முதலில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.. அடுத்து முதல்வர்.. - தினகரன் கனவு பலிக்குமா?

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (14:07 IST)
ஆர்.கே. நகர் தொகுதியில் களம் இறங்க முடிவெடுத்துள்ள தினகரன், அதற்கடுத்து முதல்வர் பகுதிக்கு குறி வைப்பார் எனத் தெரிகிறது.


 

 
விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், அதிமுக சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்ட உடன், அந்த தொகுதியின் வேட்பாளர் யார் எனத் தேர்ந்தெடுக்க ஆட்சிமன்றக் கூழு ஒன்றை உருவாக்கினார் தினகரன். செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் அடங்கிய அந்த குழுவிற்கு சசிகலாவை தலைவராக்கினார். எனவே, வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
அதேநேரம், சசிகலா ஆணையிட்டால் நான் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. மற்ற எவரும் விருப்ப மனு கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர் இப்படி கூறினாரா என அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பினர்.  
 
இந்நிலையில், மற்ற தொகுதியில் யாரேனும் ஒரு எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைத்து, அங்கு போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆவதை விட, ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் ஜெ.விற்கு பின்னர் நீங்கள்தான் என்ற இமேஜை மக்கள் மத்தியில் உருவாக்கலாம் என சில அதிமுக அமைச்சர்கள் கூறிய ஆலோசனை தினகரனுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
 
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆன பின்பு அவரின் கவனம் கோட்டையை நோக்கி திரும்பும் எனத் தெரிகிறது. எனவே, எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவி எவ்வளவு நாளுக்கு நீடிக்கும் எனத் தெரியவில்லை என அதிமுக வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள். 
 
ஜெ.வின் மரணத்திற்கு பின் நடைபெறும் தேர்தல் என்பதால் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, அங்கு எப்படியேனும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதியில் தினகரன் காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. எனவே, ஜெ.வின் மர்ம மரணத்தால் கோபத்தில் இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை குளிர்விக்கும் திட்டங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. 

ஏற்கனவே தீபா மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் அதிமுக ஓட்டுகளை பிரிப்பார்கள் எனவும், திமுக அதை பயன்படுத்தி வெற்றி பெற வியூகம் வகுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். 
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என நாளை ஆட்சி மன்ற குழு அறிவிக்க உள்ளது. அதில், தினகரன் அறிவிக்கப்பட்டால், அவரின் முதல்வர் கனவு பலிக்குமா என்பதற்கான விடை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கையில் இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்