கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கிலிருந்து மளிகை, பால், செய்தித்தாள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 25ஆம் தேதி செய்தித்தாள்களின் விநியோகம் சிறிய அளவில் தடைபட்டது.
ஆனால், மார்ச் 26ஆம் தேதி முதல் பெரும்பாலான வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டது. மிகச் சில இடங்களில் நடைபாதைகளில் வைத்து செய்தித்தாள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மார்ச் 25ஆம் தேதியன்று செய்தித்தாள்களை இருசக்கர வாகனங்களில் கொண்டுசெல்லும் ஒருவரைக் காவல்துறையினர் தாக்கிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. இம்மாதிரியான சூழலில் பேப்பர்களை வீடுவீடாக விநியோகம் செய்யும் இளைஞர்கள் வேலைக்குவர மறுப்பதாக சென்னையில் செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் வேலாயுதம் என்பவர் தெரிவித்தார்.
செய்தித் தாள் நிறுவனத்திலிருந்து தங்களை செய்தித்தாள்கள் வந்தடைந்துவிட்டாலும், அவற்றை வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்க்க முடியாத நிலை இருக்கிறது என்கிறார் அவர்.
இரு வாரங்களுக்கு முன்பாக கொரோனா நோய் இந்தியாவில் வேகமாகப் பரவ ஆரம்பித்ததிலிருந்து, செய்தித்தாள்களுக்கு வரும் விளம்பரம் வெகுவாகக் குறைந்தது. இதனால், தி ஹிந்து போன்ற முன்னணி செய்தித்தாள்களே இணைப்பிதழ்களை சில நாட்களுக்கு நிறுத்திவிட்டன. பக்கங்களின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அச்சடிக்கும் செய்தித்தாள்களை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதும் இயலாமல் போயிருப்பது இன்னும் பெரிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.
"ஒரு செய்தித்தாளை உருவாக்குவதில் பல மட்டங்களில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். செய்திகளைச் சேகரிப்பதிலிருந்து, அச்சடித்து விநியோகிப்பதுவரை பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் தேவை. செய்தியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றினால் போதுமெனச் சொல்லிவிட்டோம். ஆனால், செய்திகளை எடிட் செய்ய அலுவலகத்தில் ஆட்கள் தேவை. அச்சடிக்க, கடைகளுக்கு கொண்டு சேர்க்க ஆட்கள் தேவை.
வீடுகளுக்கு விநியோகிக்க ஆட்கள் தேவை. ஆனால், அவர்கள் வந்து சேர்வதில் பிரச்சனை இருக்கிறது" என்கிறார் தி ஹிந்து குழுமத்தின் தலைவரான என். ராம்.
தில்லி போன்ற நகரங்களில் செய்தித்தாள் விநியோகம் கிட்டத்தட்ட முழுமையாக தடைபட்டிருக்கிறது. மும்பை நகரில் மார்ச் 23ஆம் தேதியிலிருந்தே செய்தித்தாள்களை அடித்து, வநியோகிப்பது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மீண்டும் செய்தித்தாள்களை அடிக்கலாம் என முடிவுசெய்யப்பட்டிருப்பதாக மஹாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாயுடன் நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தித்தாள் பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.
"பல ஊர்களில் டெலிவரி செய்யும் பையன்கள் பயப்படுகிறார்கள். போக்குவரத்து, வாசகர்களுக்கு செய்தித்தாளை கொண்டு சேர்ப்பது ஆகியவற்றில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறையையும் உள்துறையையும் தொடர்புகொண்டு பேசியிருக்கிறோம். ஆனால், சாலையில் இருக்கும் காவலர்தான் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்கக்கூடாது என்பதை முடிவுசெய்கிறார்" என்கிறார் என். ராம்.
கடந்த சில மாதங்களாகவே பொருளாதார மந்தத்தினால், செய்தித்தாள்களுக்கு வரும் விளம்பரங்கள் மிகவும் குறைந்திருந்தன. இந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்குப் பிறகு, சுத்தமாக விளம்பரமே இல்லாமல் போயிருப்பது செய்தித்தாள்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்கிறார்கள் செய்தித்தாள் உரிமையாளர்கள். இந்த ஊரடங்கின் காரணமாக ஏற்கனவே விளம்பரம் அளித்தவர்கள், விநியோகிஸ்தர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பதிலும் பிரச்னை உருவாகியிருக்கிறது.