சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து சென்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறிய்ருப்பதாவது:
ஆளுநர் பேருரை என்பது ஆட்சியாளர்கள் இனி செய்யப் போகின்ற காரியங்களையும், கடைப்பிடிக்க இருக்கின்ற கொள்கைகளின் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆனால். இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டங்களே இல்லாத உரையாக, உண்மைகளை மறைக்கின்ற உரையாக ஆளுநர் உரை அமைந்தள்ளது.
ஆளுநர் ஆற்றிய உரை என்று புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக அதை வாசிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார். ஒருவேனை, ஆளுநர் அவர்கள் இந்த உரையை வாசித்து இருந்தால், அந்த உரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுத்தது போல் ஆகிவிடும். அந்த அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது" என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்பதும்; அன்றாடம் பல கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என்பதும்; திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு, வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்த வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும்; மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்படுவதும், அண்ணா பல்கலைக்கழக மாலாவி அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நாடறிந்த உண்மை.
இவற்றையெல்லாம் மறைத்து, சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆளுநர் உரையின் 58-வது பத்தியில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நிறைவேற்றியுள்ளதுடன், குறுகிய காலத்தில் செய்த இச்சாதனைகள் குறித்தும், ஒருபித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வு, சத்துணவுப் பணியாளர்களுக்கான கால முறை ஊதியம். மாதம் ஒரு முறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, ரேஷன் கடைகளில் கூடுதலாக உ தவாக உகு உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதலாக ஒரு கிலோ அரிசி, 100 ரூபாய் எரிவாயு மானியம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான வஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.
இதற்கு முற்றிலும் முரணாக ஆளுநர் உரையில் தெரிவிப்பது என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல், ஆளுநர் உரையின் பத்தி 4-ல், மகளிர் உரிமைத் தொகை 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2.20 கோடி குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கியிருப்பது ஒருதலைபட்சமானது. இது தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு மின் கட்டண உயர்வு வாகன வரி உயர்வு பத்திரப் பதிவு உயர்வு விலைவாசி உயர்வு என பல்வேறு காரணிகள் மூலம் மாதம் 5,000 ரூபாய் வரை கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டிருக்கிறது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1,000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 7,713 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை 2,578 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்டதில் 33 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் எல்லாத் திட்டங்களும் இந்த நிலையில் தான் உள்ளன. நீட் தேர்வு ரத்து என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இன்று அதுபற்றி வாய் திறக்காதது ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.