முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
அந்தமான் தீவுகள் அருகே இந்திய-அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட மோதல் பிரச்சினை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.
மேலும் தென் சீன கடல் பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா அந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்புகிறது.
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு மனப்பான்மைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி உள்ளது.
அத்துடன் சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தனது கடற்படையின் பலத்தை காட்டும் வகையிலும் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ், யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தென் சீன கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே உள்ள மலாக்கா நீரிணை பகுதியில் நிமிட்ஸ் போர்க்கப்பலும், இந்திய போர்க்கப்பல்களும் நேற்று (ஜூலை 20) கூட்டாக பயிற்சியில் ஈடுபட்டன.
உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான நிமிட்ஸ் அணுசக்தியில் இயங்கக்கூடியது.
மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையேயான மலாக்கா நீரிணை பகுதி சர்வதேச அளவில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிப் பாதை ஆகும். இந்த வழியாகத்தான் சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு எண்ணெய் கப்பல்கள் செல்கின்றன என அந்த செய்தி மேலும் விவரித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை எப்போது? - இந்து தமிழ் திசை
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஆகஸ்ட் 3 முதல் 5-ஆம் தேதி வரை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என இந்து தமிழ் திசை நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குள்ளாகி இருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
கோயிலின் கட்டுமானப் பணிகள், பூமி பூஜையுடன் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பூமி பூஜை திடீர் என ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அண்மையில் நடந்த அறக்கட்டளை கூட்டத்தில் ஆகஸ்ட் 3 முதல் 5-ஆம் தேதி வரை கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி மேலும் விவரித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் அபாரம் - டெஸ்ட் தொடரை சமன் செய்த இங்கிலாந்து - டைம்ஸ் ஆஃப் இந்தியா
மான்செஸ்டரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது குறித்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் உலக அளவில் விளையாட்டு போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 4 மாத இடைவெளிக்கு பிறகு நடக்கும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்ற நிலையில், 16-ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்களை குவித்து ஆட்டத்தை முடித்து கொள்வதாக அறிவித்தது.
பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களை குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்த வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 78 ரன்கள் குவித்திருந்தார்.
312 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 198 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 113 ரன்களில் வென்றது.