தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

Prasanth K

செவ்வாய், 15 ஜூலை 2025 (13:27 IST)

குச்சனூரில் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான் கோயில் சனி பரிகாரத் தலமாக விளங்கி வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் பரிகாரத்திற்காக குச்சனூர் வந்து செல்கின்றனர். மேலும் ஆடிமாதம் நடைபெறும் 5 வார ஆடித்திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். சுவாமி வீதி உலா, கரகம் எடுத்தல், கருப்பண்ணசாமிக்கு கிடா வெட்டி என திருவிழாக்கோலமாக காட்சியளிக்கும் கோவில் கடந்த ஆண்டு திருவிழா நடத்தப்படவில்லை.

 

இந்த கோவிலை பரம்பரையாக அறங்காவலர் குழு நிர்வகித்து வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கோவில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்தது. அதை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகள் முன்னதாக கோவில் நிர்வாகத்தை மீண்டும் அறங்காவலர் குழுவிடம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை கோயில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்தக்கூடாது என்றும் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.

 

இதனால் கடந்த ஆண்டு கொடியேற்றம், திருவிழா ஏதும் நடைபெறாமல், சாமிக்கு பூஜைகள் மட்டும் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கொடியேற்றம் திருவிழா இல்லையென்றும், சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும், பக்தர்கள் வந்து தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழாக் கோலமாக காணப்படும் குச்சனூர் வெறிச்சோடி கிடப்பது பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்