்ளீன் போல்டாகினார்.
 
மொயின் அலி, பேக்புட் எடுத்து நரேன் பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து மெதுவாக வரும் என நினைத்த மொயின் அலியை ஏமாற்றி சர்ரென வந்ததால், அவரால் சமாளிக்க முடியவில்லை, பந்து ஸ்டெம்பை பதம்பார்த்தது. இருவருமே பந்தை கணித்து ஆடத் தவறி, மோசமான ஷாட்களை ஆடினர்.
 
இதனால் 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. குறிப்பாக 61 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை இழந்திருந்த சிஎஸ்கே அணி, அடுத்த 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
 
துபே மட்டும் இல்லாவிட்டால்...
ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜடேஜா, துபே ஜோடி சிஎஸ்கே அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஜடேஜா நிதானமாக ஆட, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் துபே பெரிய ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார்.
 
கடைசி இரு டெத் ஓவர்களை ராணா சுழற்பந்துவீச்சாளர்கள் வருண், சுயாஸைப் பயன்படுத்தினார். இந்த ஓவர்களைப் பயன்படுத்திய துபே, 31 ரன்களைச் சேர்த்தார். இந்த ஓவர்களை கவனத்துடன் வருண், சுயாஸ் வீசியிருந்தால், சிஎஸ்கே ஸ்கோர் இன்னும் குறைவாக இருந்திருக்கும்.
 
ஜடேஜா இன்னும் பழைய ஃபார்முக்கு வரவில்லை. சுழற்பந்துவீச்சாளர்களை சமாளித்து ஆடுவதற்கும் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டார். வருண் அரோரா வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
 
தோனியின் வருகையும் சேப்பாக்கமும்
ஜடேஜா எப்போது ஆட்டமிழந்தாலும், சேப்பாக்கம் மைதானத்தில் விசில் சத்தம், கரகோஷம், தோனி, தோனி என்ற சத்தம் காதைப் பிளக்கும் அது நேற்றும் இருந்தது.
 
தோனி களத்துக்கு வந்தாலும் 2 பந்துகளைத் தான் சந்திக்க முடியும். இருப்பினும் அதிகபட்சமாக 2 சிக்ஸர்களைப் பார்க்கலாமே, தோனியின் பேட்டிங்கை பார்க்கலாமே என்ற ரீதியில் ரசிகர்கள் உச்ச சுதியில் கோஷமிட்டனர்.
 
தோனி சந்தித்த முதல் பந்து வைடாக மாறியது. 5வது பந்தை அரோரா நோபாலாக வீசினார். இதனால் ப்ரீஹிட்டில் தோனியின் சிக்ஸரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
 
ஆனால், அரோரா வீசிய பந்தில் தோனி க்ளீன் போல்டாகினார். இதைப் பார்த்த சேப்பாக்கம் ரசிகர்கள் அனைவரும் மவுனமாகினர், சில வினாடிகள் சேப்பாக்கம் அரங்கமே மவுனத்தில் மூழ்கியது.
 
கடைசிப்பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 48 ரன்கள்(3 சிக்ஸர், ஒரு பவுண்டரி) சேர்த்தார்.
 
ஷாக் அளித்த கொல்கத்தா
கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசினர். குறிப்பாக வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், சுயாஷ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தனர்.
 
அதிலும் வருண் சக்கரவர்த்தி தொடக்கத்திலேயே சிஎஸ்கேயின் இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்தி ஷாக் அளித்தார். நடுப்பகுதி ஓவர்களில் இரு விக்கெட்டுகளை சுனில் நரேன் காலி செய்தார். தன்னை ஏலத்தில் கழற்றிவிட்டதற்கு பழிதீர்க்கும் வகையில், ஷர்துல் தாக்கூர் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஒருவிக்கெட்டை வீழ்த்தி சிஎஸ்கேவை கட்டிப்போட்டனர்.
 
பேட்டிங்கில் கொல்கத்தா வீரர்களின் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே குர்பாஸ்(1) ஆட்டமிழந்தார். 3வது ஓவரில் வெங்கடேஷ் (4) ரன்னிலும், 5வது ஓவரில் ஜேஸன் ராய்(12) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
 
இதனால் மீண்டும் சிஎஸ்கே ஆதிக்கம், ஆட்டத்தை கைக்குள் எடுத்துவிட்டார்களோஎ என்று எண்ணத் தோன்றியது. ஆனால் 4வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங், ராணா கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்தோடு பேட் செய்தனர்.
 
ரிங்கு, ராணா சவால் பேட்டிங்
இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் ஆப் ஸ்பின்னர்களை தோனி அதிகம் பயன்படுத்தினார். ஆனால், இது ஃபேக்பயராகியது, ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ராணா 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதனால் மொயின் அலி பந்துவீச்சை ராணா வெளுத்துவாங்கி பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட் அழுதத்தைக் குறைத்தார்.
 
பொதுவாக ரிங்கு சிங் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால், நேற்று மிகவும் நிதானமாக, சுழற்பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு ஆடி ஒற்றை, இரட்டை ரன்களாகச் சேர்த்து நங்கூரம் பாய்ச்சினார்.
 
ரிங்கு சிங் 39 பந்துகளிலும், ராணா 38 பந்துகளிலும் அரைசதத்தை நிறைவு செய்தனர். ரிங்கு சிங் 54 ரன்கள் சேர்த்தநிலையில் 18வது ஓவரில் ரன் அவுட் ஆகி விக்கெட்டை இழந்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஆனால், ரஸல், ராணா கூட்டணி இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
 
கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் “பந்து 2வது இன்னிங்ஸில் எதிர்பார்த்த அளவு டர்ன் ஆகவில்லை என்பது எங்களுக்கு சாதகமானது. எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினர், அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். நானும், ரிங்குவும் களத்தில் நின்றாலே ஆட்டம் முடிந்துவிடும் என்று எப்போதுமே நினைப்பேன், அதை முடித்துக் கொடுத்துவிட்டோம். நான் நினைத்தது நடந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
 
ப்ளே ஆப் வாசல் திறந்தே இருக்கு
ஐபிஎல் சீசனில் இதுவரை 61 லீக் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ளன. இதுவரை டெல்லி கேபிடல்ஸ் மட்டுமே ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. ஆனால், ஒரு அணி கூட ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.
 
ஒவ்வொரு அணிக்கு, மற்றொரு அணி சவால் விடுக்கும் வகையில் களத்தில் சண்டை செய்து வருவதால், ஆட்டம் கடைசிப் பந்துவரை, ட்விஸ்ட் நிறைந்ததாகவே இருக்கிறது. வரும் வாரம் ஐபிஎல் சீசனில் மெகா வாரமாக அமையும், ரசிகர்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் அதிர்ச்சியும், ஸ்வாரஸ்யத்தையும் வழங்கும் ஆட்டமாக மாறும்.
 
தொடர் வெற்றிகளைப் பெற்ற அணியைக் கூட புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருக்கும் அணி மண்ணைக் கவ்வ வைக்கலாம், ப்ளே ஆப் சுற்றில் முதலிடத்துக்கு யார் செல்லப் போகிறார்கள், 2வது இடம் யாருக்கு என்பது குறித்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
 
ஐபிஎல் கதவுகள் இன்னும் 9 அணிகளுக்கும் திறந்தே உள்ளன, எந்த அணிக்கும் ப்ளே ஆப் கதவுகள் அடைக்கப்படவில்லை. ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல பல அணிகளுக்கு நிகர ரன்ரேட் முடிவு செய்யும் சூழல் இருப்பதால், அணிகளுக்கு இடையே போட்டி வரும் வாரம் தீவிரமாக இருக்கும்.
 
சிஎஸ்கே வென்றிருந்தால்...
சென்னை சேப்பாக்கத்தில் இந்த சீசனில் சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தை நேற்று ஆடியது. சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதையும், ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதையும் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு, ரிங்கு சிங், நிதிஷ் ராணா ஏமாற்றத்தை அளித்து, மவுனத்தை பரிசாக அளித்தனர். சிஎஸ்கேயின் தோல்வியைக் காணச் சகிக்காத ரசிகர்கள் மனதுக்குள் இனம் புரியாத சோகத்துடனே அரங்கை விட்டு வெளியேறினர்.
 
ஒருவேளை சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தால், ப்ளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருக்கும். ஆனால் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்வியால், சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ப்ளே ஆப்சுற்றில் முதல் 2 இடங்களில் இடம் பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 
ப்ளே ஆப் ரேஸில் இப்படியெல்லாம் நடக்குமா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் 13 ஆட்டங்களில் 6 வெற்றிகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் நீடிக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸில் 0.256 ஆக இருக்கிறது.
 
கொல்கத்தா அணி இன்னும் ப்ளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறவில்லை, அந்த அணிக் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெறும், நல்ல ரன் ரேட்டும் அவசியம். அவ்வாறு 14 புள்ளிகள் பெற்றால், லீக் சுற்று முடியும் வரை மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
 
அதேசமயம், சிஎஸ்கே அணியை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கான பாதையை தெளிவாக்கியுள்ளது. இனிமேல் சிஎஸ்கே அணி ஒருஆட்டத்தில் வென்றாலும் 17 புள்ளிகள்தான் பெற முடியும்.
 
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி்க்கு இன்னும் இரு ஆட்டங்கள் உள்ளன, தற்போது 14 புள்ளிகளுடன் உள்ளது. இரு ஆட்டங்களிலும் மும்பை அணி வெல்லும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றில் 2வது இடத்துக்கு முன்னேற முடியும். கொல்கத்தாவின் வெற்றி, மும்பைக்கு ப்ளே ஆப் சுற்றில் டாப்-2 இடத்தை அடையும் ரூட்டை க்ளியர் செய்துள்ளது.
 
சிஎஸ்கே தோற்றால் என்னவாகும்?
உண்மையில் டாப்-2 இடத்தை சிஎஸ்கே அடைந்திருக்க வேண்டும், ஆனால், கொல்கத்தாவிடம் ஏற்பட்ட தோல்வியால் சிஎஸ்கே அணி டாப்-2 இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமே தவிர ப்ளேஆப் வாய்ப்பு கிடைக்காமல் போகவாய்ப்பில்லை. மும்பை அணியை லக்னோ அணி வீழ்த்திவிட்டால், சிஎஸ்கேவும் கடைசி லீக் ஆட்டத்தில் வென்றுவிட்டால், சிஎஸ்கே அணி 17புள்ளிகளுடன் டாப்-2 இடத்தை அடையலாம்.
 
லக்னெள அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஒன்றில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 15 புள்ளிகள் பெறும், மும்பை அணி அடுத்த இரு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, மற்றொன்றில் தோற்றால், 16 புள்ளிகள்தான் பெறும். அப்போது, 3வது மற்றும் 4வது இடத்துக்கான இடங்கள் தெளிவாகும். ஒருவேளை மும்பை அணி அடுத்த இரு ஆட்டங்களையும் தோற்றால் 4வது இடத்துக்கான போட்டி தீவிரமாக மாறும்.
 
சிஎஸ்கே அணி 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டும் 0.381 எனக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸுடன் டெல்லியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில்ல மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலை சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது.
 
ஒருவேளை சிஎஸ்கே அணி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தால், 15 புள்ளிகள்தான் பெறும், ரன்ரேட்டும் குறைந்துவிடும். டெல்லி அணி பெறும் வெற்றியால் பலன் இல்லை என்றாலும், அந்த வெற்றி சிஎஸ்கே அணியை கடுமையாகப் பாதித்துவிடும்.
 
 
அதேநேரம், லக்னெள அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வென்று ஒன்றில் தோற்றால்கூட 15 புள்ளிகள் பெற்று நல்ல ரன்ரேட்டுக்கு வந்துவிடும். அப்போது சிஎஸ்கே அணியும் கடைசி லீக்கில் தோற்று 15 புள்ளிகளுடன் இருந்தால், லக்னெள 15 புள்ளிகள் பெற்று இருப்பதால் நிகர ரன்ரேட் முடிவு செய்யும்.
 
இவை ஊகத்தின் அடிப்படையிலான கணக்கீடுதான். இவ்வாறு நடக்கும் நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அடுத்த ஆட்டத்தில் தோற்றால், மும்பை அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் வென்றால்கூட 16 புள்ளிகளுடன் டாப்-2 இடத்தைப் பெறும்.
 
ஆதலால் அடுத்து வரும் ஆட்டங்கள் எந்த அணியும் சந்திக்காத முடிவுகளைக் கொடுக்கலாம், எந்த அணியும் ப்ளே ஆப் சுற்றுக்குள் இடம் பெறலாம் என்பதால் பரபரப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்