குஜராத்தில் உள்ள தந்தை-மகன் ஆகிய இருவரும், தண்ணீர் விற்பனையாளரை ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடிக்க வைத்து, ஒரு தொழிலதிபரிடம் ரூபாய் 21.65 லட்சம் மோசடி செய்த நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மேசனா என்ற மாவட்டத்தில், ஜெயந்திபாய் மற்றும் அவரது மகன் கௌஷிக் படேல் ஆகிய இருவரும், தொழிலதிபர் தினேஷ் படேலை ஏமாற்றுவதற்கு திட்டமிட்டனர். இருவரும் தொழிலதிபர் தினேஷிடம் நட்புடன் பழகி வந்த நிலையில், திடீரென ஒரு நாள் தங்க வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாகவும், ரூ. 300 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறி, இதை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமே மீட்க முடியும் என்று பொய்யாக கூறி, அவர்கள், வழக்கறிஞரை நியமிக்க பணம் தருமாறு தினேஷிடம் கேட்டனர்.
தங்களுடைய பொய்யை அந்த தொழிலதிபர் நம்புவதற்காக, தண்ணீர் விற்பனையாளர் ஒருவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடிக்க வைத்து, அவரிடம் அறிமுகம் செய்து, "பறிமுதல் செய்யப்பட்ட தொகையை மீட்டு கொண்டு வந்துவிடலாம்" என்று அவரை சொல்ல வைத்துள்ளனர். இதனை அடுத்து, தினேஷ் அவர்களுக்கு ரூ. 21.65 லட்சம் கொடுத்தார். அதன் பிறகுதான் அவர் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துள்ளார்.
இதனை அடுத்து, தினேஷ் போலீசில் புகார் செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்த தண்ணீர் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். ஆனால், தந்தை-மகன் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டதாகவும், ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடிப்பதற்குத் தனக்கு ரூ. 80 ஆயிரம் கொடுத்ததாக தண்ணீர் விற்பனையாளர் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.