முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது அதிருப்தியிலிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தினகரன் அணியினர் வலை விரித்து வருகின்றனர் என்ற செய்தி வெளியே கசிந்துள்ளது.
துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என முன்பே செய்திகள் வெளியானது.
அவரை ஒரு அமைச்சர் லெவலுக்கு மட்டுமே எடப்பாடி மதிக்கிறார் எனவும், துணை முதல்வர் என்ற சிறப்பு கௌரவம் எதுவும் அவருக்கு அளிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. அதேபோல், தலைமை செயலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் அவரை எடப்பாடி அழைப்பதில்லை. அவர் துறையில் உள்ள ஃபைல்கள் கூட எடப்பாடி சொன்னால் மட்டுமே நகர்கின்றன. அந்த அளவுக்கு பன்னீருக்கு செக் வைத்துள்ளார் எடப்பாடி.
இதனால் அதிருப்தியடைந்த ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோரோடு சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் முறையிட்டார். ஆனால், தற்போது அதே நிலையே தொடர்கிறது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், சமீபத்தில் தினகரனுக்கும், ஓ.பி.எஸ்-ற்கும் நெருக்கமான ஒருவர் சமீபத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் நீண்ட நேரம் தொலைப்பேசியில் பேசியுள்ளார். எங்கள் தலைவருக்கு (தினகரன்) உங்கள் மீது எந்த கோபமும் இல்லை. நீங்கள் நேரிடையாக எதிர்த்து நின்றீர்கள். பழனிச்சாமியோ முதுகில் குத்தி விட்டார் என தலைவர் அடிக்கடி சொல்வதுண்டு. அம்மா இறந்தவுடன் உங்களை முதல்வராக நியமிக்க வேண்டும் என சின்னம்மாவிடம் கூறியதே தலைவர்தான். அவர் எப்போதும் உங்களை விரோதியாக பார்த்தது கிடையாது.
இப்பவவும் எங்களுக்கு எதிரி எடப்பாடிதான். நீங்கள் முதல்வராக அமர்ந்தால் எங்களுக்கும் சந்தோஷமே. அதுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தலைவர் தயாராகவே இருக்கிறார். இதுபற்றி யோசியுங்கள்” எனக் கூறினாராம்.
அதிருப்தியிலிருக்கும் ஓ.பி.எஸ் அதிரடி முடிவெடுத்தால் தமிழக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது நிச்சயம்.