டெல்லி வன்முறை: தீ வைத்தபோது போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (15:29 IST)
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திங்கள்கிழமை முதல் நடந்த வன்முறையின் படங்களும் வீடியோக்களும் வெளிச்சத்துக்கு வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை  மேற்கோள் காட்டி டெல்லி காவல்துறையின் பொறுப்புகள் குறித்து எழும் கேள்விகள் மேலும் அதிகரித்துள்ளன.
இந்த வன்முறையும், தீக்கிரையாக்கிய கொடூரச் செயல்களும், திங்கள்கிழமை மற்றும் அதற்கு அடுத்த நாள் அதாவது செவ்வாயன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் டெல்லியில் இருந்த சமயத்தில் இது நடைபெற்றது.
 
திங்களன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் எதிர்ப்பாளர்கள் மசூதிக்கு தீ வைத்ததைக் காண முடிந்தது. சில பகுதிகளில், பெட்ரோல் பம்புகள், பல  வாகனங்கள், கடைகள் மற்றும் சில வீடுகள் கூட எரிவதைக் காணலாம்.
 
ஜாஃபராபாத் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் இப்படி கோர வடிவை எட்டக்கூடும் என்று டெல்லி போலீசாருக்கு தெரியாதா?
 
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்கு முன்னர் டெல்லியில் வன்முறை அதிகரிக்கலாம் என்பதை உணரமுடியாத அளவிற்கு டெல்லி காவல்துறையின் பிரத்யேக  உளவுத்துறை மெத்தனமாக இருந்ததா?
 
காவல்துறையினருக்கு செயல்படுவதற்கான உத்தரவு கொடுக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இல்லையெனில்  கூட்டத்தின் முன் காவல்துறையின் முன் துப்பாக்கியை நீட்டுவதற்கான தைரியம் கலகக்காரர்களுக்கு வந்திருக்குமா?
 
இந்த கேள்விகளின் பின்னணியில், நாங்கள் சில முன்னாள் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினோம்.
 
அஜய் ராய் சர்மா, முன்னாள் கிழக்கு டெல்லி போலீஸ் கமிஷனரின் கருத்து
 
காவல்துறை என்பது மாநிலத்தின் விஷயமாகும். இதன் பொருள் மத்திய அரசு, காவல்துறையின் விஷயங்களில் தலையிட முடியாது. ஆனால் டெல்லி காவல்துறை  மட்டுமே விதிவிலக்காக மத்திய அரசின் கீழ் உள்ளது. பிற மாநிலங்களில், காவல்துறைக்கு முதலமைச்சர்தான் எல்லாமே. ஆனால் டெல்லியில் மட்டுமே நிலைமை  மாறுபட்டிருக்கிறது.
 
அரசாங்கத்தின் 'வலுவான கை' என்று கருதப்படுவது காவல்துறை. அதனால் தான் வலுவான கைகளைக் கொண்டு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
காவல்துறை என்பது சக்தி வாய்ந்த ஆயுதம். வழக்கமாக மாநில அரசின் கைகளில் உள்ள இந்த அதிகாரம், டெல்லியில் மட்டுமே மத்திய அரசின் கைகளில் உள்ளது.  கையில் இருக்கும் சாதனத்தால் தானாக எதையும் செய்ய முடியாது, அதை யாராவது இயக்கவேண்டும்.
 
நாட்டில் சட்டப்படி தவறாக கருதப்படும் எந்தவொரு குற்றமும் காவல்துறையினருக்கு முன்னால் நடந்தால், அது தொடர்பான நடவடிக்கையை அவர்கள் எடுக்க  வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் இந்த நடைமுறை படிப்படியாக அருகி வருகிறது.
 
நாங்கள் பணியில் இருந்த காலத்தில், முதலில் நடவடிக்கை எடுப்போம், பின்னர் சூழ்நிலையின் அடிப்படையில் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று  விளக்கம் கொடுப்போம். ஆனால் இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முதலில் அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது.
 
காவல்துறை ஏன் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது எனக்கு புரியவில்லை. அவர்கள் (காவல்துறை) தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்களா, அவர்களது கைகள்  கட்டப்பட்டிருந்ததா?
 
காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை என்ற நிலையில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது ஒரு தீவிரமான விஷயம். இதேபோல், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்காத நிலையில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அது இன்னும் தீவிரமானது.
 
இரண்டுவிதமான போலீசிங் உண்டு. எளிதாக சொல்ல வேண்டுமானால், காவல்துறையினரின் முன் இரண்டு வகையான தெரிவுகள் உள்ளன. ஒன்று  எதிர்வினையாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, மற்றொன்று தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது.
 
ஒரு சம்பவம் நடந்தபின் அங்கு சென்று வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால், அது எதிர்வினையாற்றும் பாணி ஆகும். தடுப்பு காவல்துறைப் பாணி என்பது, உளவுத் தகவல்களை போலீசாரே சேகரித்து, சம்பவம் நடப்பதற்கு முன்னரே நடவடிக்கைகள் எடுப்பது குற்றத்தை தடுப்பது ஆகும்.
 
தவறுகள் நடப்பதற்கு முன்னரே எடுக்கப்படும் தடுப்பு காவல்துறை பாணியை தற்போது பின்பற்றவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், எதிர்வினையாற்றும்  காவல்துறையினரின் நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
நீரஜ் குமார், முன்னாள் கிழக்கு டெல்லி போலீஸ் கமிஷனர்
 
டெல்லி காவல்துறையிடம் வன்முறை மற்றும் தீ வைக்கும் சதித்திட்டம் பற்றிய உளவுத்துறை தகவல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் பெரிய அளவிலான  கலவரம் ஏற்படும் வரை ஏன் காத்துக் கொண்டிருந்தார்கள்?
 
டெல்லி முழுவதிலும் சட்டத்திற்கு எதிரான சூழ்நிலை உள்ளது, பலர் இந்த சூழ்நிலைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள், இதில் எதிர் கட்சிகள் மற்றும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளும் அடங்கும்.
 
இதுபோன்ற சூழ்நிலையில், ஏதேனும் வன்முறை நடந்தால், ஒவ்வோர் இடத்திலும் காவல்துறையினரை நிறுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்துவதும் சற்று கடினம். எனவே, இதற்கு காவல்துறை பொறுப்பு என்று சொல்லிவிடமுடியாது.
 
இப்போது எழும் மற்றொரு கேள்வி, காவல்துறையினர் எவ்வளவு நடவடிக்கை எடுத்தார்கள் என்பதே. காவல்துறையினர் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் அல்லது எடுக்கவில்லை என்பதை, தொலைகாட்சிகள் காட்டும் காட்சிகளின் அடிப்படையில் மட்டுமே சொல்லிவிட முடியாது என்பது உறுதி.
 
காவல்துறை அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது என்பதை பொருத்தவரை, அதற்கான வாய்ப்புகள் எப்போதுமே இருப்பதுதான். ஆனால்  காவல்துறையால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அது ஏதோவொரு இடத்தில் தோல்வியுற்றது என்றே நிச்சயமாக நம்பப்படும்.
 
மத்திய அரசுக்கு பதிலாக டெல்லி அரசாங்கத்தின் கீழ் டெல்லி காவல்துறை இருந்திருந்தால், முன்னேற்றத்தின் அடிப்படையில் எந்த வித்தியாசமும்  இருந்திருக்காது, ஆனால் செயல்பாடுகள் மேலும் மோசமாக இருந்திருக்கும்.
 
உதாரணமாக, உத்தரப்பிரதேச காவல்துறையைச் சொல்லலாம். அல்லது காவல்துறை தவறாகப் பயன்படுத்தப்படுத்தும் வேறு பல மாநிலங்களையும் சொல்லலாம். இங்குள்ள காவல்துறை மாநில அரசின் கீழ் செயல்படாமல் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது என்பதில் டெல்லி மக்களுக்கு மகிழ்ச்சி தான் ஏற்படவேண்டும்.
 
காவல்துறையை தவறாகப் பயன்படுத்த மாநில அரசுகளுக்கு அதிக நேரம் இருக்கிறது. முழு நாட்டையும் நிர்வகிக்கும் பணியை புறக்கணித்துவிட்டு தலைநகரின்  காவல்துறையினருக்காக நேரத்தை செலவிட மத்திய அரசுக்கு போதுமான நேரம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்