கிரிக்கெட்: ரிவர்ஸ் ஸ்விங் - கலையும், அறிவியலும் இணைந்த ரகசியம்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (09:53 IST)
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால், பந்தை எச்சிலை கொண்டு பளிச்சிட செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறிய முதல் வீரராக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டோம் சிப்லே அறியப்படுகிறார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் நான்காவது நாளில் இந்த சம்பவம் நடந்தது. ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த டோம் கவனக்குறைவாக தனது எச்சிலை கொண்டு பந்தை பளிச்சிட செய்தார்.

தனது விதிமீறல் குறித்து சிறிது நேரத்திற்கு பின்னர் உணர்ந்த அவர், அணியின் நிர்வாகத்திடம் அதைக் கூறினார். பின்னர் இதுகுறித்து அம்பயர்களிடம் தெரிவிக்கப்பட்டு பந்து சுத்தப்படுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை பெரும்பாலான தருணங்களில் வீரர்கள் கடைபிடித்தாலும், போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது இதுபோன்ற சம்பவங்கள் கவனக்குறைவாக நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் 'தசை நினைவகம்'. அதாவது, பல ஆண்டுகளாக செய்து வரும் விடயத்தை, மீண்டும் மீண்டும் செய்வதைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக, நீங்கள் 10 ஆண்டுகளாக வாகனம் ஓட்டினால், கியர்களை மாற்றும்போது உங்கள் கால் தானாகவே கிளட்சை நோக்கி நகரும்.

அதேபோல், ஒரு கிரிக்கெட் போட்டியின்போது பந்து ஏதேனும் ஒரு ஃபீல்டர் அல்லது பந்து வீச்சாளரிடம் சென்றால், அவர்கள் அதை அடிக்கடி எச்சிலை கொண்டு மெருகூட்டி, பந்து வீச்சாளர் அல்லது விக்கெட் கீப்பரிடம் திருப்பித் தருகிறார்கள். இவை அனைத்தும் ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங்கிற்காக செய்யப்படுகின்றன. இது விளையாட்டு வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களால் 'தி டார்க் ஆர்ட் ஆஃப் கிரிக்கெட்' என்றும் அழைக்கப்படுகிறது.

பந்து ஏன் எச்சிலை கொண்டு மெருகூட்டப்படுகிறது?
கிரிக்கெட்டில் பந்தின் ஒரு பகுதியை பளபளப்பாகவும் கனமாகவும் வைத்திருப்பதுதான் அதில் எச்சிலை கொண்டு பளிச்சிட செய்வதற்கான முக்கிய காரணம். தொடர்ந்து பல முறை இதைச் செய்வது பந்தின் ஒரு பகுதியை கரடுமுரடாகவும், மற்றொன்று பகுதியை வழவழப்பாகவும் ஆக்குகிறது.

அதாவது, ஒரு பகுதி அதன் மற்றொரு பகுதியைவிட சற்று கனமாக இருக்கும். இது கிரிக்கெட்டின் மொழியில் ஸ்விங் என்று அழைக்கப்படும் பந்தை காற்றில் சுழல வைக்க உதவுகிறது.

இது பந்துச்சாளர்களுக்கு சாதாரண ஸ்விங் செய்வதற்கு மட்டுமின்றி போட்டியின் கடைசி கட்டங்களில் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் லேட் ஸ்விங் செய்வதற்கும் உதவுகிறது.

ஒரு ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சாளருக்கு 'தூஸ்ரா' வகை பந்துவீச்சு செய்வது எவ்வளவு கடினமோ, அதே போன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்வது என்பது விளையாட்டின் மிகவும் கடினமான அம்சங்களில் ஒன்றாகும்.

லேட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் சாதாரண ஸ்விங் அனைத்தும் பந்தின் மடிப்பு அல்லது மடிப்பு பிடியைப் பொறுத்தது.

பந்தின் ஒரு பக்கத்தை மெருகூட்டுவதே எல்லா வகையான ஸ்விங்கிங்கிற்கும் தேவையான ஒன்று. இதனால்தான் வீரர்கள் பெரும்பாலும் பந்தின் மற்ற பகுதியை உடனடியாக கடினமாக்க முயற்சிக்கிறார்கள். இருப்பினும், இது விளையாட்டின் விதிகளுக்கு எதிரானது ஆகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பந்தின் ஒரு பகுதியை மெருகூட்டுவதற்கான நீண்ட செயல்முறைக்கு பதிலாக, இது 'பந்து சேதப்படுத்துதல்' என்று அழைக்கப்படுகிறது.

'பாகிஸ்தானியர்கள் வியர்வையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது'
எச்சிலை கொண்டு பந்தை மெருகூட்டி ஸ்விங் செய்யும் முறையை கையாண்டே 1980 மற்றும் 1990களில் இரண்டு பந்துவீச்சாளர்கள் எதிரணியின் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார்கள்.

அந்த காலகட்டத்தில், வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் ரிவர்ஸ் ஸ்விங் கலையை ஒரு ரகசியமாக வைத்திருந்தனர். அது அவர்களது பந்துவீச்சில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஏனெனில், பொதுவாகவே வேகமாக பந்துவீசும் அவர்கள் இருவருக்கும், பல்வேறு வகையான ஸ்விங்கிங்களை செய்யும் திறன் கிடைத்தது பெரும் பலனை கொடுத்தது.

இந்த காரணத்தினால்தான், வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் தங்களது தொழில் வாழ்க்கையின் இரண்டாம் பாதியில், பந்துவீச ஓடும் போது பந்தின் பிடியை மற்றொரு கையால் மறைத்துக்கொண்டார்கள்.

அவர்களின் ஸ்விங் பந்துவீச்சைப் புரிந்து கொள்ள, பேட்ஸ்மேன்கள் அவர்கள் பந்துவீசும் காணொளிகளை பார்த்து, பந்து உள்ளே வருகிறதா அல்லது வெளியே செல்கிறதா என்பதை பந்தின் பிடியில் இருந்து யூகிக்க முயன்றனர். இருப்பினும், இரு பந்து வீச்சாளர்களும் தங்கள் பிடியை மறைத்ததால் இந்த பகுப்பாய்வுகள் ஒருபோதும் வெற்றிபெறவில்லை.

ஒருகட்டத்தில் வக்கார் யூனிஸ் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை ஸ்விங் செய்ய தொடங்கியபோது, அவரும் வாசிம் அக்ரமும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுநர்களால் பந்தை சேதப்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால், இது ஒருபோதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அந்த காலத்தில், பந்தின் ஒரு பகுதியை வியர்வை மற்றும் எச்சிலை கொண்டு பிரகாசிக்க வைப்பது முழு அணியின் பொறுப்பாக இருந்தது. இதனால் வாசிமும் மற்றும் வக்காரும் பந்தை ஸ்விங் செய்து பயனடைய முடியும்.

வேகப்பந்து வீச்சாளர் சர்ப்ராஸ் நவாஸ் ரிவர்ஸ் ஸ்விங்கை கண்டுபிடித்தவராக கருதப்பட்டாலும், வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோரின் பந்துவீச்சு இந்த கலையின் உச்சமாக இருந்தது.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் செய்தியாளரான மார்ட்டின் ஜான்சன், 1992இல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட பின்னர் தி இன்டிபென்டன்ட் என்ற பிரிட்டிஷ் செய்தித்தாளில், "வாசிம் மற்றும் வக்காரைத் தவிர, வெகுநேரம் பயன்படுத்தப்பட்ட பந்தை ஸ்விங் செய்ய வைக்கும் வேகப் பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. அதே போன்று, பாகிஸ்தானியர்களின் வியர்வையில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்ற கருத்தும் உள்ளது" என்று அவர் எழுதினார்.

ஆனால் ரிவர்ஸ் ஸ்விங்கின் ரகசியம் நீண்ட காலமாக மறைக்கப்படவில்லை. தற்காலத்தில் எண்ணற்ற பந்து வீச்சாளர்களும் அதன் விவரங்களைப் புரிந்துகொண்டு அதை களத்தில் பின்பற்றுகின்றனர். அதனால்தான் நவீனகால கிரிக்கெட்டில் பந்தை எச்சிலை கொண்டு மெருகூட்டுவது இன்னும் முக்கியமானது.

வாயில் ஏதாவது மெல்லும்போதோ அல்லது இனிப்பானவற்றை பருகிய பிறகோ வீரர்கள் பந்துகளில் எச்சிலை கொண்டு மெருகூட்டுவது பலமுறை கண்காணிக்கப்பட்டது. ஐ.சி.சி விதிகளின் கீழ், இதுபோன்ற "இனிப்பானவைகளின்" மூலம் பந்தை மெருகூட்டுவது விளையாட்டின் விதிகளை மீறுவதாகும். ஏனெனில், இனிப்புகளில் பந்தின் மேற்பரப்பை அரித்து அதை கனமாக மாற்றும் பொருட்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில், பொதுவாக வேகப்பந்துக்கு ஏற்ற பிட்சுகள் தயாரிக்கப்படுவதால், சிறுவயதிலிருந்தே இருந்தே கிரிக்கெட் வீரர்கள் பந்தை மெருகூட்டுவதற்கு கற்பிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, பள்ளி மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் நடக்கும் போட்டிகளில் வீரர்கள் 'தசை நினைவகத்தை' உருவாக்குவதை உறுதிசெய்கிறார்கள்.

நான் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அதன் கிரிக்கெட் அணியில் இருந்தேன். எங்கள் பல்கலைக்கழக பயிற்சியாளர்கள் பயிற்சி போட்டிகளின் போது கூட, பந்தை தேவையின்றி தரையில் விழ செய்யக் கூடாது என்றும், பந்து ஒவ்வொருமுறை கையில் கிடைக்கும்போதும் அதை எச்சிலை கொண்டு பளிச்சிட செய்ய வேண்மென்றும் பீல்டர்களை கடுமையாக அறிவுறுத்தினர். தீவிரமாக அறிவுறுத்தப்பட்ட இந்த செயல்பாட்டை மறப்பவர்கள், பயிற்சி போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

இதுகுறித்து அறிவியல் என்ன சொல்கிறது?
பிரிட்டனிலுள்ள பாத் பல்கலைக்கழக பல்கலைக்கழகத்தின் இயந்திர பொறியியல் துறையால் இதுகுறித்து ஆய்வொன்று நடத்தப்பட்டது.

புதிய பந்து முதல் 80 ஓவர்கள் வரை பயன்படுத்தப்பட்ட பந்து வரை ஒன்பது வெவ்வேறு பந்துகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். சர்வதேச போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளை தயாரிக்கும் டியூக்ஸ் மற்றும் கூகபுர்ராவின் பந்துகளை அவர்கள் பயன்படுத்தினர்.

ஒரு சாதாரண பந்து 25 ஓவர்களுக்குப் பிறகு அதிகபட்சமாக மணிக்கு 75 மைல் வேகத்தில் ஸ்விங் ஆகுமென்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆனால் 'இனிப்பான ஒன்றை' வாயில் மென்ற பிறகு எச்சிலை கொண்டு பந்தின் ஒரு பகுதியை பிரகாசப்படுத்தினால், அது மணிக்கு 90 மைல்களுக்கு மேலான வேகத்தில் கூட ஸ்விங் ஆகும் என்று அதில் தெரியவந்தது.

பந்து அதன் அசல் நிலையில் ஓரளவுக்கு ஸ்விங் ஆகுமென்றும், ஆனால் பந்தின் வேகம் மணிக்கு 95 மைல் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும்போது மட்டுமே அது ரிவர்ஸ் ஸ்விங்காக மாறும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் பந்தை வேகமாக வீசக்கூடிய சோயிப் அக்தர், பிரட் லீ மற்றும் டேல் ஸ்டெய்ன் போன்ற வீரர்கள் ஆரம்ப ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் மாறிவரும் கிரிக்கெட்டில், அதிகமான பந்து வீச்சாளர்கள் இதுபோன்ற ஸ்விங்கை செய்தாலும் அது வருங்காலங்களில் வெறும் காணொளிகளில் மட்டுமே பார்க்கப்பட கூடிய ஒன்றாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

அதிகரித்து வரும் இருபது ஓவர்கள் போட்டிகள், ஒரு ஓவருக்கு ஒருமுறை என பத்து ஓவர்களுக்கு பந்து பந்துகளை மாற்றும் புதிய அணுகுமுறைகள் உள்ளிட்ட காரணங்களால் பந்துவீச்சாளர்கள் இந்த முறையில் ஸ்விங் செய்வதற்காக வாய்ப்பு கடினமாகி வருகிறது.

இந்த விவகாரத்தில் பந்து பயன்பாடு குறித்த விதிகளை மாற்றியமைப்பது என்பது இயலாத காரியம். ஆனால், பல்வேறு விளையாட்டுகளின் மத்தியில் கலையும், அறிவியலும் நிறைந்த கிரிக்கெட்டின் இந்த அத்தியாயம் நிச்சயம் வரலாற்றில் இடம்பிடிக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்