அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு. ஆம், தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 மொழிகளில், 7 மொழிகள் தெற்கு ஆசியாவை சேர்ந்தவை. அமெரிக்காவில் கடந்த ஆண்டு வரை தெலுங்கு பேசும் மக்கள் தொகை 4 லட்சம். இது 2010 ஆம் ஆண்டை விட இருமடங்கு அதிகம்.
ஹைதராபாத் நகரத்திற்கும், அமெரிக்க பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது காரணமாக தெலுங்கு இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
முற்காலங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு முக்கியமாக இடமான ஹைதராபாத்தில் இருந்து மாணவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்.
காலப் போக்கில் அமெரிக்காவில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்கள், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்த மக்களை வேலைக்கு எடுக்க ஆரம்பித்தனர்.
வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் H1B விசா பல இந்தியர்களுக்கு உதவியது. முதல் இந்திய - அமெரிக்க குடிமகளாக மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நதெல்லா ஆகியோர் தெலுங்கு மொழி பேசக்கூடிய நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.