'இந்தியாவின் கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசி வாங்க பிரேசிலில் ஊழல்' - நெருக்கடியில் சயீர் பொல்சனாரூ

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (12:51 IST)
பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கையாண்ட விதத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசியை அதிக விலை கொடுத்து வாங்க பிரேசில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்த சில நாட்களிலேயே, தங்களிடம் ஒரு டோஸ் தடுப்பூசி வாங்க ஒரு அமெரிக்க டாலர் லஞ்சமாகக் கேட்கப்பட்டது என்று ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து பிரேசிலில் பல இடங்களில் போராட்டங்கள் தொடங்கின.

கடந்த மாதம் கோவிட்-19 காரணமாக அந்த நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்தது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக பிரேசில் உள்ளது.

பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஒப்பந்தம் ரத்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பிரேசில் சுகாதார அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் லஞ்சம் பெற்றத்தைத் தாம் மூன்று மாதங்களுக்கு முன்னரே அதிபரிடம் எச்சரித்து இருந்ததாகவும், ஆனால் அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அமைச்சகத்திலேயே பணியாற்றும் ஒருவர் அதிபர் சயீர் பொல்சனாரூ மீது குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த முறைகேட்டில் சயீர் பொல்சனாரூவின் பங்கு என்பது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று அனுமதி வழங்கியது.
 

முன்னதாக இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி வாங்க பாரத் பயோடெக் நிறுவனத்திடம் பிரேசில் சுகாதார அமைச்சகம் செய்துகொண்டிருந்த 324 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை, அந்த நாட்டின் தலைமைத் தணிக்கையாளரின் பரிந்துரையின்பேரில் செவ்வாயன்று பிரேசில் அரசு ரத்து செய்தது.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் பாரத் பயோடெக்கை விடவும் குறைந்த விலைக்கு தடுப்பூசி வழங்க முன்வந்தும் பிரேசில் அரசு அதைப் பரிசீலிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

புதனன்று பிரேசிலில் கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த அவசரகால அனுமதி கோரி பாரத் பயோடெக் அளித்திருந்த விண்ணப்பமும் போதிய தரவுகள் இல்லையென்று கூறி நிராகரிக்கப்பட்டது.

ஊழல் புகார் காரணமாக விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சரும் தெரிவித்திருந்தார்.

பாரத் பயோடெக் நிறுவனமும் முறைகேடு நடந்ததை மறுத்துள்ளது. தடுப்பூசிகள் உற்பத்தித் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின்படி தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்துக்கு சுகாதார அமைச்சகம் முன்கூட்டியே பணம் வழங்கும் என்றும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு தடுப்பூசிகளை ஒப்புக்கொள்ளப்பட்ட காலவரையறைக்குள் நிறுவனம் தயாரித்து வழங்கும் என்றும் பாரத் பயோடெக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் சயீர் பொல்சனாரூ என்ன சொல்கிறார்?

தாம் எந்த விதமான தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள சயீர் பொல்சனாரூ, தமக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகளை தொடங்குவதற்காக எதிர்க் கட்சிகள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகத் தெரிவிக்கிறார்

தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் வெளியிட்டது, பொதுமுடக்கம் மற்றும் கட்டாய முகக் கவசம் அணிதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவற்றில் தளர்வுகள் வேண்டும் என்று கூறியது, தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தத் தவறியது உள்ளிட்டவற்றின் காரணமாக சயீர் பொல்சனாரூ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார்.

பெரியவர்களில் 11% பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ள பிரேசில் நாட்டில் சூழ்நிலை மிகவும் தீவிரமாக உள்ளது என்று அந்த நாட்டின் அரசு சுகாதார முகமை சமீபத்தில் தெரிவித்திருந்தது.

பிரேசிலில் மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் கடைகள் ஆகியவை கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் பொதுவெளியில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்