பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகளும் இந்த சம்பவத்திற்கு தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு எதிராக ஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி இந்தப் பேரணிக்கு தலைமையேற்றார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இது எங்கள் மீதான தாக்குதல், நாங்கள் இதனை கண்டிக்கின்றோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. உள்துறை அமைச்சர் இங்கு இருக்கிறார், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை விரைவில் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்" என்றார்.
இந்த தாக்குதலின்போது, சுற்றுலாப் பயணிகளை காப்பாற்றியவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள் தான். மருத்துவமனையில் தங்களது ரத்தத்தை கொடுத்து உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், அடுத்தடுத்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகள் உதவி அளிக்கும் முன் காஷ்மீர் முஸ்லிம்களே உதவியாக இருந்தனர்.