ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, அந்த வைரஸ் அறிகுறி மேம்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு தொற்றை தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிகப்பெரிய அளவிலான பரிசோதனை வைரஸ் தடுப்பூசி தயாரிப்பில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு முன்னோடியாக உள்ளது.
அதே சமயம், ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயாளிக்கு 95% பாதுகாப்பை வழங்குவதாக தெரிவிக்கப்படுவதால், ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி பரிசோதனை வெற்றி என்றபோதிலும் அது சற்றே ஏமாற்றமாகவும் கருதப்படுகிறது.
இதேவேளை, ஃபைசர் ,மாடர்னா நிறுவனங்களின் வைரஸ் தடுப்பு மருந்துடன் ஒப்பிடும்போது, ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசி விலை மிகவும் மலிவானது மற்றும் எளிதாக உலகின் எந்த மூலைக்கும் எளிதில் கொண்டு செல்லக் கூடியது.
இந்த தடுப்பூசி மருந்துக்கு முறைப்படி உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கினால், இந்த தடுப்பு மருந்துகள், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் அளவை இன்னும் சரியாகக் கணித்துக் கொடுத்தால், இந்த மருந்து 90% வரை பாதுகாப்பளிக்கும் என்கிறது இந்த மருந்து சார்ந்த தரவுகள்.
சராசரியாக ஒரு தடுப்பு மருந்தை தயாரிக்க 10 ஆண்டுகள் வரை ஆகும். அந்தப் பணியை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுமார் 10 மாதங்களில் செய்துள்ளனர்.
"நாம் எப்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என்பதற்கு, மற்றொரு படி முன்னேறிச் செல்ல வைத்திருக்கிறது இன்றைய அறிவிப்பு" என்கிறார் தடுப்பூசி தயாரிப்புப் பணியில் முன்னோடியாக கருதப்படும் பேராசிரியர் சாரா கில்பர்ட்.
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை 100 மில்லியன் டோஸ் அளவுக்கு பெறுவதற்கான ஆர்டரை பிரிட்டன் அரசு முன்கூட்டியே செய்துள்ளது. அதைக் கொண்டு 50 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடலாம்.
சோதனை விவரங்கள் காட்டியது என்ன?
இந்த பரிசோதனையில் 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள். 50 சதவிகிதத்தினர் பிரிட்டனில் இருந்தும், 50 சதவிகிதத்தினர் பிரேஸிலில் இருந்து கலந்து கொண்டார்கள்.
இந்த தடுப்பு மருந்தில் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் 30 பேருக்கு கொரோனா இருந்தது. டம்மி ஊசி எனப்படும் தடுப்பு மருந்து 101 பேருக்கு போடப்பட்டது. அந்த வகையில் இந்த மருந்து 70 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
"இரண்டு அதிக டோஸ் மருந்து, தன்னார்வலர்களுக்கு கொடுத்த போது, அந்த மருந்து 62 சதவிகிதம் பாதுகாப்பு கொடுத்தது. அதற்குப் பிறகு குறைந்த டோஸ் மருந்து கொடுத்த போது, பாதுகாப்பு 90 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த வித்தியாசம் ஏன் என்று தெரியவில்லை. இந்த முடிவுகளால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறோம்" என இந்த சோதனையின் முதன்மை ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஆண்ட்ரூவ் பொல்லார்ட் கூறி இருக்கிறார்.
பொதுமக்களுக்கு எப்போது கிடைக்கும்?
பிரிட்டனில் ஏற்கனவே 4 மில்லியன் டோஸ் மருந்துகள் தயாராக இருக்கின்றன.
இந்த தடுப்பு மருந்தின் பாதுகாப்பு, செயல் திறன் மற்றும் மருந்தின் தரம் போன்றவை மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு ஆராய்ந்து அனுமதிக்கும் வரை எதுவும் நடக்காது. இந்த செயல்முறைகள் எல்லாம், அடுத்து வரும் வாரங்களில் நடக்கவிருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும், பிரிட்டன் அரசு, இதற்கு முன் இல்லாத வெகுஜன நோய்த்தடுப்பு பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்க தயாராக இருக்கிறது என்றே கூற வேண்டும்.
வைரஸ் தடுப்பூசியைப் பெறுவோரில், Care home residents என்றழைக்கப்படுபவர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அதன் பின் வயதை அடிப்படையாகக் கொண்டு வைரஸ் தடுப்பூசி போடுவதை விரிவுபடுத்துவதுதான் அரசின் திட்டம்.
பொதுவாக சிம்பான்ஸிக்களை தாக்கும் சளி போன்ற வைரஸை எதிர்கொள்ள, மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டிருக்கிறது.
வைரஸை மனித உயிரணுக்களுடன் இணைக்கப் பயன்படும் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவை செல்களுடன் சிறப்பாக ஒட்டிக்கொள்ளவும் மேலும் திறம்பட செயல்படவும் வகைசெய்கின்றன.
'ஸ்பைக் புரதம்' என்ற முள்முடி போன்ற பாகம்தான் அந்த வைரஸ் மனித உடலின் உயிரணுக்களுக்குள் ஊடுருவ பயன்படுத்தும் ஒரு சாதனம். கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் இந்த ஸ்பைக் புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனால், இந்த தடுப்பூசியில் உள்ள மரபணு மாற்றப்பட்ட வைரஸ் பார்ப்பதற்கு கொரோனா வைரஸ் போலவே தோற்றம் அளிக்கும்.
இப்படி கொரோனா போலவே மாறுவேடம் பூண்ட மரபணு மாற்ற வைரஸ் மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இதனை அடையாளம் காணவும், அதனோடு போரிடவும் பயிற்சி எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் பிறகு உண்மையான கொரோனா வைரஸ் எப்போதாவது உடலுக்குள் நுழையும்போது, அதனை உடனடியாக அடையாளம் காணவும், எதிர்த்துப் போராடவும், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்துக்குப் போதிய பயிற்சி இருக்கும் என்பதால், கொரோனா வைரஸால் உடலில் தொற்றாக மாற முடியாது.
ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பு மருந்துகள் 95% பாதுகாப்பு அளிக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்ட் மருந்து 70% மட்டுமே பாதுகாப்பு அளிப்பது ஏமாற்றமளிக்கிறது.
இருப்பினும் ஒரு மாதம் முன்புவரை 50% மேல் சாதகமாக முடிவுகள் வந்தாலே அது வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
இந்த மருந்தை, குளிரூட்டி சாதன வெப்பநிலையில் கூட வைக்கலாம். அதாவது இந்த மருந்தை, உலகின் எந்த பகுதிக்கும் விநியோகிக்கலாம். ஃபைசர், பயோஎன்டெக் மற்றும் மாடர்னா மருந்துகள் போல அதிக குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து விரைவில் உலக அளவில் கிடைக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி தருவதாகவும் அது 90 சதவீத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் இந்தியாவில் உள்ள சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து இந்தியாவின் புணேவில் சீரம் நிறுவனம் கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.