உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த ரிக்கி பாண்டிங் பயிற்சியிலும் இளம் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும் வெற்றி மேல் வெற்றி பெற்று, மும்பையை முந்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் வீழ்த்தி அபாரமான வெற்றியை சுவைத்தது டெல்லி.
185 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் வெறும் 138 ரன்கள்தான் எடுத்தது.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என இரு அணிகள், இதுவரை தாங்கள் விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கில் தோல்வி அடைந்துள்ளன.
இந்த சீசனில் தனது முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இதே மைதானத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவங்கியது ராஜஸ்தான்.
அடுத்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் 223 ரன்களை துரத்தி வென்று, ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சேசிங்கை வெற்றிகரமாக செய்த அணி எனும் பெயரைப் பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் .
ஒரு கட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் நேற்று அதே மைதானத்தில் டெல்லியிடம் பரிதாபமாகத் தோற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 37 ரன்கள், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 57 ரன்கள், டெல்லியுடன் 46 ரன்கள் என மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடமும் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என அறியப்படும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் விளையாடி வரும் ராஜஸ்தான் தொடர்ந்து சொதப்ப என்ன காரணம்?
தொடக்க வீரர்கள் பலரும் ராஜஸ்தானுக்கு பெரிய அளவில் ரன்கள் சேர்க்க வில்லை.
தொடக்கத்தில் களமிறங்கும் இணையை ராஜஸ்தான் அணி தொடர்ந்து மாற்றி வருவது அவர்களுக்கு பெரிதாக இதுவரை பலன் அளிக்கவில்லை.
ஓபனிங் செய்யும் இணையில் யாராவது ஒருவர் விரைவாக ஆட்டமிழந்து விடுகிறார்.
ஆரம்பகட்ட போட்டிகளில் நன்றாக விளையாடிய சஞ்சு சாம்சன் அதற்கடுத்து அனைத்து போட்டிகளிலும், அனைத்து சூழல்களிலும் அதிரடி ஆட்டம் ஆட முயன்று சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து விடுகிறார்.
நல்ல தொடக்க வீரர்கள், அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர், நம்பிக்கை தரும் இளம் வீரர்கள் நிறைந்த லோயர் மிடில் ஆர்டர் , கடைசி கட்டத்தில் பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்க விடும் திறமை படைத்த வீரர்கள் இருந்தபோதிலும் ஓர் அணியாக இணைந்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது ராஜஸ்தான் .
பந்து வீச்சிலும் சுமாராகவே செயல்படுகிறது ராஜஸ்தான் அணி. விரைவில் அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைய உள்ளார்.
ஆனால் இன்னும் ஓரிரு போட்டிகளில் தொடர்ந்து தோற்றால் ராஜஸ்தான் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதே கடினம்.
நேற்றைய போட்டியில் டெல்லி அணி ஒரு கட்டத்தில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கீழ் நடுத்தர வரிசையில் இறங்கிய வீரர்களின் பங்களிப்பால் இறுதியில் நல்ல ஸ்கோரை எட்டியது.
முதல் நான்கு பேட்ஸ்மேன்களை மட்டுமே பெரும்பாலும் நம்பி வந்த டெல்லி அணிக்கு மிடில் ஆர்டர் நேற்று கைகொடுத்தது.
டெல்லியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே என வேகப்பந்து கூட்டணியும் சரி, அஸ்வின் அக்ஸர் என சுழற்பந்து கூட்டணியும் சரி சிறப்பாக செயல்படுகிறது. ஆல்-ரவுண்டராக ஸ்டாய்னிஸ் சிறப்பான பங்களிப்பை டெல்லிக்கு வழங்கி வருகிறார்.
மீதமுள்ள எட்டு போட்டிகளில், டெல்லி மூன்று ஆல்லது நான்கில் வென்றாலே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.